ஜனநாயகமும் அறிவியல் பார்வையும் அடிநாதமாக இருக்க வேண்டும்..


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்ட மாற்றங்களுக்கான பணிகளை நினைக்கையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்க முயற்சிகளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை..  இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கீழிருந்து மேலாக ஒரு கல்விக்கொள்கை உருவாக்கப்படுகிறது என்ற பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்டாலும் பாஸ் மார்க் வாங்கும் அளவிற்குக் கூட கருத்துக் கேட்பு நடத்தவில்லை.. ஒரு நாட்டின் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் பெயரளவுக்குக் கூட கல்வியாளர்கள் பயன்படுத்தப்படவில்லை.. மாறாக தமிழகத்தில் புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலான கருத்துக் கேட்பு, அதற்கும் முன்னதாக இருந்தே கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை என நல்லவிதமாகவே பணிகளைத் துவங்கி இப்போது பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டு கருத்துக் கேட்பிற்கு விடப்பட்டுள்ளது.. அதிலும் கூட பல்வேறு இடங்களில் நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே வருவதைப் பார்க்கும் போது நெஞ்சம் மகிழ்கிறது..
நிலைப்பாட்டுத்தாள் மற்றும் பல்வேறு பாடங்களுக்கான வரைவுப்பாடத்திட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.. அவை அனைத்தும் தமிழில் வெளியிடப்பட வேண்டும்.. வெளியிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் ஒருமாதமேனும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வேண்டுகோளாக இருக்கிறது… இதனையும் பாடத்திட்ட உருவாக்கக் குழு கவனத்தில் கொண்டு செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது..
கலைத்திட்டம், பாடத்திட்டம் சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டாலும் கூட பாடநூலில் அவை எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதைப் பொறுத்தே நோக்கம் வெற்றி பெறும்.. மொழிப்பாடம் கற்பிக்கையில்  முதல்மொழியாக, இரண்டாம் மொழியாக கற்றலில் உள்ள வேறுபாடுகளையும் உணர்ந்து கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆங்கிலப் பாடத்திற்கு மிகவும் அவசியம்.. ஆங்கிலம் இங்கே இரண்டாம் மொழியாகத்தான் கற்பிக்கப்படுகிறது என்பதை மறந்து தான் மாணவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பாடங்கள் அமைக்கப்படுகின்றன. மிகவும் அறிமுகமான வாழ்க்கை நிகழ்வுகளை, சூழல்களை பாடமாக அமைக்கப்படுவதன் மூலமாக மட்டுமே ஆங்கிலத்தின் மீதான அச்சம் நீங்கும்.. எளிதில் உள்வாங்க முடியும்..
அதேபோல நமது அரசியலமைப்புச் சட்டமே வலியுறுத்துகின்ற அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமான பாடங்கள் இடம்பெற வேண்டும்.. டார்வின் கோட்பாட்டை மறுத்து குரங்குகளைக் கல்லால் அடித்த தேசங்களில் கூட அவர்களின் நம்பிக்கைகள் பாடங்களுக்கும் பள்ளிகளுக்கும் அப்பால் தான் இருக்கிறது.. ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும்  ஐந்தாம் வகுப்பு  ஆங்கிலப்பாடத்தில் நீர், காற்று, நிலம் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்று போதிக்கப்படுகிறது.. இதுபோன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும்..
நமக்கென்று ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து எழுபதாண்டுகள் ஆகப்போகின்றன.. இது ஒரு மக்களாட்சி நடைபெறும் நாடு.. ஆனாலும் பாடநூல்களில் மன்னர் கதைகள் ஒழிந்தபாடில்லை.. சொல்லாட்சித்திறனை மன்னர் கதைகள் மூலம் தான் வளர்க்க முடியும் என்பதில்லை.. மக்களாட்சியின், ஜனநாயகத்தின் மாண்புகளை உணர்த்தும் விதமாக பாடங்கள் அமைக்கப்பட வேண்டும்..
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதிகள், உரிமைகள், கடமைகளைக் கற்றுத்தருவதால் மட்டுமே ஜனநாயகப் பண்புகளை வளர்த்திட முடியாது.. பல்லாயிரக்கணக்கான சங்கங்கள், கட்சிகள் உள்ள நாடு இது.. ஒரு கருத்தை எப்படி முன்வைப்பது, ஆலோசிப்பது, மாற்றுக்கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது, பெரும்பான்மையின் முடிவை ஏற்றுக்கொள்வது என்பனவற்றை இன்றைய சூழலில் ஒரு மாணவன் தனது சொந்த அனுபவங்களால் மட்டுமே தான் கற்றுக்கொள்ள முடியும்.. இத்தகைய  பண்புகளை  ஊட்டுவதன் மூலம் தான் ஒரு மாணவன் தனது குடும்பத்தில், தெருவில், சமூகத்தில், நாட்டில் நல்ல குடிமகனாகப் பங்காற்ற முடியும்.. அதற்கேற்ற வகையிலான பாடங்கள் வைக்கப்படுவது அவசியம்..
அதேபோல இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒரே பாடநூல் என்பது அவசியமற்றது.. ஒவ்வொரு மாவட்டத்தின் சூழலும் இயற்கை அமைப்புகளும் வேறுவேறு, மக்களின் வாழ்க்கை முறைகள் வேறு. சென்னை, நீலகிரி, தேனி மாவட்ட மக்களின் வாழ்க்கை முறைகளை கொஞ்சம் யோசித்தால் நமக்குப் புலப்படும்.. எனவே தொடக்க வகுப்புகளில் அந்தந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை வளங்கள், ஆறுகள், அதன் பாசனப்பகுதிகள், விளைபொருட்கள், பருவமழை ஆகியவற்றின் தொடர்புகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சுற்றுச்சூழலின் அருமையை, அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை உணர்ந்து செயல்பட வைக்கமுடியும்.. உதாரணமாக முல்லைப்பெரியாறு, வைகையாற்றுப் பாசனப்பகுதிகள், உணவுப் பொருள் உற்பத்தி, அதைச் சார்ந்துள்ள மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை முறைகளை அவர்கள் பட்டும்படாமல் அறிந்திருக்கக் கூடும்.. அவை பாடநூலில் இடம்பெறும் போது புரிதல் மேம்படும். விளைவாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமிக்க குடிமக்களாகத் திகழ்வர்.. உள்ளூரைப் பற்றியே தெரியாது அண்டம், பேரண்டம் படித்து என்ன செய்வார்கள்? பாடம் என்பது அவர்களது வாழ்க்கையைப் படிப்பதாக இருக்க வேண்டும்.. அவர்கள் அறிந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து புதியனவற்றைக் கற்பதாக அமைய வேண்டும்..
அதே போல மொழிப்பாடங்களில் திறனை வலுவூட்டுவதற்கு மாநிலம் முழுக்க ஒரே துணைப்பாடங்கள் தேவையல்ல.. அந்தந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை, பண்பாட்டு கூறுகளை வெளிப்படுத்தும் விதமாக ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.. ஒவோரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள், தேசிய, மாநில விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களது படைப்புகளை வைப்பதன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.. படைப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.. படைப்பூக்கம் இயல்பாக வளரும்… எனவே எந்தப்பாடமாக இருந்தாலும் அவை உள்ளூர்மயமாக்கப்பட வேண்டும்.. அவற்றில் ஜனநாயக, அறிவியல் பார்வை என்பது அடிநாதமாக இருக்க வேண்டும்..
ஆரோக்கியமான கருத்துகளை உள்வாங்கி நாட்டிற்கு முன்மாதிரியான பாடத்திட்டத்தை, பாடநூல்களை பாடநூல் உருவாக்கக் குழு வழங்க வேண்டும் என்பதே நமது விருப்பம்..
 தேனி தே.சுந்தர்
இதழாசிரியர், புதுவிழுது : இருமாத கல்வி இதழ்
நன்றி: புதிய ஆசிரியன், ஜன.2017

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!