ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் – மாணவர் மனசு! - மு.தமிழ்ச்செல்வன்

எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவர் கட்டுரைகளாக எழுதியவைதான். இதிலுள்ள கட்டுரைகளை முகநூலில் ஏற்கனவே வாசித்திருந்ததால் மீள் வாசிப்பு செய்ததை போன்றே உணர்ந்தேன். இந்தக் கட்டுரை தொகுப்பை பாரதி புத்தகாலயம், புக் ஃபார் சில்ரன் வெளியீடாக இவ்வாண்டு வெளியிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு நிறைய பொறுமையும் நிதானமும் தேவை என்பதை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிய முடிகிறது. மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள தனித்த அணுகுமுறை தேவைதான். அது அன்பும் அரவணைப்பும் கலந்த, கண்டிப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அதோடு மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு கீழ் இறங்கி பேசி, அவர்களின் உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நம் கைவசம்தான். அத்தகையதொரு முயற்சியை தேனி சுந்தர் அவர்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிய முடிகிறது.


”சிரிப்பு போலீஸ்“ கட்டுரையில், பள்ளியின் புதிய கழிப்பறையின் சன்னல் உடைக்கப்பட்டதற்காக, விசாரணை செய்யும் பட்சத்தில், அப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் மீதான கோபத்தில் அப்பள்ளி மாணவர்களே அத்தகைய காரியத்தை செய்துவிட்டு, அவர்களே அதை விசாரிக்கும் ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து, தங்கள் மீது சந்தேகம் வராதபடி நடந்து கொண்ட விதம் மாணவர்களின் சமாளிக்கும் திறனோடு, க்ரைம் படங்களின் சில காட்சிகளை நினைவுட்டியது. அதையும் ஆசிரியர்கள் நம்பி எப்படியும் தவறு செய்தவர்களை கண்டுபிடித்துவிடாம் என்று தீவிர விசாரணை செய்து கொண்டிருப்பதை நினைத்தால் சிரிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?

“சாரு பயந்துட்டாரு“ என்ற கட்டுரையில், ஒரு ஆசிரியரை மாணவர்கள் சேர்ந்து பயந்துவிட செய்ய முடியுமா? அதிலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் என்ற கேள்விதான் எழுகிறது. இந்நிகழ்வில் ஆசிரியர் அந்தப் பள்ளி மாணவர்களோடு ஒன்றிப் போய் இருக்கிறார் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறது. விளையாட்டுக்கு என்றாலும் மாணவர்களிடத்தில் ஒரு ஆசிரியர் பயப்படுவது சாத்தியமா? என்ற கேள்வி, பலரின் முன்னால் தானொரு ஆசிரியர். அதுவும் சின்னப் பிள்ளைகள் முன்னால் பயந்தால் தன் மீது மரியாதை இல்லாமல் போகும் என்று நினைக்கும் நபர்களுக்கு மத்தியில், பொய்யாக பயந்தாலும், அது ஆசிரியர் – மாணவர் உறவுக்குள் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஆசிரியர்களை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக மாணவர்களிடம் கொண்டு செல்லவே உதவுகிறது.

ஆசிரியர்கள் பேசும் பொய்யுக்கும் மாணவர்கள் பேசும் பொய்யுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் ஏதேனும் ஒரு சூழலில் பொய் பேசியதற்காக யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை. ஆனால் நாம் சிலநேரங்களில் பார்த்தோமானால் மாணவர்கள் சொல்லும் பொய்கள் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர், தன்னுடைய குற்றவுணர்ச்சியை சமரசம் செய்து கொள்கிறார். ஆனால் மாணவர்களை பொய் பேச அனுமதித்து, அதையும் ஏற்றுக் கொள்ள மனசு வேண்டுமல்லவா? அந்த மனசு இந்நூல் ஆசிரியருக்கு உள்ளது.

‘மாணவர் மனசு“ எத்தனை விதமான ஆசைகளை கொண்டுள்ளது. அது வெறுமனே குறைகளை மட்டும் எழுதிப் போட்டு, அதற்குரிய தீர்வை நோக்கிக் காத்திருக்கும் குறைதீர்ப்பு பெட்டிகளாக அதை சுருக்கிவிட மாணவர்கள் நினைக்கவில்லை. அந்தப் பெட்டி அவர்களின் மனங்களை வெளிப்படுத்தும் பெட்டகம் என்பதை மாணவர்கள் மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் இதைச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? அல்லது மாணவர்களின் மனசை ஆசிரியர்கள் உள்வாங்கி அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வழிநடத்துவார்களா? என்பதெல்லாம் எந்த ஆசிரியர் கையில் மாணவரின் மனசு சிக்குகிறதோ அதைப் பொறுத்துதான் அமையும். அப்படியொரு சம்பவம்தான் அலைபேசி கேட்டு மாணவன் கடிதம் எழுதிய நிகழ்வை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசிரியரை கடவுளுக்கு சமமாக கருதும் ஆட்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ”கடவுளா நம்புறேன் சாரே“ என்ற கட்டுரை உணர்த்துகிறது. தன் பெற்றோரை, அம்மாணவன் முன்னாலேயே சத்தம் போடும் போது, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாணவன் எத்தனை கூனிக் குறுகிப் போகிறான் என்பதை உணர முடிகிறது. ஒரு கடைநிலை தொழிலாளியான துப்புரவுத் தொழிலாளி படிப்பின் அவசியம் குறித்து உணர்ந்து கொண்டதுடன், தனக்கும் தான் செய்யும் தொழிலால் ஏற்பட்டிக்கும் சமூக இழிவை தன் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக எப்பாடு பட்டாவது, நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதும் படிப்பின் அருமையை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். இன்றைக்கு பொது சமூகம் கழித்த கழிவை, குப்பைகளை இன்னொருவர் வந்து சுத்தம் செய்வார் என்று பொறுப்பற்று நடந்து கொள்ளும் நபர்கள் மாறாத வரை துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த மனநிலையும் மாறப்போவதில்லை. குறைந்த பட்சம் அதுபோன்ற கடைநிலை அரசுப் பணியாளர்களிடம் பலர் சக மனிதனாக கூட நடந்து கொள்வதில்லை. ஆனால் ஆசிரியர் மனிதாபிமானத்துடன் அவரிடம் பேசும் வார்த்தைகளும் அதற்கு அவர் அளித்த பதிலும், ஆசிரியரை வாயடைத்துப் போக செய்கின்றன. சமூகத்தில் எளிய மனிதர்களின் குரல்களை நாம் தேவையான சந்தர்ப்பத்தில் அவ்வப்போது கேட்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்லதொரு சமூக மாற்றத்திற்கான கல்வியையும் ஏட்டுக் கல்வியோடு ஆசிரியர்களால் கொடுக்க முடியும் என்ற புரிதலை பலருக்கும் உருவாக்கியிருக்கிறது அக்கட்டுரை.

கல்வித்துறை அதிகாரிகளின் சம்பிரதாய வருகையும், அவர்கள் பதிந்த வடிவத்தில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வுக்கு உட்படுத்துவதும் மிக அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். பொதுவாக வகுப்பறையில் நடக்கும் எத்தனையோ செய்திகளை பலரும் பதிவிடுவார்கள். ஆனால் தனக்கு மேல் அதிகாரிகளின் வருகை, அவர்களின் அணுகுமுறை ஆகியவை குறித்து வெகு சிலரே பேசுகிறார்கள். அப்படிப் பேசத் தயங்குகிற விசயத்தை மாணவர்களின் எண்ணத்தையும் சேர்த்து வெளிப்படுத்திய விதம் அருமை. மாணவர்களை பொறுத்தவரை அன்பான அணுகுமுறை உள்ளவர்களிடமே ஒட்டிக் கொள்வார்கள். மிகவும் காராராக நடந்து கொள்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறார்கள் என்ற செய்தியும் சுட்டிக் காட்டப்படுகிறது.

”சங்கடப் படலே” என்ற கட்டுரையில், ஆசிரியரின் கோரிக்கை ஒன்று வெளிப்பட்டது. அதுவும் மென்மையான முறையில் இருந்தது. தொடக்கப் பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளியும் கிட்டதட்ட மழலையர் பள்ளி போன்றதுதான் என்பதால் அங்கு ஒரு ஆயாள் நியமணம் செய்தால் அக்குழந்தைகளை கவனித்துக் கொள்ள எத்தனை உதவியாக இருக்கும் என்பதுதான் அக்கோரிக்கை. அதற்கான தேவையை ஆசிரியர் உணர்ந்தாலும், அவரே இக்கட்டான சூழலில் முன்நின்று ஆயாவாகவும் செயல்பட்டதால் அத்தகைய கோரிக்கையை முன்வைக்க முடிகிறது. அதிலும் ஓராசிரியர் பள்ளியில் மற்ற மாணவர்களையும் கவனித்துக் கொண்டு, இயற்கை உபாதையை கழித்த மாணவிக்கு சுத்தம் செய்ய உதவியதோடு, கழிப்பறையையும் சுத்தம் செய்த அனுபவத்தை பொது வெளியில் சொல்வதற்கு அசாத்திய மனம் வேண்டும். அது ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது. தானொரு ஆசிரியர் என்பதை தாண்டி, கழிப்பறையை சுத்தம் செய்யலாமா? என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கெல்லாம் தயாராக இருந்து அத்தகைய பணியை செய்த முடித்த பின்னர், அதை முகநூலில் அவர் எழுதிய போது உண்மையில் பிரமித்துதான் போனேன். இதைப் படிக்கும் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுகூட நினைக்காமல் மனுசன் பொதுவெளியில் எழுதியிருக்கிறாரே என்றுதான் அப்போது நினைத்தேன். அக்கட்டுரை மாணவர் மனசில் இடம் பெற்றிருப்பதும் மற்ற ஆசிரியர்களுக்கு மத்தியில் தேனி சுந்தர் அவர்கள் தனித்த இடத்தைப் பெறுகிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதோடு அவருடைய கோரிக்கையான தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு ஆயாள் நியமணம் என்பதை ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைளில் இடம் பெறச் செய்யலாம். அதற்கான முயற்சியை ஆசிரியர் மேற்கொண்டால் ஒருவேளை சாத்தியப்படலாம்.

குழந்தைகள் பள்ளிக்குப் போனதும் முதலில் இழப்பது என்னவோ அவர்களின் இயல்பைதான். குழந்தைத்தனத்திற்கான எல்லாவற்றையும் வீட்டோடு விட்டுவிட்டு பள்ளியில் வேறு விதமான அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள். அப்படி பணியாதவர்கள்தான் பள்ளியில் பல்வேறு அடைமொழிகளுடன் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை முத்திரைக் குத்தியும் விட்டு விடுகிறார்கள். ஆனால் இப்புத்தகத்தில் ஆசிரியர் மாணவர்களின் இயல்பை இழக்காமல் இருக்க வேண்டுமென சொல்வது அவரது அணுகுமுறையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இவரைப் போன்ற ஆசிரியர்கள் கிடைக்காத மாணவர்கள் பலரும் பள்ளியிலும், வீட்டிலும் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதிற்கில்லை.

நாம் ஒவ்வொருவரும் அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வோம் இல்லையா? அது குழந்தைகள் இடத்திலும் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் நம் ஒவ்வொருவரின் அப்ரோச்சும் வேற வேற என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பொதுவாக அரசுப் பள்ளிகளின் மீது சமூகத்தின் பார்வை என்று ஒன்று இருக்கிறது. அது பலருக்கு நல்ல விதமாகவும், இன்னும் சிலருக்கு அவரவரின் பார்வையைப் பொறுத்தும் மாறுபடுகிறது. அதேபோலத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மீதும். மாணவர் மனசு என்ற இந்நூலைப் பொறுத்தவரை வாசிக்கும் யாரையும் அரசுப் பள்ளிகளின் மீதும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மீதும் புதுவிதமான பார்வையை உண்டாக்கும் வகையில் இதிலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. இருப்பினும் லட்சத்தில் அல்லது ஆயிரத்தில் ஒரு ஆசிரியர் இதுமாதிரி இருந்தால் போதுமா? மற்றவர்கள்? என்ற கேள்வியும் உடனே எழத்தான் செய்யும். இதுபோன்ற ஒன்றிரண்டு ஆசிரியர்கள்தான் நம் கண் முன் நிற்கும் நம்பிக்கைக் கீற்றுகள்!



ஆசிரியர் : தேனி சுந்தர்




மு.தமிழ்ச்செல்வன்
நன்றி : புக்டே.இன்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்