குழந்தைகளுக்குச் சத்துணவு: விரைந்து செயல்படுமா தமிழக அரசு?

உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வு தானே முன்வந்து விசாரித்த, கொரனா காரணமாக முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும், குழந்தைகளுக்கான சத்துணவு தொடர்பான வழக்கில் மார்ச், 18 அன்றே மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று 
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது..



அதனைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் மார்ச், 20ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையிலும் அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான சத்துணவு கிடைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் சத்துணவிற்கான பொருட்களையும் அதைச் சமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகையினையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலமும் அறிவிப்புகளையும் செயல்திட்டங்களையும் வெளியிட்டுள்ளன. கேரளா உள்ளிட்ட வெகு சில மாநிலங்களில் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் அறிவிப்பு வரும்போதே அல்லது வருவதற்கு முன்னரே குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று சத்துணவு அளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன..

மார்ச் 10 முதலாகவே  ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் கேரளாவில் அப்போதிருந்தே அங்கன்வாடி மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு அவரவர் வீடுகளிலேயே சமைத்த உணவு, பழம் மற்றும் பால் வழங்கும் நடைமுறையும் இணைந்தே அமலாக்கப்பட்து..


பீகார் அரசு, மார்ச் 14ஆம் தேதியே சத்துணவுக்கான தொகையினை,  1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தொகையும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு தொகையுமென  பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது

மார்ச், 19ஆம் தேதியன்று மஹாராஷ்டிரா அரசு, தங்கள் மாநிலத்தில் 86000 பள்ளிகளில் பயிலும் சுமார் 1.1 கோடி குழந்தைகளில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் அவரவர் இல்லங்களிலேயே சத்துணவுப் பொருட்களை வழங்கலாம் என முடிவு செய்திருக்கிறது.. பஞ்சாப் அரசு மாணவர்களுக்குரிய சத்துணவுப் பொருட்கள் அவர்களது வீடுகளிலேயே வழங்கப்படும் அல்லது அதற்குரிய தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மார்ச் 20ஆம் தேதியன்று,  மேற்குவங்க அரசு,  குழந்தைகளுக்கான சத்துணவை கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து மக்கள் ஊரடங்கின் போதே தயாராகி விட்டது. குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டாம் எனக் கூறி அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒரு மாதத்திற்கு தலா ஒரு குழந்தைக்கு 2கிலோ அரிசி மற்றும் உருளைக்கிழங்கு என வழங்கியது.. அதே நாளில் கர்நாடகா அரசும்  ஏப்ரல் முடிய உள்ள வேலைநாட்களுக்கான உணவுப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளின் வீடுகளிலேயே வழங்கும் உத்தரவைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்தியது..  ஹரியானாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கான கோதுமை, அரிசி மற்றும் சமைப்பதற்கான செலவுத்தொகையை அந்தந்த மாணவர்களின் வீடுகளிலேயே ஆசிரியர்கள் மூலம் வழங்க உத்தரவிட்டது. நேரடியாக வீடு வீடாகச் செல்வது நோய்த்தொற்றை அதிகரிக்கவே செய்யும். எனவே அதற்கான முழுத்தொகையையும் மாணவர்கள், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்திட வேண்டும் என அம்மாநில ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். சட்டீஸ்கர் அரசாங்கம், ஒவ்வொரு தொடக்கப்பள்ளி குழந்தைக்கும் 4கிலோ அரிசியும் 800 கிராம் தானியங்களும் வழங்கப்படும் என்றும் மேல் வகுப்புக் குழந்தைகளுக்கு 6கிலோ அரிசியும் 1200 கிராம் தானியங்களும் பள்ளியிலேயே வழங்கப்படும். அந்தந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வந்து ஏப்.1,2 தேதிகளில் வந்து பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியது. 


மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த ஒடிசா அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவே கூப்பன்கள் வழங்கி அவரவர் வாழிடப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளிலேயே அரிசி உள்ளிட்ட உணவுக்கான பொருட்களை வழங்கிட தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.. அதே தேதியில் உத்ரகாண்ட் அரசு உடனடியாக ரூ.5 கோடியை ஒதுக்கி பள்ளி வேலைநாட்களுக்கு உரிய சத்துணவுப் பொருட்களுக்கான தொகையை மாணவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தது. அதேபோல நாகலாந்து அரசும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட சத்துணவிற்கான பொருட்கள் அவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வழங்கப்படும் என அறிவித்தது.

மார்ச், 24 ஆம் தேதி, ஆந்திரப்பிரதேச அரசு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் 37 இலட்சம் குழந்தைகளுக்கும் அவரவர் வீடுகளிலெயே அரிசி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்தது. மார்ச், 25ஆம் தேதியன்று அசாம் அரசு, எங்கள் மாநிலத்தில் எந்த ஒரு குழந்தையும் இரவு பசியோடு தூங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 14 வயதுக்குட்பட்ட 40 இலட்சம் குழந்தைகளுக்கும் அவரவர் வீடுகளிலேயே சத்துணவு வழங்குவோம் என்று முழங்கியது.. ஜம்மு காஷ்மீரிலும் கூட மார்ச், 25க்குள் மாணவர்களது வீடுகளிலேயே சத்துணவுப் பொருட்களை வழங்கி முடிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன..



மேற்கண்ட நடவடிக்கைகளில் பெரும்பான்மையான மாநில அரசுகள் பள்ளி வேலைநாட்கள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வேலை நாட்களுக்கான சமைத்த உணவை அல்லது உணவு தயாரிப்பதற்கான பொருட்களை அல்லது அத்துடன் சமைப்பதற்கு ஆகும் செலவினத்தையும் சேர்த்து கணக்கிட்டு அந்தத் தொகையினையே நேரடியாகவோ அல்லது வங்கிக்கணக்கின் மூலமாகவோ குழந்தைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன..

ஏற்கனவே பள்ளியில் வழங்கப்படுகின்ற சத்துணவிற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒதுக்கப்படுகின்ற தொகை மிகவும் சொற்பமானதாகவே இருக்கின்றது என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. மற்ற சாதாரண நாட்களில் குழந்தைகளின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருவாய்க்கு குறைந்தபட்ச உத்தரவாதம் ஏதேனும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல எனும் போது பள்ளி வேலை நாட்களை மட்டும் கணக்கில் கொண்டு வழங்குவது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது மட்டும், பள்ளி வேலைநாட்களில் மட்டும் தான் அவர்களின் ஊட்டச்சத்து குறித்து அரசு கவனம் செலுத்தும் என்று அர்த்தமாகாதா..?

ஊட்டச்சத்து மிக்க, ஆரோக்கியமான குழந்தைகள் தான் தேசத்தின் குடிமக்கள். எதிர்காலத் தலைமுறை. தேசத்திற்கான உற்பத்தியில் அவர்களது ஆரோக்கியமும் உடல்நலமும் மிக முக்கியப்பங்காற்றக் கூடியவை. எனவே  எதிர்காலச் சந்ததியை வளப்படுத்த வேண்டிய அரசு வேலைநாட்களை மட்டும் கணக்கில் கொண்டு ஊட்டச்சத்து வழங்குவது எப்படி அறிவியல் பூர்வமான அணுகுமுறையாக இருக்கமுடியும்?



இதில் தமிழக அரசின் நடவடிக்கை மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் காட்டிய வேகத்தில் கால்வாசியைக் கூட பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து காட்டவில்லை. மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் கடந்து விட்டன. ஏற்கனவே வழங்கப்பட்ட, பள்ளிகளில் இருந்த மார்ச் மாத இருப்பிலிருந்து பருப்பு, எண்ணெய், பயறு வகைகள் போன்றவை திரும்ப உரிய அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அரிசி, பருப்பு, உப்பு மட்டுமே சத்துணவு மையங்களில் இருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே கையிருப்பாக இருந்த முட்டைகளும் கூட கால தாமதமாகவே குழந்தைகளுக்கு முறையான அறிவிப்பின்றி வழங்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்ட நாளிலிருந்து குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக வேறெந்த தகவல்களும் வழிகாட்டல்களும் அரசிடமிருந்து வரவில்லை என்பது தான் சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளும் கூறும் தகவலாக இருக்கிறது. 

உலகிலேயே முதல் முறையாக 1920ல் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்கிய பெருமைக்குரியது சென்னை மாகாணம். ஆம், முதல் முறையாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. உணவு வழங்கப்பட்ட பிறகு படிப்படியாக குழந்தைகளின் எண்ணிக்கை கூடியதும் பிரிட்டிஷ் அரசு கைவிடச் செய்தது. ஆயினும் 1925ல் மீண்டும் தொடங்கப்பட்டது. பி.தியாகராச செட்டியாரை மதிய உணவுத்திட்டத்தின் தந்தை என்று போற்றினார் பேரறிஞர் அண்ணா.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கிய காமராசர் அதன்பிறகும் குழந்தைகள் வயல்வெளிகளிலும் வீட்டிலும் இருப்பதைக் கண்டு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1982ல் எம்.ஜி.ஆர். அதனை சத்துணவு திட்டமாக்கினார். கலைஞர், ஜெயலலிதா என ஒவ்வொரு முதல்வரும் அதை மேலும் மேலும் செழுமைப்படுத்தி நாட்டிலேயே முன்மாதிரியாகத் திகழ்ந்த மாநிலம் தமிழ்நாடு. உலகிற்கே முன்மாதிரியாக சென்னையில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி (1920-2020) நூறாண்டுகள் நிறைவடைந்து விட்டன.  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இதுகுறித்து வாய்திறக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மூன்று மாதங்கள் முடிந்த பிறகு ஜூன்,10ஆம் தேதி சமூகநலத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாணவர்களின் வங்கிக்கணக்கு குறித்து சுற்றறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன.. இனியும் காலந்தாழ்த்துதல் கூடாது. ஊட்டச்சத்து என்பது உடனடியாகக் கிடைக்கவேண்டியது. அதை நான்கைந்து மாதங்கள் கழித்து மொத்தமாக ஒரே நாளில் குழந்தைகளுக்கு கொடுத்துவிடமுடியாது.

எனவே, அந்தந்த பள்ளிக் குழந்தைகள் என்றில்லாமல் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் கணக்கில் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் அதாவது சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் அல்லது கிராம சமுதாயக்கூடங்களில் சமைத்து உரிய தனிமனித இடைவெளி, முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் உள்ளூர்ப் பள்ளியிலேயே சமைத்து உணவு சூடாக வழங்கப்பட வேண்டும்.

அல்லது நியாயவிலைக் கடைகள் மூலமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப்பொருட்கள் மற்றும் சமைப்பதற்கான தொகை வழங்கப்பட வேண்டும்.

அல்லது தொற்று பரவக்கூடும் என்ற அச்சமிருந்தால் பள்ளி வேலைநாட்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஊரடங்கு காலம் முழுவதையும் கணக்கில் கொண்டு அதற்கான பணத்தை பெற்றோரின் வங்கிக்கணக்கில் செலுத்திட வேண்டும். 

முன்னுதாரணமற்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் ஊக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதோடு கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலனிலும் ஊட்டச்சத்து குறித்தும் இயல்பான காலத்தை விடவும் இருமடங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அந்தந்த குடியிருப்பு பகுதிகளிலேயே வசிக்கும் ஆர்வமுள்ள ஆசிரியர்களையும் உள்ளூர்த் தன்னார்வலர்களையும் ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
-தேனி சுந்தர்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!