நூல் அறிமுகம் : சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல்

1947ல் க.நா.சுப்ரமணியத்தின் சந்திரோதயம் இதழில் தொடராக வெளிவந்த கதை தான் வாடிவாசல். இது குறுநாவலா, சிறுநாவலா, நெடுங்கதையா என தனி விவாதமே இருக்கிறது. இருந்தாலும் ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது வாடி வாசல் தான். முழுக்க முழுக்க அங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காட்சிப்படுத்திய வகையில் இந்த நாவலுக்கு என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு..


“மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையைக் கண்டுவிட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும். ஒன்று, காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடிகளுக்கு நாலு கால்களில் மாடு அசையாமல் நிற்கச் செய்து விட வேண்டும். ஏன், கால்கள் துவளத் தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்துவிட வேண்டும். இல்லை, அவன் திறமைக்குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை, காலில்லாதவன் மாதிரி முகத்தைக்காட்டிக் கொண்டு காளையை நெருங்காமல் இருந்துவிட வேண்டும். மனிதனுக்கு தான் இது விளையாட்டு. மிருகத்திற்கு அப்படியல்ல. மனிதனுக்கும் மாட்டுக்குமான, ஒத்தைக்கு ஒத்தையாக நடக்கும் இந்த கோதாவில் இரண்டில் ஒரு முடிவு காணும் இடம் தான் வாடிவாசல்..” 

செல்லி அம்மன் ஜல்லிக்கட்டு பேரு போன சல்லிக்கட்டு. மாடுண்ணு அணைஞ்சாலும் செல்லாயி அம்மன் கட்டுல அணஞ்சாவுல பெருமை. மாடு பிடி வீரர்களும் வேடிக்கை பார்க்கும் மக்களும் சோறு கட்டிக்கிட்டு சாரை சாரையாய வந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சியும் அவன் மச்சான் மருதனும் வந்து எந்தெந்த ஊர் மாடுகள் வருகிறது.. தொழுவத்தில் என்ன நடக்கிறது எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். 

என்னமோ, செல்லாயி சல்லிக்கட்டு சீமையிலே பேரு பெத்ததுன்னு, சொல்லிக்கிட்டாங்க.. தொழுவத்துல ஆயிரக்கணக்கில் மாடுக முண்டிக்கிட்டு இருக்கும்னு தம்பட்டம் அடிச்சானுவ, வந்து பார்த்தாவுல தெரியுதுன்னு பிச்சியும் மருதனும் பேசிக்கொள்வார்கள். பின்னாடி இருந்த உள்ளூர்க் கிழவனுக்குக் கோபம் வந்துடும். யாரப்பா நீங்க, கிழக்குச் சீமைக்காரனுங்களா..? ஐநூறு மாட்டுக்கு ஒரு மாடு கொறஞ்சாலும் வாடியில சீன்னு துப்பிட்டுப் போ என்று கிழவன் சொல்வான். இல்ல பாட்டையா, எதோ எங்களுக்குள்ள பேசிக்கிட்டோம் என்பார்கள். அந்த கிழவனுக்கும் பிச்சி, மருதனுக்குமான உரையாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். இவர்களது உரையாடல் மூலம் தான் கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது. 

“கிழக்க எந்த ஊரு? ஊசிலனூரு பாட்டையா. உசிலனூரா.. அந்த மண்ணுல பிறக்க போன சன்மத்திலெ தவம் பண்ணிட்டு இருக்கணும் தம்பி. குளந்தைங்க பொறக்கிற போதே சங்குவாடியை நினைச்சுக்கிட்டுல்லா பொறக்கும் ஆத்தா வவுத்திலே இருந்து.. கும்பிட வேண்டிய ஊரு தம்பி உங்க ஊரு.. ம்ம்.. உசிலனுரா..?”கிழவனுக்கு மகிழ்ச்சி.. 

ஜமீன் மாடுகள் இன்னும் வரலியேன்னு பிச்சியும் மருதனும் கேட்கிறார்கள். வரும், வரும்.. இக்கினிப் பயலா இருந்தா நாள் முதலா செல்லாயி சல்லி பார்த்துகிட்டிருக்கேன். பரம்பரையாய் ஜமீன் மாடு பேர் சொல்லி வந்துகிட்டே தான் இருக்கும்.. வரும்.. என்பான் கிழவன். 

ஜமீன் ஆட்கள் வருகிறார்கள்.. தொடர்ந்து ஜமின் காளைகள் வருகின்றன. ஆனாலும் பிச்சியின் கண்கள் தேடிக்கிட்டே இருக்கின்றன. அதைப் புரிந்து கொண்டு கிழவனே சொல்வான், பெரியபட்டி ஜமீன் கிழக்குச் சீமையிலிருந்து வாங்கிய காரியத் தானே பார்க்கிற.. வரும்.. கரும்பிசாசுல்ல அது.. கடைசியாக ஜமீன் வரும்போது வரும் என்கிறார். 

அதற்கிடையில் கிழவன் உசிலனூர் சல்லிக்கட்டு பற்றிய பெருமைகளைப் பேசுவார். அதில் காளை மாறிக் காளையா விளுந்துகிட்டே இருந்தானப்பா.. கவர்னர் கையில் மெடல் வாங்கினான். பெரியபட்டி ஜமீன் வாங்குவதற்கு முன்பு, உசிலனூர் சல்லிக்கட்டில் இந்தக் காரி தான் குத்திக் கிழிச்சு அவன் செத்தும்போயிட்டானாம்.. எமப்பய.. அவன் பேரு தான் ஞாபகம் வர மாட்டேங்குது என்பான். யாரு அம்புலித் தேவனா பாட்டையா என்பான் மருதன். ஆமாப்பா, சரியா சொல்லிப்போட்ட என்பான் கிழவன். அந்த அம்புலியோட மகன் தான் பிச்சி என்றதும் கிழவனுக்கு உச்சி குளுந்து போகும்.. அதானே பார்த்தேன்.. அப்பனுக்கேத்த புள்ளதான் என்பார். அதற்குள் வாய்மாறி வாய்மாறி பிச்சி பற்றிய தகவல் பரவிடும். 

“மாடு பிடிக்கத்தான் வந்திருப்பான்.. கிழக்கத்தியான் துடியாத்தான் இருப்பான்.. நம்ம பயக அசந்தாப்போச்சு.. எல்லாத்தையும் தட்டிக்கிட்டு போயிடுவான்.. எல்லாம் சல்லிக்கட்டு ரோசமாத்தான் இருக்கும்.. ஜமீன் மாட்டக்கூட ஒரு கை பார்த்தாலும் பார்ப்பான்.. அப்பனுக்குப் புள்ள சோடையா போயிடுவான்..” பிச்சி பற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருப்பார்கள். 

கொட்டு மேளச் சத்தம் கேட்கிறது. ஜமீன் வந்துட்டார். இனி எந்த நேரத்திலும் சல்லிக்கட்டு விடப்படலாம். பாட்டையா, அந்த வாடிபுரம் காளை... என்கிறான் மருதன் கிழவனிடம். 

“உசந்த மாட்டை ஜமீன் எப்பவும் தன் கூடவே தான் கொண்டிட்டு வருவார். ஜமீனுக்கு பின்னாடி நல்லாப்பாரு, ஒரு கரும்பய பிடிச்சுக்கிட்டு வாரான்.. உங்க அப்பன் உசிருக்கு உலைவச்ச காரி இதானப்பா பிச்சி..” என்கிறான் கிழவன். 

“பட்டத்து யானைக்கு படாம் போர்த்தின மாதிரி பல வர்ணபட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்த் இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல்ஜல் என்று சலங்கை மாலையும் கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணிந்து கண்கள் கீழ்நோக்கி இருபக்கமும் பார்க்க, கம்பீர நடைபோட்டு அமரிக்கையாக வந்தது காரி..” இது தான் கரும்பிசாசு. ஒரு அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவன் சொல்ற எவனும் இது மேல இதுவரைக்கும் விரல் கூட வச்சதில்ல என்கிறான் கிழவன். 

“வயசுக் காலத்தில இல்லாமல் வயசான காலத்திலே இல்லெ இந்தக் காரிக்களுதை கண்ணிலே பட்டிருச்சு.. இல்லாட்டி அந்த ஒரு பிடியிலே சகதியிலே அமுக்கிறாப்லே அமுக்கி இருப்பேன். இப்போ, மொக்கையத் தேவர் காரிகிட்ட அம்புலித்தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப்போச்சு..” என்கிற தன் அப்பாவின் வார்த்தைகளும், தன் கண் முன்னே அப்பா காரியில் தூக்கி வீசப்பட்டதும் நினைவுக்கு வந்து பிச்சியின் கண்களை ஈரமாக்குகின்றன. 

காளைகள் விடப்படுகின்றன.. பிச்சியும் மருதனும் காத்திருக்கிறார்கள். என்ன வேடிக்கை பார்க்க வந்தீங்களான்னு முருகு என்பவன் கிண்டலடிக்க, மற்றவர்கள் அஞ்சிய, ஆடிசா குடி பில்லக் காளை, பாளையூர் கொராலு இரண்டையும் வெவ்வேறு உத்திகளில் அணைந்துகாட்டி வாயடைக்கிறார்கள்.. ஜமீன் பார்க்கிறார். அழைத்துப் பாராட்டுகிறார்.. பரிசு கொடுக்கிறார்.. ஆனாலும் உள்ளுக்குள் நம்ம காரியை பிடிச்சுடுவானோ என்ற எண்ணமும் ஓடுகிறது. சரி, அந்தக் காட்சியையும் தான் பார்த்திடலாமே என்றும் நினைத்துக் கொள்கிறார். காளைகள் வருகின்றன.. சிலவற்றை அணைய கூட்டம் கூடுகிறது. சில மாடுகளுக்கு ஓடிப் பதுங்குகிறது.. கிழக்கத்தியான்கள் பிடிப்பார்களா என்று பார்க்கிறது. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில மாடுகளுக்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்று அமைதியாகிறது. 

அடுத்து, வாடிபுரம் காளை.. கருப்புப் பிசாசு.. ராட்சசக் காரி.. 

“ஈரேழு உலகம், அஷ்டதிக்குகளிலும் ஜயக்கொடி நாட்டிய தீர வீர பராக்கிரம் பெரியபட்டி ஜமீன்தார் எசமானுடைய இந்த காரிக்காளை கொம்புக்கு நடுவே நெத்தித் திட்டுலே ரெண்டு பவுனு தங்கமா நடுவே கோத்துத் தொங்கவிட்டு இருக்குது. மாடு அணைகிறவன்னு சொல்லிக்கிட்டு, அப்பன், முப்பாட்டன் பெருமையைப் பேசிக்கிட்டு இருக்கிற ஆம்பள, மீசை முறுக்கிகள், பெண்சாதி பிள்ளைகுட்டி இல்லாதவங்க, திறமிருந்துச்சுன்னா பொஞ்சாதியை அணையறாப்ல இந்த காரியை அணைஞ்சு அதை அவுத்துக்கிடலாம். அத்தோடே புடிச்ச அந்த வீரனுக்கு சமீன் தாரு தன் கையாலே சரிகை துப்பட்டாவும் இனாமாக் கொடுப்பாரு.. ஆம்புளையா இருந்தா புடிச்சிக்க.. பொம்பளையா இருந்தா ஓடிப்போ..! 

இனி காரியும் பிச்சியும் காட்சிகள் திரைக்கதை ரகமானவை.. இருவரும் மனிதர்களா.. இல்லை இருவரும் மிருகங்களா என்ற வகையில் பாய்ச்சலும் பதுங்கலும் பிடிகளும் விலகலுமாக அற்புதமான விவரணைகள்.. அதை நாம் வாசித்து உணர வேண்டும். 

கடைசியில் பிச்சி காரியை அணைந்து விடுகிறான். ஜமீன் தாரும் பரிசுகள் தருகிறார். கடைசி வரை வெறியோடு மோதிய காரி, செல்லும் வழியில் பத்துப்பேரைக் குத்திக் கிழிக்கிறது. இருவர் சாகிறார்கள்.. கோபம் தணியாமல் ஆற்றங்கரையில் மணலைக் குத்திக் குத்தி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது காரி.. ஜமீன் தார் அங்கு படைபரிவாளங்களுடன் அங்கு செல்கிறார். தன் இடுப்பில் இருந்த ரிவால்வரை எடுத்து காரியைச் சுட்டுத் தள்ளுகிறார். பாவம், சரிகிறது அந்த ஜீவன்.. 

ஜமீனோட காரியைப் பிச்சி அடக்கிட்டான்கிற பேச்சு.. காரியை ஜமீன் கொன்னுட்டார்னு மாறுது.. மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு.. மனுசனுக்கு ரோசம்வந்தாலும் போச்சுன்னு முடிகிறது கதை.. 

ஜல்லிக்கட்டு சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு கௌரவம், சிலருக்கு சாதி, சிலருக்கு வீரம், சிலருக்கு ரோஷம், சிலருக்குப் பெருமை.. சிலருக்கு தைமாதம் மட்டும் விவசாயத்தை, நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவது பற்றிப் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பு என பலவிதங்களில் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. இவை எதுவுமே இல்லை என யாராலும் மறுத்துவிட முடியாது. எல்லாமும் தான். எல்லாமும் தான் இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!