நமது கல்விமுறையில் அறிவியல் மனப்பாங்கிற்கும் அறிவியல் பார்வைக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும் - பேரா.பொ.இராஜமாணிக்கம்
முப்பது ஆண்டு கால அறிவியல் செயல்பாட்டாளர்,
ஏராளமான அறிவியல் பிரச்சாரக் கட்டுரைகள், நூல்கள் எழுதியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தற்போது அகில இந்திய மக்கள் அறிவியல்
கூட்டமைப்பில் துணைத்தலைவராகச் செயல்பட்டு வருகிறார். பி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட
பேரா.பொ.இராஜமாணிக்கம் அவர்களுடன் நமது புதுவிழுது இதழுக்கான நேர்காணல்..
தேனி
திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..
விழுது இதழின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னவிதமான பணிகளை
அங்கீகரித்து விருது வழங்கப்பட்டது..?
பாராட்டுதலுக்கு
நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவியல் பிரச்சாரப் பணிகளுக்காக அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து இயங்கி
வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் போது அறிவியல் இயக்கத்தில் சரியாக முப்பது வருடம் எனது பயணம் முடிந்திருந்தது. ஆம், அக்.1987ல்
அகில இந்திய அறிவியல் பயணம் வரும் பொழுது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக
அறிவியல் இயக்கத்தில் அறிமுகமானேன். அதிலிருந்து எனது பயணம் தொடர்கிறது. அறிவியல் இயக்கத்திற்காகப்
படிப்பது, எழுதுவது, பேசுவது மக்களைத் திரட்டுவது என எனது பணி இருந்தததைப் பாராட்டி
இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். விருது வாங்கிய போது இந்த விருதினை அறிவியல் இயக்கத்திற்கே
சமர்ப்பித்தேன். எனக்கு விருது வழங்கியது தற்போது தன்னலமற்று அறிவியல்
இயக்கத்தில் செயல்பட்டு வரும் பலரையும் ஊக்கப்படுத்தும் எனக் கருதுகிறேன்.
துவக்க
கால கலைப்பயணங்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.? அந்த
அனுபவங்கள் குறித்து..?
துவக்க கால கலைப்பயணங்களை
கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (KSSP) தான் நடத்திக் கொண்டிருந்தது. அதனை முதற்கட்டமாக
தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தினர். அதில் காடுகள் அழிப்பதை எதிர்த்தும் மனிதனின்
பரிணாமம் மற்றும் மக்களின் உழைப்பில் உருவான நாகரீகங்கள் குறித்தும் கலைப்பயணங்களில் நடித்துக் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது
நான் ஒரு பார்வையாளன். அதுவரையிலும் அறிவியலைப் பாடங்கள் மூலம் மட்டுமே சொல்லிக் கொடுத்திருந்த
நான் கலைவடிவங்களிலும் கற்றுக்கொடுக்க முடியும் என்பதைப் பார்த்து அதிசயித்துப் போனேன்.
அதன் பின்னர் இதை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசின் அறிவியல்
தொழில்நுட்ப மற்றும் தகவல் பரிமாற்றத் துறையின் உதவியுடன் ஐந்து கலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு
அவை இந்தியாவின் ஐந்து மூலைகளில் இருந்து புறப்பட்டன. இந்தப் பயணத்தில் அப்போதிருந்த
பிரச்சினைகளான குழந்தைகள் இறப்புக்குக் காரணமான காலரா , ரத்த தானம் , காடுகள் அழித்தல்
எதிர்ப்பு உள்ளிட்டவை கலைப்பயணத்தில் இடம் பெற்றன. அரசு உதவியுடன் நடைபெற்றதால் இந்த
அறிவியல் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் 500 மாவட்டங்களில் பிரச்சாரமும்
அறிவியல் இயக்கத்திற்கான மாவட்ட அளவில் தொடர்புகளை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றது.
அப்பயணத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். இன்றும் அது மறக்க முடியாத
அனுபவம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணசாமி
, பாண்டியன் ஹோட்டல் நிறுவனர் பி.சி.என்.சௌந்திரபாண்டியன் ஆகியோர் அதற்கு பக்க பலமாக இருந்தனர். அப்போது ஏற்பட்ட
தொடர்புகளால் தான் பாண்டியன் உணவகத்தின் இப்போதைய நிர்வாகியாக இருக்கக் கூடிய டாக்டர்
ஜி.வாசுதேவன் வரை அறிவியல் இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு தேவராஜ் என்பவர் தமுக்கம் மைதானத்தை ஒருவார காலம்
இலவசமாக அளித்து அறிவியல் கண்காட்சி நடத்த உதவினார். அக்காலத்தில் அது பிரமாண்ட செயலாகும்.
தினசரி பத்திரிக்கைகளில் இன்றைய நிகழ்ச்சிப் பகுதியில் அறிவியல் கண்காட்சி இடம்பெற்றதை
பெரும் சாதனையாகக் குறிப்பிட்டு, இந்நிகழ்வு அறிவியலுக்கான முக்கியத்துவத்தை வளர்க்கிறது
என்று பெருமைப்பட பேசி இது போன்று தொடர்ந்து செய்யுங்கள் எனப் பாராட்டி துணைவேந்தர் எங்களை உற்சாகப்படுத்தினார்.
இன்றும் அறிவியல் இயக்க நிகழ்ச்சி பத்திரிக்கைகளில் வரும் போதெல்லாம் மறைந்த துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணசாமி கண்முன்னே வருகிறார்..
போபால்
விஷவாயு தாக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.. அதன் தாக்கத்திலும் ஒரு கலைப்பயணம் நடந்தது, இல்லையா தோழர்? அதன் உள்ளடக்கம் குறித்து சொல்லுங்கள்..
ஆமாம்.. போபால்
விஷவாயு குறித்த கலைவடிவம் 86ல் நடைபெற்ற தென்மண்டலக் கலைப்பயணத்தில் இடம் பெற்றது.
இந்த அகில இந்தியப் பயணம் விஷ வாயு விபத்து நடந்த போபாலில் மாபெரும் பேரணியுடன் பொதுக்கூட்டத்துடன்
நிறைவு பெற்றது. நமது துளிர் இந்த மாநாட்டில் தான் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இப்பயணத்தில்
சென்னை மண்டலக் கலைப்பயணத்திற்கு பாண்டிச்சேரி ஜே.கே. அவர்கள் தலைமையேற்று வந்தார். மாநில அளவில் முனைவர் ஆத்ரேயா அவர்கள் வழிகாட்டுதலில்
நடைபெற்றது. மறைந்த சிக்ரி விஞ்ஞானி டாக்டர் ரகுபதி, பேரா.மாடசாமி , பேரா.அனந்தகிருஷ்ணன்
போன்றோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது..
1986 கலைப்பயணத்தில்
அறிவியலின் அரசியலும் அரசியலின் அறிவியலும் விளக்கப்பட்டது. போபால் விஷ வாயுவின் அரசியல்,
உழைப்பாளர்களால் உருவாகிய தாஜ்மஹால் , பிரமிட் ஆகியனவற்றில் அரசர்களின் அரசியல் , உழைப்பாளர்களின்
அரசியல் பேசப்பட்டது. மனிதகுல பரிணாமம் உட்பட இடம்பெற்றது..
ஆனால் 1987 கலைப்பயணத்தில் அறிவியல் விழிப்புணர்வே மேலோங்கி இருந்தது. ரத்த தானம், வயிற்றுப்போக்கு, காடுகள் அழிப்பு எதிர்ப்பு
என்ற வகையில் விவசாயிகளின் துயரத்தை விளக்கும் கும்மியும் இருந்தது. இது அரசு உதவியுடன
நடத்தப்பட்டதால் அறிவியல் விழிப்புணர்வுக்கு அதிக அளவு முக்கியம் கொடுக்கப்பட்டது. அதன் உள்ளடக்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு
முக்கியம் பெற்றிருந்தது...
போபால்
விஷவாயு பிரச்சினை அறிவியல் இயக்கத்தின் ஆரம்ப கால செயல்பாடுகளில் ஒரு புதிய பரிமாணத்தை
, தாக்கத்தை
ஏற்படுத்தியதன் விளைவாகத்தான் அறைக்கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என்று இயங்கி வந்த
அமைப்பு மக்களை நோக்கி நகர ஆரம்பித்தது இல்லையா.?
ஆம்.... அந்தக் கலைப் பயணத்தின் தாக்கம் நமது மாநிலத்தில்
போபால் என்ற சிறு பிரச்சார நூல் வெளியிப்பட்டது. இந்த நூலை மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களிடம்
எடுத்துச் சென்று விளக்கிய போது பெரும்பான்மையோர் இதில் உள்ள அரசியலை வெளிப்படையாக
ஆதரிக்க முன்வரவில்லை. எங்களது வேலை அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுந்தான் என்றனர். எனக்கு
மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.
ஆனால் கேரளாவில் யூனியன் கார்பைடு கம்பனியின் எவரெடி பேட்டரியைப் புறக்கணித்து சாதனை
செய்தனர். எனவே அறிவியல் பிரச்சாரம் என்பதில்
அறிவியலின் அரசியல் இல்லாத பிரச்சாரம் பலன் தராது...
அதே நேரத்தில் அறைக் கூட்டங்களாகவும் கொள்கை ரீதியான
அறிவிப்புகளுமாய் விஞ்ஞானிகள், அறிவுஜீவிகளால் நடத்தப்பட்ட இயக்கம் 1987க்குப்பின்
கலைப்பயணம் நடைபெற்ற மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் ,மதுரை ,விருதுநகர்
, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. இங்கெல்லாம் கிளைகளற்ற சேப்டர்களாக
அமைப்புகள் துவங்கின . அதன் பின்னர் 1988 ல் டிசம்பர் மாதம் அறிவியல் மாதமென அறிவிக்கப்பட்டு
இரண்டு கலைக்குழுக்கள் புறப்பட்டன. ராமானுஜம்,
சி.வி.ராமன் என்ற இரண்டு கலைக் குழுக்கள் தமிழகத்தின் இரண்டு பகுதியாகப் பிரித்து பிரச்சாரம்
செய்தன. இக் குழுக்களின் பிரச்சாரத்திற்கு முன் மாவட்டங்களில் தயாரிப்பு இயக்கங்கள்
நடைபெற்றன. நான் எனது மாணவர்களை ஒரு கலைக்குழுவாக உருவாக்கி திருமங்கலம் ஷாஜகான் மூலம்
பயிற்சி அளித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் முன்பயணப் பிரச்சார இயக்கம்
நடத்தியது மறக்க முடியாததாகும். இது போன்று எல்லா மாவட்டங்களிலும் முன் தயாரிப்புகள்
நடந்தன. இப்பயணத்தையொட்டி இயற்கை அறிவியல் சமுதாயம் என்ற தலைப்பில் ஐந்து சிலைடு செட்டுகளுக்கு
திண்டுக்கல் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம்
மாவட்ட அளவில் ஆசிரியர்கள் திரட்டப்பட்டனர். இதன் மூலம்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் இயக்கக் குழுக்கள் உருவாகின. இறுதியாக
இரண்டு கலைக் குழுக்களும் மதுரையில் ஒன்று சேர்ந்தன.. முதல் அறிவியல் இயக்கப் பொது மாநாடும்
நடத்தப்பட்டது. அறிவியல் இயக்கம் மாநில முழுவதும் விரிந்து பரவியது.
முப்பதாண்டுகளுக்கு
முன்பு கலைப்பயணம்.. அறிவியல் பிரச்சாரம்..
பாராட்டிற்குரியது தான்.. ஆனால் இன்னும் கூட அந்த மக்களுக்கு உரிய நீதியும் நிவாரணமும்
கிடைக்கவில்லை தானே.? உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையே.? என்ன செய்திருக்கிறோம்.?
என்ன செய்ய வேண்டும்.?
உண்மை.. போபால்
மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இதில் தொடர்புடையது அமெரிக்க நாட்டின் யூனியன்
கார்பைடு கம்பெனி.. அவ்வளவு எளிதாக நீதி கிடைக்குமா..? அப்போதைய
காங்கிரஸ் அரசாங்கம் வாரன் ஆண்டர்சன் என்ற கம்பெனியின் பொறுப்பாளரை அமெரிக்காவுக்குத்
தப்பவிட்டிருந்தது. மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இது. மக்களைக் கொல்வதற்காக ரசாயன யுத்த
சோதனை என்று கூடக் கூறப்பட்டது. டெல்லி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பார்
தொடர்ந்து அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 2017 நவம்பரில் எங்கள் தேசம்
பிரச்சார இயக்கத்தின் தேசீயத் திருவிழா போபாலில்
அதை முன்னுறுத்தியே நடைபெற்றது. போபால் துயரத்தை எப்படி துடைப்பது என்பது நமது இயக்கத்தின்
முன் உள்ள சவால். இதில் சர்வதேச அரசியல் அடங்கி உள்ளது...
இவ்வளவு
ஆண்டுகள் கடந்தும் கூட இந்நாட்டில் நியாயமும் நிவாரணமும் கிடைக்கவில்லை என்ற அச்சமும்
அவநம்பிக்கையும் தானே
மக்களின் போராட்டங்களாக நியூட்ரினோ , கூடங்குளம் பிரச்சனைகளில் வெளிப்படுகிறது.? அதை
முற்றிலும் நாம் புறக்கணித்து விட முடியாதே.?
மக்களின் அவநம்பிக்கையை
அரசியல் மாற்றங்களினால் தான் மாற்ற முடியும். அரசியல் மாற்றங்களின் மூலமே இதுபோன்ற
சர்வதேச சதிகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி தவறான வழியில்
மக்கள் திசை திருப்புதலை நியூட்ரினோ திட்டத்தில் பார்க்கலாம். கூடங்களம் அணு உலை திட்டம்
தயாரிக்கும்போது கூட்டணியில் இருந்த கட்சிகளே பின்னர் எதிர்க்க ஆரம்பித்தனர். மக்களிடம்
நிஜ அறிவியலும் நிஜ அரசியலும் பேச வேண்டும்.
போபாலில்
நடைபெற்ற எங்கள் தேசம் : எல்லோருக்குமான தேசம் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து சொல்லுங்கள்..
போபாலில்
1987க்குப் பின் நடைபெறும் மாபெரும் நிகழ்வு இது எனச் சொல்லலாம். யூனியன் கார்பைடின்
விஷவாயுக் கொலையை மக்கள் அறிவியல் இயக்கங்கள் அன்று அகில இந்திய அளவில் கொண்டு செல்வதற்கான
இயக்கம் அது. தற்போதைய இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை அறிவியல் பார்வையில் மக்கள்
பார்த்து ஜனநாயக முறையில் விமர்சிப்பதும் கருத்துக்கள்
கூறுவதும் அவசியமாக உள்ளது. ஏனெனில் இன்று நேர்மையான அறிவுக்கும் அறிவியலுக்கும் அறிஞர்களுக்கும்
ஆபத்து பெருகி உள்ளது. போலி அறிவியல், போலி வரலாறு, போலித் தத்துவங்கள் ஆகியனவற்றின் மூலம் சில இந்துத்வா
அமைப்புகள் மக்களை தவறான திசை வழி செலுத்துகின்றனர்.
தற்போதைய பிரதமர் பண்டைய இலக்கியப் புனைவுகளான
பிள்ளையாரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டவர் என்றும் பாண்டவர்கள் குளோனிங் முறையில் பிறந்தனர் என்றும் கர்ணன் டெஸ்ட் ட்யூப் பேபி என்றும் போலி அறிவியலை பாரம்பரிய அறிவியல் என்று
பெருமையாக
பேசுவது இந்திய நாட்டின் அறிவியலைக் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. பாரம்பரியம்,
பண்பாடு என்ற பெயரில் மக்கள் போதையூட்டப் படுகின்றனர்.
நமது அரசியல்
அமைப்புச்சட்டம் 51எ (எச்) அறிவியல் மனப்பான்னையை அரசும் தனி நபரும் வளர்க்க வேண்டும்
என்கிறது. இதற்கு எதிரான போக்கை மத்திய அரசும் சில மாநில அரசுகளும் கடைப்பிடித்து
வருகின்றன. இதை அறிவியல் ரீதியாக விமர்சனம் செய்பவர்கள் தாக்கப்படுகின்றனர்.
மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் கொண்டுவரவேண்டுமென்ற டாக்டர் தபோல்கர், மராட்டிய சிவாஜின்
உண்மை வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சென்ற கோவிந்த பன்சாரேல், லிங்காயத் என்பது இந்து
மதம் அல்ல என்று பிரச்சாரம் செய்த கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்வர்
போன்ற அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயகக் குரலையும் கருத்துரிமையையும் அடக்கும் செயலாகும். மேலும் பன்முகத்
தன்மை கொண்ட பண்பாடு காரணத்தினால் இந்தியாவில் பல்வேறு பண்பாடு பழக்க வழக்கங்கள் கொண்ட மக்களும்
ஒற்றுமையுடன் வாழும் வழி இருந்தது. இதற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. அறிவியல் ரீதியாக
பண்பாடு என்பது அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் கடைப்பிடிக்கும் வாழும் வகைகள்
ஆகும். இதை காப்பாற்ற வேண்டியது அறிவியல் ரீதியாகச் சரியானதாகும். இது
போன்று வளர்ச்சி என்பதும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையில் செல்கிறது.
இதுகாறும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி வந்த சமூக நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது.
எனவே பன்முகத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிவியல் அணுகுமுறையுடன் விளக்கி மக்கள் அறிவியல் இயக்கங்கள் கடந்த
வருடம் நவ.7 முதல் நடத்திய எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சார இயக்கத்தின்
தேசிய அளவிலான நிறைவு விழாதான் போபாலில் நவ.26,27,28 தேதிகளில் நடைபெற்றது. வெளிமாநிலங்களிலிருந்து
சுமார் 700 பிரதிநிதிகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கலை இலக்கிய
நிகழ்வுகள், பேரணி, பொதுக்கூட்டம் எனத்திட்டமிட்ட வகையில் மிகச்சிறப்பாக நடந்த இத்திருவிழாவில்
இந்தியாவின் தலைசிறந்த இலக்கியவாதிகள் வரலாற்றறிஞர்கள் விஞ்ஞானிகள் கலைஞர்கள் அறிவியல்
ஆர்வலர்கள் பங்கேற்றனர். இது அறிவியல் இயக்கங்களின் முக்கிய திருப்பு முனை நிகழ்வாக
அமைந்தது..
அதென்ன
போலி அறிவியல்.. போலி அறிவியல் பரப்புவதற்கு என்ன காரணம்.?
அறிவியல் பாதி
ஆன்மீகம் மற்றும் பண்பாடு பாதி... இதுவே போலி அறிவியல்(pseudoscience).. அறிவியலே சுத்தமாக இல்லாமல் அறிவியல் விளக்கம் கொடுப்பது
பொய் அறிவியல் (non science).
போலி அறிவியலுக்கு உதாரணம் சோதிடம். அதில் ஐந்து கிரகங்களும்
சூரியன் என்ற நட்சத்திரமும் சந்திரன் என்ற துணைக் கோளும் ராகு கேது என்ற வெட்டும் புள்ளிகளும்
சோதிடத்தில் உள்ளன.. இவை அனைத்தும் கிரகங்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும்.
இதில் அறிவியல் பாதி மட்டும் தான் உள்ளது. இதை
ஆன்மீக ரீதியாகப் பயன்படுத்தி தனி மனித வாழ்வில் விளைவுகளை உருவாக்கும் என்பது போலி
அறிவியல்.
அறிவியல் வளரும் போது போலி அறிவியலும் இணையாக வளரும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது அதையும் உள்வாங்கிக் கொண்டு பண்பாடு, கற்பனை புனைவுகளில்
அறிவியலை இணைத்து மார்தட்டிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறிவியல்
கண்டுபிடிப்பு வந்த பின்னர் பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரியில் உருவாக்கப்பட்டார் என
பிரதமர் உட்பட பலர் சிலாகிக்கின்றனர் இல்லையா?. இது தான் பொய் அறிவியல். இது போன்று
நிறைய எடுத்துக் காட்டுகளை நீஙகளே அறிந்து கொள்ளலாம்...
போலி அறிவியலை
ஆன்மீகம் பழைமைவாதக் கலாச்சாரத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்துகின்றனர்.
இது வியாபாரமாகவும் மக்களைச் சிந்திக்க விடாமல் அவரவர் நிலையிலேயே தக்க வைப்பதற்கும்
உழலுவதற்கும் சமூகத்தைப் பின்னோக்கித் தள்ளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தலைவிதி
கோட்பாடு, கடவுள் இருப்புக் கோட்பாடு ஆகியனவற்றிற்கு இது பெரிதும் உதவுகிறது. மார்கழி
மாதம் காலையில் பெண்கள் கோலம் போடுவது அவர்கள்
உடல் நலத்திற்கு ஓசோனைக் கொடுக்கிறது என்ற பொய் அறிவியலின் மூலம் பெண் அடிமைத்தனத்தை
நிலைநிறுத்த உதவுகிறது. பண்டைய சமுதாயத்தில் ஆணாதிக்க கட்டமைப்புகள் இதை நிலை நிறுத்தின.
தற்போது அது தகரும் போது பொய் அறிவியலால் நியாப்படுத்துகின்றனர்.
நம்
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. அதில் அறிவியல் இருக்கிறது என பல நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள் குறித்து தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே இருக்கின்றனவே..?
இது அருமையான
கேள்வி. இக்காலக்கட்டத்திறகுப் பொருத்தமான கேள்வி. நாமும் முன்னோர்களின் அறிவை குறைத்து
மதிப்பிடவில்லை. அந்தக் காலத்திற்குட்பட்டு அவர்களால் இயன்றதைக்
கண்டுபிடித்துள்ளனர். அதிலிருந்து தான் அது நவீன அறிவியலாக வளர்ந்து மேம்பட்டு இருக்கிறது.
அவர்களின் கண்டுபிடிப்புகளில் உள்ள தவறுகளைக் களைந்து நவீன அறிவியலின் கோட்பாடுகளின்
அடிப்படையில் மேம்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக அந்தக் காலத்திலேயே ஓன்பது
கிரகங்கள் வைதது சோதிடம் படைததுள்ளார்கள் அல்லவா என்று தற்போதைய ஒன்பது கோள்கள் கண்டுபிடித்ததை
ஒப்பிட்டுப் பேசுகின்றனர். உண்மையில் பூமியில் இருந்து கண்ணில் தெரிந்த
ஐநது கிரகங்களே அதில் உள்ளன. கிரகங்கள் அல்லாத சூரியன் சந்திரன் ராகு கேது உள்ளன என்று சொன்னாலும் இந்த பெருமையாளர்கள் ஏற்றுக்
கொள்வதில்லை. இப்பொழுது எட்டுக் கோள்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அவர்கள் என்ன பதில் சொல்லப்
போகிறார்கள்.
நமது முன்னோர்கள்
வாழ்தலின் பொருட்டு மிகவும் அடிப்படையான உற்று நோக்குதலும் தொடர்ந்து கவனித்தலும் என்ற அடிப்படையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் உருவாக்கி வந்துள்ளனர்.
தற்போதைய அறிவியல் முறையின் அடிப்படை அது. ஆனால் நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். துல்லியமான
அளவில் அறிவியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பல கோடிக்கணக்கான வானியல் அலகில் இரண்டு
கருந்துளைகள் மோதி ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளை பூமியில் கண்டறிந்துள்ளனர். அண்டத்தின் ஒலியைக்
கூடப் பதிவு செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளோம். உடனே நமது
முன்னோர்கள் அண்டத்தின் ஒலியைத்தான் ஓம் என்ற ஒலி என அழைத்தோம் என சொந்தம் கொண்டாடுவார்கள்...
மக்களுக்கான
அறிவியல்
எது.?
மக்களுக்கான
அறிவியல் என்பது மக்களை அறிவியலில் பங்கேற்பவராக மாற்ற வேண்டும். அன்றாட வாழ்க்கையில்
அறிவியல் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும். மக்களின் அறிவியல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த
வேண்டும். மக்களிடம் திட்டமிட்டு பரப்பப்படும் மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல்
வேண்டும்.
இன்றைய
நவீன அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு சமூகத்தில் அறிவியல் மனப்பான்மை எந்த
அளவுக்கு உயர்ந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
அறிலியல் தெழில்நுட்ப
வளர்ச்சி அறிவியல் விழிப்புணர்வையும் அறிவியல் அணுகுமுறையையும் வளர்த்துள்ளது. இதில்
சந்தேகமில்லை. அறிவியல் பார்வையைக் கூட கொஞ்சம் உருவாக்கி உள்ளது. ஆனால் அறிவியல் மனப்பான்மையை
உருவாக்கவில்லை. எடுததுக்காட்டாக கரண்ட் மெஷின் மூலம் தைக்கிறார்கள்.. உடல்வலி குறையும்..
வேகமாகத் தைக்கலாம் என்ற அறிவியல் விழிப்புணர்வும் தைப்பதற்கு துணியை அளவு எடுத்துத்
தான் தைக்க முடியும் என்ற அறிவியல் பார்வையும் அந்த அளவுகளின் படி கோடிட்டு துணியை
வெட்டுவது என்கிற அறிவியல் அணுகுமுறையையும் டெய்லர் கடைப்பிடிக்கிறார். ஆனால் கடையைத்
திறந்தவுடன் கடவுள் படத்திற்கு மாலை போடுகிறார் . தீபாராதானை காட்டுகிறார். ஊது பத்தி
பொருத்தி கடவுளிடம் இன்னைக்கு பொழப்பு நல்லபடியா ஒடனுமப்பா என வேண்டுகிறார். இங்கு
தான் அறிவியல் அல்லாத பண்பாடு தலைதூக்குகிறது. இதற்குக் காரணம் வாழ்ககை என்பது அவரைப்
பொருத்த வரையில் ரிஸ்க்.. இதற்கு நம்மை மீறிய சக்தி உதவும் என நம்புகிறார். நிரந்தர
வருமானம் உறுதி ஆகாத போது அறிவியல் மனப்பான்மை சைடு வாங்குகிறது. சமூகம் ஷாக் அப்சர் ஆக மாறும் வரை பெரும்பான்மை
மக்களிடம் அறிவியல் மனப்பாங்கு வளர்வதற்குத் தாமதமாகும். நமது கல்விமுறையில் அறிவியல்
மனப்பாங்கிற்கும் அறிவியல் பார்வைக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும். கிரகணத்தால் எந்தத்
தீய விளைவுகளும் வருவதில்லை என அறிவியல் பாடத்தில் கட்டம் கட்டிப் போட வேண்டும்.
பிரச்சார
நூல்கள் என்றால்
பி.ஆர் தான்.. உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்..
நான் அறிவியல்
இயக்கத்திற்காக அன்றாட நடப்புகளை கண்ணுற்று வருகிறேன். அதனை இயக்கத்தில் முன்னிறுத்திப்
பேசுகிறேன்.. இதற்காக நான் படிக்கிறேன் எழுதுகிறேன் பேசுகிறேன். மக்களின் பிரச்சினைகளில்
அறிவியல் இயக்கம் தலையிடும் பொழுது அது மக்களிடம் மிகப் பெரிய அங்கீகாரம் பெறுகிறது.
பல கொள்கைகள் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படமாத்தூர் கோகோ கோலா எதிர்ப்புக்கு
அப்பிரச்சார நூல் பயன் அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பியக்கததிற்கான பிரச்சார
நூல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது..
உங்களது
ஆதம்பாலம் இராமர் பாலமா என்கிற நூல் மறுபதிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
இல்லையா.?
ஆமாம், அறிவியல்
இயக்கம் கையில் எடுக்க வேண்டும். ஏனென்றால் தற்போதைய மத்திய அரசு அதை ராமர்கட்டிய பாலமா?
அதன் காலம் என்ன? என ஆய்வுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. இநத அரசு
வலது சாரி அரசு. தவறான முடிவை அறிவிப்பதில் வல்லவர்கள்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தூண்களைப் பதித்து அதை ராமர் கோவில் என்றார்கள்.
ஹரப்பா நாகரீகத்தின் காளையை குதிரையாக மாற்றி ஆரிய நாகரீகமாக மாற்றியவர்கள். அதனால்
இந்நூலுக்கு மறுபதிப்பு அவசியம்தான்.. தற்போதைய அறிவியல்
ஆதாரங்களுடன் அந்நூலை மேம்படுத்தி பிரச்சாரமாகவும் எடுத்துச் செல்லும் கடமை நமக்கு
உண்டு...
மத்திய
பா.ஜ.க. அரசு கல்வியில் இந்துத்துவா சிந்தனைகளை எந்தெந்த வழிகளில் புகுத்துகிறது?
புதிய கல்விக்
கொள்கையை அதற்காகக் தான் தயாரிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாநில
அளவில் ஆட்சி செய்யும் பாஜகவினர் பாடப்புத்தகங்களில் இந்ததுத்வா கருத்துகளை திணித்துள்ளனர்.
ஆசிரியர் பயிற்சிகளிலும் பிற்போக்கான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க பயிற்றுவிக்கின்றனர்.
போலி அறிவியல், போலி வரலாறு போன்றவற்றை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்துள்ளனர். தீனாநாத்
பத்ரா என்பவர் காவிமயக் கல்விக்கான மூலதாரங்களை எழுதியுள்ளார்.
பிற மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை மூலம் மாற்றுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
தேசீய ஒருங்கிணைப்பு என்ற அடிப்படையில் இந்ததுத்வா கலாச்சாரத்தைப் பாடத் திட்டங்களில்
உயர்கல்வி வரை புகுத்த உள்ளனர். கல்விக் கொள்கைக்கு முன்னரேயே இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு
ஆகியவற்றை முயற்சிக்கின்றனர்.
கல்வியை
மத்தியத்துவப்படுத்துகிற முயற்சிகள் பற்றி..
கல்வியை மத்தியத்துவப்படுத்தும்
அவர்களது முயற்சியை புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றி வைக்கும். அதற்கு முன்னரே நீட்
தேர்வு, வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு என பலவற்றை மையப்படுத்த ஆரம்பித்து விட்டது.
யுஜிசி, எஐசிடிசி ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு முயற்சி செய்கிறது. உயர்கல்வி செல்வதற்கு
தேசீய நுழைவுத் தேர்வு முகமை தயாராகி வருகிறது. இப்படியாக மாநில உரிமைகள் கல்வியில்
பறிக்கப்பட்டு கல்வியை மத்தியத்துவப்படுத்தும் நாசகாரச் செயல்களை தற்போதைய மத்திய அரசு
தொடர்ந்து செய்து வருகிறது..
புதிய
கல்விக் கொள்கை தேவைதானா.? தேவையெனில் எப்படி இருக்க வேண்டும்.?
புதிய கல்விக்
கொள்கை நிச்சயம் தேவை. கல்விக் கொள்கை உருவாக்கி 30 வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் தேவைதான்.
ஆனால் தற்போதைய மத்திய அரசின் கல்விக் கொள்கை இதுவரை சுற்றுக்கு விடப்பட்டதைக் கண்ணுற்றதில்
அது நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்வதாகத்தான் உள்ளது. பழமைவாதத்தை முன்நிறுத்துகிறது.
சமூக நீதியை புறந்தள்ளுகிறது. டாக்டர் ராமானுஜம் அவர்கள் குறிப்பிட்டது
போல் எதிர் வரும் கல்விக் கொள்கை என்பது எல்லோருடைய அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதாக
இருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் ஆரம்பக் கல்வியில்
இருந்து உயர் கல்வி ஆராய்ச்சி வரை உள்ள குறைகளைக் களைந்து மேலும் முன்னேற்றுவதாக இருக்க
வேண்டும் . மேம்பட்டதாக இருக்க வேண்டும். தற்போதைய
பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து அதற்கான காரணங்களை அறிவியல் ரீதியாக
கல்வியாளர்களிடம் விவாதித்து ஆய்வுகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட
வேண்டும்.. கோத்தாரி கமிஷனில் கூறப்பட்ட நிதி ஒதுக்கீடு உட்பட பல பரிந்துரைகள் இன்னும்
கூட அமுல்படுத்தப்படவில்லை. நமது அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை,
சமூக நீதி உள்ளிட்ட விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில்
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்திற்கான குரல்கள் எந்த அளவுக்கு உள்ளன..
எந்த முயற்சியும்
எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இதை முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக
மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் மூடநம்பிக்கைகளைக் கள அளவில்
கணக்கெடுத்து, பட்டியலிட்டு இதனால் பாதிக்கப்பட்டோர்
குறித்த தகவலைச் சேகரித்து, ஆங்காங்கு உள்ள பிற முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து இது
குறித்து விவாதித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இயக்கங்கள் நடத்த வேண்டும்...
அறிவியல்
தமிழ் வளர போதுமான கவனம் செலுத்தப்படுகிறதா.? அதில் அறிவியல் இயக்கத்தின் பங்களிப்பு
என்னவாக இருக்கிறது.?
இது ஒரு முக்கியமான
கேள்வியும் பகுதியும் ஆகும். போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் வழிக்
கல்வியை முற்றிலும் ஒழித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். தமிழ்மொழிக் கல்வியே இல்லையென்றால்
அறிவியல் தமிழ் எப்படி வளரும். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் கல்லூரி வரை தமிழ்வழிக்
கல்விக்கு முயற்சி செய்தது. பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பெயரளவில் பொறியியல்
கல்லூரியில் தமிழ்வழி வைத்துள்ளனர். யாரும் சேருவது கூடக் கிடையாது. பல்வேறு நாடுகளில்
தாய்மொழியில் அனைத்து மட்டங்களிலும் கற்பிக்கப்படுகிறது..
தாய்மொழியில்
அறிவியல் பரப்புவது நமது அடிப்படை நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் அறிவியல் தமிழுக்கு
நமது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்... அறிவியல் தமிழுக்கு சமூகத்தில் அழுத்தம்
கொடுக்கப்பட வேண்டும். அறிவியல் தமிழ் சார் படைப்புகள் துளிர், விழுது, விஞ்ஞானச் சிறகு
போன்ற நமது இதழ்களில் லெளிவரவேண்டும். நம்மைப் போல பிற ஆர்வமுள்ள குழக்களை இணைத்து
இயக்கங்கள் நடத்த வேண்டும். ஜெர்மனிக்குச் செல்பவர்
ஜெர்மன் மொழி படிக்காமல் செல்வதில்லை. நமது தாய்மொழிக்கு இந்த முக்கியத்துவத்தை எப்போது
அளிக்கப் போகிறோம். ஹார்வேர்ட் பல்கலையில் தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பவர்கள் தமிழ்நாட்டின
அறிவியல் தமிழ் மீது ஆர்வம் காட்டாதது பெரும் முரண்...
வளர்ச்சி
திட்டங்களில் உங்களது பார்வை..
தற்போதைய வளர்ச்சித்
திட்டம் பெரும் வளர்ச்சித் திட்டங்களாக வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலம், பெட்ரோகெமிக்கல்
மண்டலம், பொருளாதார தாழ்வாரம் என்ற எகானாமிக் காரிடார், சுமார்ட் சிட்டி ... இவை அனைத்தும்
கார்ப்பரேட்டுகளின் கைகளின் கொடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகும். இது இயற்கை
வளங்களைச் சூறையாடி பெரும்பான்மையான மக்களை நவீன
வளர்ச்சியின் அகதிகளாக மாற்றிவிடும். இவ் வளர்ச்சிக் கொள்கையை மாற்றி பெரும்பான்மை
மக்கள் பயன்பெரும் மாற்று வளர்ச்சித் திட்டங்களை நாம் அறிவிக்க
வேண்டும்
அறிவொளியின்
வெள்ளிவிழா.. அறிவொளியில்
உங்களது பங்களிப்பு என்ன.?
அதில் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும்.?
அறிவொளி இயக்கத்தை
துவக்க கால மாவட்டங்களில் திட்டமாகத் தயாரித்து,
குறிப்பாக சிவகங்கை , விருதுநகர் மாவட்டத்திற்கு தயாரிப்பதில்
முக்கிய பங்கு ஆற்றினேன். விருதுநகர் மாவட்டத்தில் நாளைக்குள் திட்டம் தயாரிக்க வேண்டும்
என்கிற நெருக்கடி. இதனால் கல்லூரி முடிந்ததும் வீட்டுக்குக் கூட செல்லாமல் அப்படியே
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். அடுத்த நாள் இரவு தான் ஊர் திரும்பினேன். அப்பொழுது
டெலிபோன் வசதி கூடக் கிடையாது. வீட்டில் பதட்டத்துடன் இருந்தனர். அறிவொளி இயக்கத்தில்
முதல் மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மதுரையில் மாவட்ட ஆட்சியர்
ஆர்வம் காட்டாததால் மதுரை இரண்டாம் கட்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக நான்
மதுரையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டேன். திமுக அரசு அறிவொளிக்கு சாதகமாக இல்லை.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் கவர்னர்
ஆட்சி வந்தது. அவரின் ஆலோசகர்களில் ஒருவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் . டாக்டர் பரமேஸ்வரன்
அதைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் விருதுநகர் ஆட்சியரும் டெல்லி செல்ல அனுமதி பெறப்பட்டது. சிவகங்கை மாவட்ட
ஆட்சியர் கிளம்பி விட்டார். விருதுநகர் ஆட்சியர் புறப்பட வாய்ப்பில்லாததால் டாக்டர்
ஆத்ரேயா செல்லலாம் என அனுமதி பெற்று பங்கு பெற்றனர். அறிவொளி ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட
இது போன்ற நகர்வுகள் அறிவியல் இயக்க பொறுப்பாளர்களை
பதைபதைப்புடனும் எதிர்பார்ப்புடனும் நாற்காலியின் நுனியில் உட்கார வைத்திருந்தது. இந்த
பல்வேறு நகர்வுகள் மறக்க முடியாத அனுபவம். இந்நிகழ்வுகளில் பேரா.மாடசாமி உள்ளிட்டவர்களுடன் நானும் ஒருவனாய் இருந்து தமிழகத்தில்
அறிவொளி என்ற திருப்பு முனையை உருவாக்கினோம். மிகவும் விறுவிறுப்பான நிலையில் கொண்டு
வந்த அறிவொளியின் துவக்கமே மறக்க முடியாததாகும்.
அறிவொளியின்
வெள்ளிவிழா நல்ல முயற்சி. வேலூர் மாவட்டத்தின் முன்னெடுப்பு நன்றாக இருந்தது. புதுச்சேரி
முயற்சியும் பாராட்டுக்குரியது. பிற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவில் இல்லையென நினைக்கிறேன்.
ஆனால் நாம் விரிவாகக் கொண்டாட வேண்டியது அறிவொளி வெள்ளிவிழா என்பது எனது கருத்து. அந்த
வரலாற்றுப் பெருமையை நாம் தான் உருவாக்கினோம்.
தமிழக
அரசின் புதிய பாடத் திட்ட உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளீர்கள்.. எப்படி தயாராகி
வருகிறது.?
புதிய பாடத்திட்டம்
உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதற்கும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு
வாய்ப்புக் கொடுத்ததற்கும் வகுப்பெடுக்கும் ஆசிரியரில் இருந்து கல்வியாளர்கள், பேராசிரியர்கள்,
விஞ்ஞானிகள் வரை பாடம் எழுதுவதில் ஈடுபடுத்தியதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் அதன் உள்ளடக்கம் நீட் தேர்வு
போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் மாணவர்களைத் தயார் பண்ணுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
வரைவுப் பாடத்திட்டம் பொது வெளியில் விவாதத்திற்கு விடப்பட்டது. ஆனாலும் போதிய கால
அவகாசம் அளித்திருக்க வேண்டும்..
ஆசிரியர்களுக்கு
வழிகாட்டி நூலும் பயிற்சியும் பரிந்துரைத்துள்ளனர்.. இதுவும் வரவேற்கத் தகுந்த ஒன்றாகும்..
பாடத்தின் பின்புலம் மற்றும் விளைவுகள் பற்றிய அறியாமையிலேயே ஆசிரியரின் கற்பித்தல்
நடைபெறுகிறது. இது தான் பிரச்சனையின் மூல காரணம். எடுத்துக்காட்டாக வேரட்ஸ்வொர்த்தின்
கவிதைகள் இயற்கை சார்ந்ததற்குக் காரணம் அப்பாதைய தொழிற் புரட்சியும் சூழல் பாதிப்புகளும்
தான் காரணம் என்று ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும். வேத காலத்திலேயே மக்கள்
சுறறுச்சூழலைப் பாதுகாத்தனர் எனப் போதிப்பது தவறானது என்கிறார் இராமச்சந்திர குகா.
சூழல் பாதிப்பு என்பது தொழிற்புரட்சிக்கு முன்னர் உணரப்படவில்லை என்கிறார் அவர். இதுதான் அறிவியல் பூர்வமான கல்வி. இதை
அரசு செய்யத் தவறிவிட்டால் அறிவியல் இயக்கத்தின் என்ட்ரி இதில் இருக்க வேண்டும்..
அகில
இந்திய அளவில் கவனம் பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில்
சில..
தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த
எதிர்ப்பியக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் எதிர்ப்பு மீத்தேன் எதிர்ப்பு ஆகியனவும் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த சில வருடஙகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்
மாற்றுக் கல்விக்கான மாநில வாசிப்பு இயக்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
AIPSN
கல்விக்கான தலையீடுகள்..
அகில இந்திய
இயக்கம் வடமாநிலங்களில் தொடர்ந்து கல்வி உரிமைச்சட்டத்தில் உள்ளனவற்றை அமுல்படுத்துதலில்
தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக கிராம கல்விக் குழுக்களைத் திரட்டும்
பணியில் உள்ளனர். அதே போல் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கத்திற்கான பயிற்சி
விவாதங்கள் என இந்தியா முழுவதும் தற்போது நடத்த ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறுகிறது.
சென்னையில் நாம் நடத்திக் கொடுத்த புதிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல் அனைத்து
மாநிலங்களுக்கும் உபயோகமாக இருந்து.
அடிப்படையில்
நீங்கள் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.. தொழிற்சங்கம் எப்படி உங்களைப் போன்ற செயல்பாட்டாளரை
விட்டுவைத்தது..?
நான் கல்லூரி
ஆசிரியர் ஆன காலத்திலிருந்தே மூட்டா சங்கத்தில் உறுப்பினர். அதில் நூற்றுக்கணக்கான
உறுப்பினர்கள் சங்கத்தில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். பிற ஆசிரியர் சங்கத்
தோழர்களில் முக்கியமாக கே.ஏ.தேவராஜன் அவர்கள் எங்களைப் போன்றவர்களை ஊக்குவிப்பார்.
அவர் எனது இன்ஸ்பிரேஷன். வருடம் ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போய்விடுவோம். ஜெயிலில்
எந்த மரத்தைப் பிடிப்பது உட்பட திட்டமிட்டே நாங்கள் ஒரு குழுவாக செல்வோம். ஜெயில் அனுபவம்
சொல்லி மாளாது. ஜெயிலில் தான் என்னை மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்தது.. மூட்டா
போராட்டங்களில் குடும்பங்களை ஈடுபடுத்தும் போது எனது மனைவி சின்னஞ்சிறு மகள், மகன்
ஆகியோரும் கூட பங்குபெற்றுள்ளனர். எனது மனைவியும் கூட கல்லூரியில் படிக்கும் போதே மாணவிகளின்
கூட்டத்தோடு இருந்து பல பணிகளை இயக்கியவர்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..
1987க்குப் பின்
தான் அறிவியல் இயக்கத்திற்கு திசைதிருப்பி விடப்பட்டேன். மூட்டா விவேகானந்தன் தான்
பாண்டிச்சேரி பயிற்சிமுகாமிற்கு அனுப்பிவைத்தார். அதன் பின்னர் வந்த கலைப்பயணத்தோடு
பேரா.ஆத்ரேயா வந்திருந்தார். நான் அம்மா, மனைவி, ஆறேழு வயதுடைய மகன், மகளோடு சென்றிருந்தேன்..
அவர் எங்கள் குடும்பத்தைச் சந்தித்து, பாராட்டிப் பேசி எங்கள் அம்மா உட்பட எல்லோரையும்
தனது வலையில் வீழ்த்தி விட்டார். அன்றிலிருந்து அறிவியல் இயக்கப்பயணம் தான். மூட்டா
போராட்டங்களில் தொடர்ந்தாலும் அறிவியல் இயக்கப் பணிகளில் அக்காலத்தில் இருந்தே கூடுதல்
கவனம் செலுத்த ஆரம்பித்தேன்..
கேள்விகள்: தேனி சுந்தர்
நன்றி: புதுவிழுது இதழ்
நவ.டிச.2017

Comments
Post a Comment