நானும் புத்தன் தான்.. - நூல் குறித்து
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹைக்கூ நூலை வாசித்தேன்.. அப்போ அதுக்கு முன்னாடி நிறைய ஹைக்கூ நூல்களை வாசித்துக் கொண்டிருந்தீர்களா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள்..
தமிழகத்தில் ஹைக்கூ இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கக் கவிஞர்கள் எல்லாம் பெரும்பாலும் நம்மூர்ல தான் இருந்தார்கள்.. நம்மூர்க்காரர்களாக இருக்கிறார்கள்..!
ஹைக்கூ சிகரத்தில் எப்போதும் இருக்கும் கம்பம் மாயவன், தோழர்கள் உமர் பாரூக், Tamizhmani Ay மற்றும் Cumbum Puthiyavan ஆகியோரது ஹைக்கூ நூல்கள் எப்படியும் கைக்கு வந்து விடும்… இப்போது அவர்களும் ஹைக்கூ எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய ஹைக்கூ வாசிப்பு குறைந்ததற்கு அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்..
கம்பம் பகுதியில் அந்த ஏக்கத்தை, தாகத்தை போக்கும் விதமாக, குறைக்கும் விதமாக இப்போது கவிஞர் ராஜிலா ரிஜ்வான் ஹைக்கூ சாரல் பொழிந்து வருகிறார்.. அவருடைய இரண்டாவது நூல் “நானும் புத்தன் தான்..” அகநி வெளியீடாக வந்திருக்கிறது..
அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். இஸ்லாமியப் பெண். ஹைக்கூ கவிஞர்.. எல்லாமே கொஞ்சம் தனித்துவமான தன்மைகள் தான்.. தனது அணிந்துரையில் தோழர் அ.உமர் பாரூக் அவர்கள் கூறுவது போல, தேனி மாவட்டத்தில் ஹைக்கூ நூல் வெளியிட்ட முதல் இஸ்லாமியப் பெண் கவிஞர் ஆகிறார்.. அதுவும் அடுத்தடுத்து இரண்டு நூல்கள்..!
அவருடைய நூலும் கவிதைகளும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளதும் கூட நமக்கும் பெருமை அளிப்பதாக இருக்கிறது.. வாழ்த்துகள் தோழர்.. தொடர்ந்து எழுதுங்கள்..!
ரசனை, கோபம், விமர்சனம், அனுபவம் என்று அவரது கவிதைகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் ரசனை சார்ந்தவை மிகுதியாக உள்ளது..
அனுபவம் அங்கங்கே எட்டிப் பார்க்கின்றன. கோபம் சில இடங்களில்.. விமர்சனங்கள் மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டுள்ளதாக என் பார்வைக்குப் படுகிறது. எனது பார்வை தவறாகக் கூட இருக்கலாம். அந்த அளவிற்குத் துல்லியமாக மதிப்பிடும் இலக்கியவாதியும் நான் அல்ல..!
குழந்தைகள் குறித்த கவிதைகள் ஒப்பீட்டளவில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. ஆசிரியர் என்கிற அனுபவமும் தனக்கான இடத்தை அங்கங்கே கோரிப் பெற்றுள்ளது.
நமது பேரம் பேசும் திறமையைக் காய்கறி விற்பவர், செருப்புத் தைப்பவர்களிடம் மட்டுமே காட்டுகின்ற வீராப்பை கிண்டலடிக்கும் கவிதைகள் சிறப்பு..!
முதிர்கன்னி, பொது முடக்கம், பசி, பட்டினி, ஏழையின் வீடுகளில் மழை நாட்களில் ஏற்படும் துன்பம், துயரம், இணைய வழி கல்வி என இயல்பான வாழ்வில் அவர் கண்ட, கேட்ட, உணர்ந்த அனைத்தையும் அழகிய கவிதைகளாக நமக்கு பகிர்ந்திருக்கிறார்..
அவருக்கு ஹைக்கூ எங்கிருந்து கிடைக்கிறது என்கிற ரகசியத்தையும் நமக்குச் சில கவிதைகளில் சொல்லி இருக்கிறார்..
எழுதியவை நிறைய என்றாலும் எழுத வேண்டிய இடங்களும் இன்னும் நிறைய இருப்பதை உணர முடிகிறது.. அவர் ஹைக்கூ பயணத்தின் தொடக்கத்தில் தான் இருக்கிறார் எனும் போது இன்னும் நிறைய எழுதுவார். விமர்சனப் பூர்வமாக இன்னும் நிறைய எழுதுவார். தேனி மாவட்டம் மட்டுமின்றி பரந்த அளவில் கவனம் பெற்று ஒளிர இருக்கும் கம்பம் பள்ளத்தாக்கின் நம்பிக்கைத் தாரகை என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
புதிதாக எழுத வரும் பலருக்கும் பல தேவைகள் இருக்கின்றன. அவற்றில் முதல் தேவை.. முக்கியத் தேவை மு.மு. போன்ற ஒரு நம்பிக்கை ஒளி..! ஒரு ஏணி.. தூக்கி விடும் கரம்..!!
ஆம், வளரும் படைப்பாளிகளை அடையாளம் காணுதல், அங்கீகரித்தல், அகநி மூலமே நூல் வெளியிட்டு அவர்களை உலகறியச் செய்தல் என்பதையும் தன் இலக்கியப் பயணத்தின் இன்னொரு பகுதியாகவே தொடர்ந்து செய்து வருகிற ஹைக்கூ இலக்கிய முன்னோடி தோழர் முருகேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுகள்..
நூலில் இருந்து எந்த ஒரு ஹைக்கூவையும் நான் எடுத்துச் சொல்லவில்லை. வேண்டுமென்றே தான் நான் தவிர்த்து இருக்கிறேன்..
நீங்களும் ஹைக்கூ சாரலில் கொஞ்சம் நனைந்து தான் பாருங்களேன்..!
தேனி சுந்தர்
நன்றி : புக்டே.இன்
Comments
Post a Comment