மாணவர் மனசு நூல் குறித்து முல்லை தெய்வேந்திரன் வாசிப்பு அனுபவம்
குழந்தைகளின் அகவுலகை நாம் புரிந்து கொள்வதன் மூலம் நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண இயலும்.. - ஆலிசன் கோப்னிக்..
மாணவர் மனசு நூல் குழந்தைகளை அவர்களின் அக உலகத்தை நெருங்கி நின்று தரிசிக்க நல்ல வாய்ப்பு. தேனி சுந்தர் ஜனநாயக வகுப்பறையை பெயரளவில் இல்லாமல் நடைமுறையிலும் நடத்தி வருகிறார். குழந்தைகளின் உரையாடல்களும் அவர்களை உற்சாகப்படுத்த வகுப்பறையில் தன்னை புதுப்பிக்க சுந்தர் எடுக்கும் முயற்சிகளும் மிகவும் அருமை.

தனது வகுப்பறைக்கு தேவையான கற்பித்தல் உத்திகளை தேர்வு செய்து குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவது கற்பித்தலில் புதுமையை நிகழ்த்த தொடர்ந்து முயல்வது நம் பள்ளிகளில் நடைபெற வேண்டிய அடிப்படை மாற்றங்களில் ஒன்று. உதாரணமாக டும் டும் டும் கட்டுரை. கதையாக தொடங்கி, பாடலாக மாறி எல்லோரும் இணைந்து செய்கிற ஒரு செயல்பாடாகவும் மாறியதை ஆசிரியர் உணரும் தருணம் அற்புதம்.
குழந்தைகள் முன் தங்கள் ஒளியை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பார் பேராசிரியர் மாடசாமி அவர்கள்.. சுந்தர் அதை தன் வகுப்பறையில் நிகழ்த்துகிறார். "சார் பயந்துட்டாரு" கட்டுரை அதற்கு ஒரு உதாரணம். வெகு இயல்பான மொழிநடை நூலின் தனிச்சிறப்பு. பொய்க் கோபங்கள், அதை ரசிக்கிற மனம் மிக அவசியம் என கருதுகிறேன். அது சுந்தருக்கு வாய்த்திருக்கிறது.
குழந்தைகள் மேல் கோபம் கொள்ள முடியுமா? அது சாத்தியமா? அவ்வாறு குழந்தைகளை அணுகுபவர்கள் நிச்சயம் பரிசோதிக்கப்பட வேண்டியவர்கள். இரண்டு பக்கங்களில் ஒரு கட்டுரை என்பது நூலின் தனிச்சிறப்பு. கிஷோர்களின் மாணவர் மனசு கடிதம் அடடா. மாணவர் மனசு பெட்டி பயன்பாட்டுக்கு வந்தது கூடுதல் மகிழ்ச்சி. அம்முவின் வீட்டில் பொங்கலும், பாயாசமும் சாப்பிட்ட காமராசர் தாத்தாவுக்கு நன்றி. குமரேசனின் அப்பாவின் குரல் நம்மை உலுக்குகிறது. மனிதக் கழிவை மனிதன் அகற்றும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.
அதிகார மனோபாவத்தை வெளிச்சமிட்டு காண்பிக்கும். "அதெல்லாம் நமக்கு ஒத்து வராது சார்" கட்டுரை புதிய விவாதங்களை உருவாக்கும். கட்டுரையின் முடிவு கிளாஸ். அதுவும் "அவர் எல்லாம் நம்ம ஸ்கூலுக்கு ஹெச்.எம் மா வர்றதா இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க சார் நாங்க வேற ஸ்கூலுக்கு போயிக்கிறோம்" இப்போதும் சிரிக்கிறேன் இதை நினைத்து...
கால அட்டவணைப்படி கற்றல் நிகழாது. எவ்வளவு உண்மையான வார்த்தை. குழந்தைகள் விரல் விட்டு எண்களைச் சொல்லும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் ஆம் நிச்சயமாக. நாலு தகுணியா, வேகு வேகுன்னு, பொர்றா போன்ற வட்டார வழக்கு வார்த்தைகளை வாசிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. "சங்கடப்படல"கட்டுரை அரசுக்கு நல்ல கோரிக்கை. குட்டிக் குழந்தைகள் படிக்கிற இடத்துல ஒரு ஆயா போட்டா என்னவாம்? நல்ல கேள்வி. "இயல்பிழக்காமல் இரு"கட்டுரை நம்மை யோசிக்க வைக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்ப இன்னும் நாம் பழகவில்லை தானே. புரோட்டா கட்டுரை அவ்வளவு அழகு. குழந்தைகள் நம்மை உற்று கவனிக்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியரின் ஒவ்வொரு செயல்பாடும் குழந்தைகளை மகிழ்விப்பதாய், கற்றுக்கொள்வதற்கு துணை புரிவதாய் அமைய வேண்டும். மாணவர் மனசு நல்ல அனுபவத் தொகுப்பு.
-
முல்லை தெய்வேந்திரன்
Comments
Post a Comment