படிக்க வை.. எழுத வை..
கடந்த
மாத இதழில் நான் மாற்றுப்பணிக்காக சென்ற பள்ளியில் ஏற்பட்ட அனுபவத்தைப்
புதிய ஆசிரியன் இதழில் பகிர்ந்திருந்தேன்.. அதன் தொடர்ச்சி தான் இதுவும்..
அந்தப்
பள்ளியில் வெறும் ஆறு குழந்தைகள் தான்.. வகுப்பு துவங்கும் முன்பு மிகவும்
தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. பள்ளி திறந்த சில வாரங்களுக்கு
அவர்களுடைய உரையாடலில் சட்டமன்றத் தேர்தல் செய்திகள் நிரம்பியிருந்தன..
ஜெயலலிதா எங்க அப்பத்தா சார்.. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எங்க தாத்தா
சார் என்பான் கோகுல்.. தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் குறித்து சிரித்துச்
சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. வாக்குச்சாவடிக்காக ஒட்டியிருந்த
போஸ்டர்களைக் கிழித்தேன்.. சார் சார்.. ரெட்டலையக் கிழிச்சுடாதீங்க
என்பான்.. கல்வி வளர்ச்சி நாளில் காமராசர் தான் மதிய உணவுத் திட்டத்தைக்
கொண்டு வந்தவருன்னு சொல்லிமுடிக்கும் முன்பே சார் அதை எங்கப்பத்தா தான்
அஞ்சு முட்டை கொடுக்கணும்னு மாத்துணாங்க என்பான்.. கலைஞரைக் கண்டபடி
நக்கலடிப்பான்..
பத்துக்கும்
கீழே குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததால் இப்பள்ளியில் பணிபுரிந்து
கொண்டிருந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு
விட்டனர். அருகிலுள்ள இன்னொரு பள்ளியிலிருந்து தான் இவர்களுக்கு உணவு
தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்.. உணவு கொண்டுவரும் சகோதரியிடம் ஒரு நாள்
கோகுல் கேட்டான்.. என்னங்க்கா.. காலையிலும் சாப்பாடு போடுவேன்னு
எங்கப்பத்தா ஜெயலலிதா சொல்லிருக்காங்களாம்.. ஆனா நீங்க கொண்டுவாரதே
இல்லையே.. என்னா.. ஆட்டையப் போட்டுட்டீங்களா? என்றான்.. அவங்களும் பயந்து
போயி இல்லப்பா கோகுல் ஊருக்குள்ள அக்காவப் பத்தி அப்படியொரு புரளிய
கிளப்பிவிட்டுராதப்பா.. உங்கப்பத்தா சொன்னாங்க.. இன்னும் அதுக்கு பணம்
ஒதுக்கலயாம்.. ஒதுக்குனதும் காலை சாப்பாடும் கொண்டு வர்றேன்னாங்க…
(ஜெயலலிதா இறந்த போது எனக்கு கோகிலாபுரம் கோகுல் தான் நினைவில் வந்தான்..
அப்பத்தாவ இழந்து பாவம் என்ன செய்கிறானோ என்று..)
தென்மேற்கு
பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல்.. கருத்தம்மா திரைப்படப்
பாடல் பிரபலம்.. ஜூன், ஜூலை மாதங்களில் காற்று சில்லென்று இருக்கும்..
ஒருநாள் கோகுல் கேட்டான்.. சார் இந்த வெயில் மண்டையப் பொழக்கும் போதெல்லாம்
ஒரு காத்தும் வீசாது சார்.. எல்லாரும் சட்டையக் கழத்திப் போட்டுட்டு
ரோட்டுல படுத்துக் கெடப்போம்.. இப்ப வெயில் ரொம்ப இல்லை.. ஆனால் காத்து
அடிச்சுக்கிட்டே இருக்கு சார்.. கொஞ்சம் கூட இந்தக் காத்துக்கு கூறுவாறு
இல்ல சார்” என்றான்..
நான்
அன்று வீட்டுக்கு வந்ததும் இந்த தென்மேற்கு பருவக்காற்று குறித்து
பாடப்புத்தகங்களில் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று எட்டாம் வகுப்பு
வரை எல்லா அறிவியல், சமூகவியல் புத்தகங்களிலும் தேடிப்பார்த்தேன்..
எங்குமில்லை.. தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது, நீரின் மூலம் பரவும்
நோய்கள் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்தெல்லாம் தண்ணியில்லாமல்
கிடக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வருகிறது.. தேனி மாவட்ட விவசாயம் எதை
நம்பி இருக்கிறது.. எந்தெந்த பயிர்கள், எந்தெந்த மாதங்களில்
பயிரிடப்படுகின்றன.. அதற்கும் இந்த தென்மேற்குப் பருவக்காற்றுக்கும் என்ன
சம்பந்தம் உண்டு? பின்னர் தொடங்கும் வடகிழக்குப் பருவக்காற்று எப்படி
உருவாகிறது? அது என்ன தாக்கத்தை உண்டுபண்ணுகிறது? விவசாயத்திற்கு எப்படி
பயன்படுகிறது? டிசம்பர் மாதம்னாலே சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர
மாவட்டங்கள் அலறுகின்றனவே.. அது என்ன விசயம்? இப்படி இவனுடைய வாழ்க்கையோடு
நேரடித் தொடர்புகளை விட்டுவிட்டு எடுத்த உடனேயே சூரியக் குடும்பம், அண்டம்,
பேரண்டம் என்று கத்திக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்? என்றெல்லாம்
நமக்குச் சிந்திக்கத் தோன்றுகிறது.. வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும்
சம்பந்தமில்லாததைப் படித்தால் தான் தரமான கல்வின்னு எந்தக் கல்வியாளர்
சொல்லியிருக்கிறார்..
மற்றொரு
நாள் சுவாதி கொலை வழக்கு குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இராம்குமார் சின்னப்பையன் மாதிரி இருக்காண்டா.. அருவாளப் பாத்தியா.. வாழை
மரம் வெட்டுற அருவாளாம்டா.. எதுக்குடா முகத்த துணியப் போட்டு மூடிக்
கூட்டிட்டுப் போறாங்க.. ஏண்டா அனீசு.. இந்த இரெண்டு மூணு நாளா
டிவிக்காரன்ங்க இராம்குமாரப் பத்தியே ஒரு செய்தியும் சொல்லலையில்ல.. (இந்த
வழக்கும் இப்போ முடிஞ்சு போச்சு…)
ஒருநாள்
உள்ளூர் கோயில் திருவிழா பற்றி.. வருத்தப் படாத வாலிபர் சங்கம் டிஸ்கஷன்
என இன்னும் பல நாட்டுநடப்புகளை அவர்களுக்குள்ளாக நன்றாகப் பேசிக்
கொள்கின்றனர்.. அதுவும் சுற்றி நடக்கும் குடும்பச் சண்டைகளை, தெருச்
சண்டைகளை.. தொலைக்காட்சி மூலம் பார்த்த செய்திகளை.. பார்த்து ரசித்த
படங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் நன்றாக, சுவாரசியம் குறையாமல் பகிர்ந்து
கொள்கின்றனர். விவாதிக்கின்றனர்..
எனக்குள்
தான் ஒரு அந்நியன் புகுந்து, ரசித்தது போதும்.. அவர்களைப் படிக்க வை..
படிக்கை வை.. யாராவது அதிகாரிகள் வந்துவிட்டால் பதில் சொல்ல வேண்டும்..
உன்னைத் தான் கேட்பார்கள்.. மெமோ கொடுப்பார்கள்.. அவர்களைப் படிக்க வை..
படிக்கை வை.. போர்டுல ஏதாச்சும் எழுதிப்போடு.. கைவலிக்க வலிக்க அவர்களை
எழுத வை.. என்று எச்சரித்துக் கொண்டே இருந்தான்..
அவர்கள்
யதார்த்தத்தைப் பேசுகிறார்கள்.. யதார்த்தம் குறித்து அழகாக
விவாதிக்கிறார்கள்.. பேசட்டுமே.. விவாதிக்கட்டுமே.. பார்ப்பதற்கும்
பேசுவதற்கும் மட்டுமல்ல யதார்த்தம்.. மாற்றுவதற்கும் தானடா என் செல்லங்களே
என்பதை மட்டும் அவர்களுக்கு நான் புரிய வைத்தால் போதாதா..
தேனி சுந்தர்
நன்றி: புதிய ஆசிரியன் - மார்ச்-2017 இதழ்

Comments
Post a Comment