மகாத்மா மண்ணில் மதவெறி - நூல் குறித்து

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்..

ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..? அந்த குற்றச்சாட்டின் பேரில் நாடு முழுக்க தடைவிதிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதை எத்தனை ஆவணங்களிலிருந்து அழிக்க முடியும்..? திருத்த முடியும்..??



சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்கிற அளவுக்கு மறுக்க முடியாத ஒரு உண்மையைப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காத ஒரு காவல் துறை அதிகாரி.. அதுவும் தமிழ்நாட்டில்.. அதுவும் தேசிய கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் ஒருவரை தடுக்கும் அந்த தைரியம் தான் நமக்கு அச்சமூட்டும் ஆச்சர்யம்..! அது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பலம்..! சூட்சமம்..!!

அந்த சம்பவம் தான் வகுப்புவாத அபாயம் குறித்த தொடரை எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தை தோழர் ஜி.ஆர். அவர்களுக்கு அளித்திருக்கிறது..

சுதந்திர போராட்டத்திற்கு முன்பும் பின்பும் இந்துத்வ சக்திகள் எப்படி செயல்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவர்கள் எவ்வாறு செயல்பட்டனர். மக்கள் மத்தியில் பிரிவினையை, மத வெறி உணர்வைத் தூண்டி எவ்வாறு மோதல்களை அரங்கேற்றுகின்றனர் என்பதையெல்லாம் சொல்லிச் செல்கிறார்..

இந்துத்வா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.. இந்துத்வா என்பது ஒரு அரசியல் செயல்திட்டம்.. இந்த அரசியல் செயல்திட்டத்தை அமலாக்க இந்து மத உணர்வை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.. இறை பக்தி உள்ளவர்கள் மதப் பற்று உள்ளவர்களாக மாற்றப்படுவதும் மதப் பற்று உள்ள அப்பாவிகள் மதவெறி ஊட்டப்பட்டு மதக் கலவரங்களில் அடியாட்களாக பயன்படுத்தப்படுவதும் அவர்களின் வகுப்புவாத தந்திரம் என்பதை விளக்குகிறார்..

இந்துத்வா, வகுப்புவாத சிந்தனைகளின் வளர்ச்சி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து ஆகும். இந்த ஆபத்து இன்று உருவானதில்லை.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருவாக்க வேண்டும்.. நால்வருண அமைப்பையும் சாதிய பாகுபாடுகளையும் பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் இழிவுபடுத்தும் அம்சங்களை உள்ளடக்கிய மனுநீதி தான் நாட்டின் சட்டமாக இருக்க வேண்டும் என்று கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருபவர்கள்.. அதை நடைமுறைப்படுத்த அதிகாரம் வேண்டும். அதற்காகவே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.. அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார் தோழர் ஜி.ஆர்.

இந்துத்வா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. இஸ்லாமிய, கிறித்தவ மத அடிப்படைவாத அமைப்புகளும் ஆபத்தானவை தான் என்று சுட்டிக்காட்டுகிறார்.. சிறுமி என்றும் பாராமல் சுட்டுத் தள்ளப்பட்ட சிறுமி மலாலாவை எடுத்துக் காட்டி சொல்கிறார்.. சூரியன் தான் மையம், பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைச் சொன்னதற்காக கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்த, புருனோவை நெருப்பிட்டுக் கொன்ற கிறித்தவ அடிப்படைவாத சம்பவங்களை எடுத்துக் காட்டி சொல்கிறார்..

மதம் வேறு அரசியல் வேறு என்று இருக்க வேண்டும்.. மதம் வேறு அரசு வேறு என்று இருக்க வேண்டும்.. இரண்டும் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணங்கள் தான் இவை..

ஆர்.எஸ் எஸ். கும்பலின் முன்னோடிகள் சாவர்க்கர், ஹெட்கேவர், முஞ்சே கோல்வால்கர்.. இவர்களின் முன்னோடிகள் ஹிட்லரும் முசோலினியும் தான்..

இனவெறி, மதவெறி தலை தூக்கினால், பரவினால் உலகம் என்னவாகும் என்பதற்கு இவர்களே சாட்சி.. உலகின் பல கோடி மக்களை தங்களின் வெறியால் பலிகொண்ட பாசிச, நாசிச சக்திகளின் வழித் தோன்றல்கள் நம் தேசத்தை என்ன செய்வார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சம் இந்த நூலை வாசித்த ஒவ்வொருவருக்கும் எழும்..

அதே நேரத்தில் அன்றைய பாசிச சக்திகளுக்கு எதிராக கலை இலக்கிய பண்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு போராடினார்கள் என்கிற உதாரணங்களை எல்லாம் கூறி நீங்கள் யார் பக்கம் என்று கேட்டு கடைசி அத்தியாயத்தைத் தொடங்குகிறார்..

மதவெறிக்கு மாற்று மத நல்லிணக்கம்.. வெறுப்புக்கு மாற்று அன்பு.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிராக ஒரு அபாயம் தலை தூக்கும் போது ஜனநாயகத்தை, சோசலிசத்தை, மதச்சார்பற்ற குடியரசு என்கிற அதன் மாண்பைக் காக்கிற கடமை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு..

இந்து மத வெறி கொண்ட ஆட்சி என்பதால் இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் என்று கூட பலர் நினைக்கலாம்.. தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய கல்விக் கொள்கை என விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வித மக்களுக்கும் எதிராகத் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறார்..

வேறு யாருக்காக தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு தான். அதானி, அம்பானி போன்ற பெரும் கார்பரேட்டுகளின் நலன் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. கொரனா பெருந்தொற்று காலத்தில் கூட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதமாக ஒன்றும் செய்யாமல் பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. விளைவாக உலகப் பணக் காரர்கள் வரிசையில் பிரதமரின் கூட்டாளிகள் வேகவேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்..

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாக்கிற, மக்கள் மத்தியில் ஒற்றுமையை, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குகிற பக்கமா? இல்லை அதற்கு எதிர்ப் பக்கமா? எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

இன்றைய சூழலில் மிக மிக அவசியம் வாசிக்க வேண்டிய நூலாக, நக்கீரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது மகாத்மா மண்ணில் மதவெறி..!

தேனி சுந்தர்
நன்றி : புக்டே.இன்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்