உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் நூலறிமுகம் : புத்தகம் பேசுது இதழில் பேரா.மோகனா அவர்கள்

 

கட்டுரையை வாசிப்பதற்கான லிங்க்..



‘வாசிப்பு வித்தாக மனதில் விழும்.. மலராக உலகுள் முகிழ்க்கும்..’

வணக்கம் நண்பர்களே! தேனி சுந்தர், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தவர் கல்விக் குழுவில் இருந்து பணியாற்றியவர். புது விழுதின் ஆசிரியராக இருந்தவர். இப்போது, ஆசிரியர்களின் கருத்துகளை பதிவிடும், குரல்களை ஒலிக்கும் ‘புதிய ஆசிரியன்’ மாத இதழின் துணை ஆசிரியர்.; கல்வியாளர்; பள்ளிக் குழந்தைகளின் சொந்தக்காரர்;.மாணவர்கள் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்.;கல்வி சார்பாக கருத்துகளை, குரலொலியை தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’, ‘புதிய ஆசிரியன்’ மற்றும் ‘வண்ணக் கதிர்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருபவர். பணியிடமும் வசிப்பிடமும் கம்பம் தான்.

அவருடைய புத்தகங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவைதான். யாராவது ‘டுஜக் டுஜக்’ என்று ஒரு புத்தகத்திற்கு பெயர் வைப்பார்களா! துணிந்து வைத்திருக்கிறார்.. அந்தப் புத்தகமும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த புத்தகம் ‘சீமையில் இல்லாத புத்தகம்’ என்னடா இப்படி ஒரு பேரு என்று நினைத்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.. அடுத்து ‘மாணவர் மனசு’ அடுத்த புத்தகத்தின் பெயர் தான் நினைக்கவே நமக்கு குபீர் என சிரிப்பு பொங்குது. ‘ஓங்கூட்டு டூணா..’ இது ஏதாவது புரியுதா? இது என்ன மொழி?இதுதான் குழந்தை மொழி. ‘உன் கூட நான் டூ’ என்பார்களே குழந்தைகள், அதைத்தான் இப்படி சொல்கிறார்.

எப்படி ஓர் ஆசிரியரால், எழுத்தாளரால், துணிந்து இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து புத்தகங்களை எழுதமுடிகிறது என்றால், அது சுந்தருக்கு மட்டுமே சாத்தியம். அவருக்குள்ள தனித்துவமும், தன் பள்ளிக் குழந்தைகள் மேலும் கல்வியின் மேலும் இருக்கும் காதலும் நம்பிக்கையும் துணிவும்தான். இந்த சமூகத்தின் மேலுள்ள அக்கறையும்தான். இவ்வாறான கல்விக் கட்டுரைகளை எழுத வைத்துள்ளது..

‘ஓங்கூட்டு டூணா!’ – புத்தகத்தை படித்துவிட்டு சிரிக்காமல் யாருமே இருக்க முடியாது. நகைச்சுவை கலந்த, குழந்தைகளோடு இருக்கக்கூடிய தன்மையும் அதற்கான மனம், பாவம், உரையாடும் குணம் போன்றவைதான் இவற்றை நிர்ணயிக்கின்றன. இங்கு “உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்” என்று குழந்தை உரத்து சொல்லுகிறதா? தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறதா அல்லது உங்களை நோக்கி சொல்கிறதா? நம்மை நோக்கி வரக்கூடிய ஒரு கணைதான் உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்… என்று எடுத்துக்கொள்ளலாமா?

‘உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்’. என்ன ஜட்ஜ்மெண்ட்? யாருடைய ஜட்ஜ்மெண்ட்? : புத்தகத்தில் 25 கட்டுரைகள் உள்ளன. அவருக்கும் குழந்தைகளுக்கும், நடந்த அனுபவங்கள், உரையாடல்கள்தான், முதல் ஐந்து கட்டுரைகள்.இதில் முதல் கட்டுரை, ‘உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்…’ அந்தக் கட்டுரையில் ஒரு பள்ளியில் நடந்த மருத்துவ முகாம் நிகழ்வை விவரிக்கிறார்.

“சார், எனக்கு காய்ச்சல் இல்ல சார்…
கழுத்தக்கூட தொட்டுப் பாருங்க சார்…
இருமல் போயிருச்சு சார்…
மூக்கு ஒழுகல சார்…” பள்ளியில் ஊசிக்குப் பயந்த குட்டீஸ் ஒரே கலாட்டா. ஒரு வழியாக ஊசி போட வரல. கண் செக்கப் தான் சொல்லி சமாதானப்படுத்தி ஒவ்வொரு வகுப்பாக அனுப்பி வச்சோம் (இந்த நிகழ்வை சிரிக்காமல் கடக்க முடியாது. அப்படி ஒரு நிதர்சன எழுத்துகள்) அடுத்து… சுந்தரின் மூணாப்பு மாணவர்கள், கண் பரிசோதனை செய்பவர்களிடம் போகிறார்கள்.. அங்கு நடக்கும் உரையாடல்கள் சில…

சங்கிலி என்ற சங்கிலி மாசானம். அவன் ஒரு சிறப்புக் குழந்தை. அவனுடன் படித்தவர்கள் எல்லாம் ஏழு எட்டு வகுப்புகளுக்குப் போய்விட, சங்கிலி இன்னும் மூன்றாம் வகுப்பிலேயே ஸ்ட்ராங்கான அடித்தளம் போட்டு நிற்கிறான். அவர் பேசுவதை புரிந்து கொள்ள ஆசிரியர், ‘மாணவ டிரான்ஸ்லேட்டர்களை’ பயன்படுத்துவார். பெரும்பாலும் சங்கிலியே ஆசிரியரிடம், அவரது கோரிக்கைக்காகப் பேச வரும்போது, ஒரு மாணவரை அழைத்து வருவார். அந்த மாணவர் இப்போது கண் பரிசோதனை செய்ய செல்கிறார். அவர் 5 அடி தூரத்திலிருந்து பார்த்து 1,2,3. எப்படிச்சொல்லப் போகிறார் என சுந்தருக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஒரே திரில்லிங் உணர்வு. சங்கிலியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கிலி எதற்கும் பயப்படாமல் இரண்டு கண்ணையும் மாற்றி மாற்றி மூடி, 1,2,3 படார்ன்னு சொல்லியே விட்டான். நன்கு படிக்கும் குழந்தைகளே திணறும்போது இவன் எப்படி என்று எல்லாருக்கும் ஆச்சரியம் மாளலை. சொல்லிட்டு நேராக சங்கிலி, சுந்தரை நோக்கி வந்து, அவரிடம், “நிறைய பேரு நான் நம்பரை சொல்லமாட்டேன்னு நெனச்சாங்க சார். ஆனா கரெக்டா சொல்லிட்டேன் சார்..!” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே போய்விட்டான். எங்கள் எல்லாருக்கும் பொட்டில் அறைந்தது போல் இருந்தது என்கிறார் சுந்தர். “சங்கிலியின் அந்தச் சிரிப்பு எங்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்கிறார்..

‘அதான் உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்’. இப்பொழுது புரிகிறதா?மாணவர்களின் மனநிலையும் உடல்மொழியும் செயல்களும் வேறு. நம்முடைய கணிப்பு வேறு! ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.’ என்பது மிகச் சரியாகவே உள்ளது. இதை சிரிக்காமல் எப்படி படிக்க, கடக்க முடியும்..

உனக்குரிய இடம் எங்கே? : சுந்தரின் வகுப்புத் தோழர் சரவணன் யாருடனும் பேச மாட்டார். எப்போதும் ஆசிரியரிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருப்பார்.. ஆனால் சுந்தர் ஆசிரியரிடம் பாராட்டு வாங்குபவர். ஒரு நாள் இலக்கிய மன்ற நிகழ்வின்போது, சரவணன் மெலிதாக ஒரு பாடலை முணுமுணுக்க, எல்லா மாணவர்களும் சேர்ந்து “சரவணன் பாட்டுப்பாடப் போறான்” என்று தமிழ் ஆசிரியர் இடம் சொல்லி மாட்டி விடுகின்றனர். ஆசிரியர் பாடச்சொல்கிறார். சரவணன் தயங்கித் தயங்கி ஆரம்பிக்கிறார். ‘தங்க கலப்பை கொண்டு தரிசுழுகப் போறானாம். சொக்கநாத சாமி! என் சொக்கநாதர் சாமி!’ என்ற கிராமியப் பாடலை அற்புதமாக பாடி அசத்தி விடுகிறார். அனைவரது, கைதட்டையும் வாங்கி விடுகிறார். எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம் சரவணன் எப்படி பாடினார் என்று. பின்னர் மேல்நிலை வகுப்பு முடிந்து நண்பர்கள் எல்லாம் பிரிந்து விட்டனர். பத்தாண்டுகளுக்குப் பின் சுந்தர் அவரை தற்செயலாக பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிறார். வீட்டில் இறக்கி விடுவதாகச் சொல்லி தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போகிறார். வழியில் சரவணனை பற்றி விசாரிக்க, “இப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், கிராமியப் பாடல்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்” என்கிறார் சரவணன்.. இவருக்கு தூக்கி வாரிபோட்டது.. வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறார். இந்த சரவணனை பள்ளி கண்டுபிடிக்கவே இல்லையே என்று சிந்திக்கிறார். நம்மையும் சிந்திக்க வைக்கிறார். அவருக்குரிய இடம் பள்ளியில் இல்லை. ஆனால் சமூகத்தில் இருக்கிறதே.!

கணக்கும் இனிக்கும்: அந்த மாணவனுக்கு பிடிக்காத பாடம் கணக்கு. பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்.. வகுப்பில் வடிவியல் நோட்டு, காம்பஸ் எல்லாம் எடுத்து வரைந்தால் வட்டம் மட்டும் வரவே வராது அவருக்கு, நாங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் என மனதுக்குள் நினைக்கிறார். டீச்சர் போட்டாங்க பாரு..! ஒரு போடு முதுகுல.அன்னைக்கு தொடங்கியதுதான் பகை (படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிச்சாச்சு). கணக்குக்கு பயந்து எட்டாம் வகுப்பிற்குமேல் படிக்கப் போகவில்லை என வீட்டில் அடம் பிடிக்கிறார்..அப்புறம் பேசி, பக்கத்து ஊர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள் பெற்றோர். அங்கும் ஒரு கணக்கு வாத்தியார், சுருளிமுத்து சும்மா விளாசித் தள்ளிவிடுவார்… அவர் பெயரை கேட்டாலே மாணவர்கள் டவுசர் நனைந்துவிடும்; அப்படியொரு அதிரடி மன்னன்.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் கணக்கில் மட்டும் குறைந்த மார்க்… அப்புறமும் கணக்கு வேண்டாம் என்று கலைப்பிரிவு எடுத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார்..அங்கிருக்கும் கணக்கு வாத்தியாரும் சிரிக்கவே மாட்டார்… அதையும் முடித்து இப்பொழுது ஓர் அரசுப் பள்ளியில் வாத்தியார்… எப்படி தப்பிக்க கணக்கில் இருந்து…? கணக்குப் பாடவேளையில் மட்டும் எங்கிருந்து வருமோ அவ்வளவு கோபம்? குச்சி வைத்து அடி தூள் பரத்துவார்.

மாற்றம்: பின் அறிவியல் இயக்கக் கருத்தரங்கம் ஒன்றில் கிடைத்த பாடம் அவரை அடியோடு மாற்றுகிறது. வகுப்பறையில் வெற்றி பெற வேண்டியது கணக்குப் பாடமோ, ஆசிரியரோ அல்ல; மாணவன்தான் என்ற சிந்தனை பிறக்கிறது. குழந்தைகளுக்கு புரியுமாறு, அவர்கள் நிலையில் இருந்து எளிதாக நடத்த வேண்டும் என்று மனதில் உறுதிபூண்டு இனிமையாக நடத்துகிறார். அந்த ஆசிரியர் யார் தெரியுமா? நம்ம சுந்தர் தான்..! ஆசிரியர்கள் எப்படி இன்முகத்துடன் குழந்தைகளிடம் பழக வேண்டும்; கற்பிக்க வேண்டும் என்று கற்றுத்தரும் கட்டுரை இது.

வேலை நிறைய கிடக்கு!: ஒருநாள் மாலை துளிர் இல்லக் குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கச் செல்கிறார் சுந்தர்… என்ன பேசலாம் என்ற யோசனையில் கையில் இருந்த’ விஞ்ஞானச்சிறகு’ இதழை எடுத்து வாசித்துக் காட்டுகிறார். வாசித்துக் காட்டியதில் எந்தெந்த வார்த்தைகள் புரியவில்லை எனக் கேட்கிறார். சர்வதேசம், ஊழல், தனியார்மயம், அமல்படுத்து, பருவநிலை, லஞ்சம், மதவெறி, அறியாமை – போன்ற வார்த்தைகள் புதிதாக இருக்கிறதென்று சொல்கிறார்கள். என்னடா இது, நமக்கு நன்கு தெரிந்த, புரிந்த வார்த்தைகள் இந்தக் குழந்தைகளுக்கு புரியவில்லையே என நினைத்துவிட்டு, அவர்களுக்கு மிக எளிதாக புரிந்த அளவுக்கு விளக்கிச் சொல்லுகிறார்.. அது ஒரு எதிர்பாராத சமூக உரையாடல் சம்பவமாக மாறியதைப் பதிவு செய்திருக்கிறார்..

அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலை: பிரமாதமான கட்டுரை… சுந்தரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். ஆசிரியர் ஆன துவக்கத்தில் அவருக்கு வயது 19 மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கப்போனால், நீ எல்லா வகுப்பும் படித்துத்தான் வந்தியா என்கிறார் டாக்டர்… அந்த அளவுக்கு சின்னப் பையன். முதல் நாள் பணியேற்கச் செல்கிறார். எட்டாம் வகுப்பைக் கடந்துதான் தலைமை ஆசிரியர் அறைக்குப் போகணும்… எட்டாம் வகுப்புப் பசங்க எல்லாம் இவரவிட மொறட்டான பசங்களா இருக்காங்க… பார்த்ததுமே பயமாயிட்டுது இவருக்கு.. அந்தப் பள்ளி பனிஷ்மென்ட் பள்ளி என்றும் ஊருக்குள் பேச்சு… இந்தப் பசங்க நாம சொல்றத கேப்பாங்களா, மதிப்பாங்களா என்ன பலவிதமான வினாக்களோடு மனப்போராட்டம் நடத்துகிறார். அப்புறம் பழகி விட்டது. கையில் பிரம்பில்லாமல் எந்த ஆசிரியரும் போக மாட்டார்கள். ஆசிரியர்களுக்கு பிரம்பின் மேல் அப்படியொரு மாளாக் காதல். யாரைக்கண்டு மாணவர்கள் அதிகம் பயப்படுவார்கள் என்பதில் போட்டி மிக மோசமான போட்டி… அடிக்கு பயந்து மாணவர்கள் மருந்தை குடித்த கதை, அடுத்த பள்ளிக்கு ஓடிய கதை உண்டு. நினைக்கவே வயித்தக் கலக்குதா? பக்கத்துப் பள்ளிக்கூடத்தை காப்பாத்திய பெருமை எல்லாம் உண்டு. அந்தப் பள்ளி மாணவர்கள் சுந்தருக்குப் பயந்தே பள்ளிக்கூடத்தை விட்டுட்டு ஓடுறாங்கன்னு பேசும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது அவருக்கு…!

ஒருமுறை வீட்டுக்குச் செல்ல, பேருந்திற்காக சுந்தர் காத்திருக்கும்போது, அன்று பள்ளியில் அடிவாங்கிய மாணவனின் தந்தை கோபமாக வருகிறார்… இவருக்கோ மனசுக்குள் ஒரே படபடப்பு… என்ன நடக்கப் போவுதோ என… ஆனால் திடீரென்று நிலைமை மாறுகிறது. பக்கத்தில் இருந்த ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு ஆசிரியருக்கு ஆதரவாக பேசுகிறார்கள். வாத்தியார்னா அடிக்காமலா சொல்லிக் கொடுப்பாங்க? கொஞ்சுவாங்களா? அடியாத மாடு படியாது… நீ அடிக்காத அடியா… சீமையில இல்லாத பிள்ளை பெத்துட்டான் போடா…” அப்படின்னு சத்தம் போட்டு சுந்தரைக் காப்பாற்றுகின்றனர்..

ஆசிரியர் இயக்கம், எழுத்தாளர் சங்கம் என ‘சந்தக் கவிஞர் சுந்தர்’ பட்டமெல்லாம் பெற்று கவிதை வாசித்துக்கொண்டிருந்த சுந்தருக்கு அறிவியல் இயக்கத் தொடர்புகள் கிடைக்கின்றன. ‘பேராசிரியர் மாடசாமியின் ‘எனக்குரிய இடம் எங்கே’ புத்தகம் கிடைக்கிறது. அதை வாசித்த கணம் முதல் வகுப்பறையில், ஒடுக்கப்பட்ட, குரல்களை இழந்தவர்களாக உள்ள குழந்தைகளின் வழக்கறிஞராக மாறி உள்ளேன், வாதாடிக்கொண்டே இருப்பேன்’ என்கிறார் இப்ப கித்தாப்பாக. எப்படி இந்த மாற்றம். இது எல்லா ஆசிரியர்களுக்கும் வர வேண்டும். அரசாணைகளை நம்பவில்லை; அதிகாரங்களை நம்பவில்லை; இதயங்களை வென்றுவிட எளிய வார்த்தைகள் போதும், வாதங்களை எதிர்கொள்ள துணிந்து, அதன் நியாயங்களை ஏற்றி எவ்வித வெட்கமும் இன்றி அவர் எழுத்துகளுக்கு முன் மண்டியிட்டு எனக்குள் இருக்கக்கூடிய காட்டுமிராண்டி மரித்தே போனான் என்கிறார் சுந்தர். இப்படி ஏராளமான ஆசிரியத் (ஆசிரியத்தனம்)தற்கொலைகள் அதிகரிக்க வேண்டும் என்கிறார்.

நானும்கூட அறிவியல் இயக்கத்திற்கு வருவதற்கு முன்னால் மகனை அடிப்பேன், மாணவர்களிடம் கோபம் கொள்வேன். அனைத்தையும் மாற்றியது அறிவியல் இயக்கம்தான். மாணவர்களிடம் நான் அணுகும் முறையே வேறுவிதமாகிவிட்டது.. கோபப்படாமல் அன்போடு அரவணைத்துச் செல்லும் தன்மை, அறிவியல் இயக்கத்தால்தான் சாத்தியமாகும். இப்படி, விடுங்க சார்! திட்டாதீங்க..மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும், கையக்கட்டு வாயைப் பொத்து, மாநிலக் கல்விக்கொள்கை: தேவை மாற்றத்துக்கான உரையாடல் என கட்டுரைகள். போகப் போக, கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாகி அற்புதமாக பயணிக்கின்றன. கருத்துகள் ஆலமரமாக விரிகின்றன. மாணவர்களைப் பற்றிய கருத்துகளை, ஆசிரியர்கள் மனதில் உலா வர முயற்சி செய்துள்ள சுந்தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பள்ளிக்கூடக் குழந்தைகளிலிருந்து ஆசிரியர்கள், பொது சமூகம், என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. வாழ்த்துகள் சுந்தர். மேலும் மேலும் குழந்தைநேய கருத்துகளுடன் புத்தக உலகில் உலா வருக...

‘வாசித்த மனம் மலரும்; மலர்ந்த மனம் உலகை மாற்றும்.’ 
-
பேரா.சோ.மோகனா, பழனி
புத்தகம் பேசுது இதழ், மே.2025

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!