சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது

நூலில் இருந்து..

பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது.

வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா?

ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா? படம் எழுப்பும் கேள்வி.

அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்..

இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது.

கல்வி சார்ந்த நூல்களில் இருக்கிறது. நிச்சயம் உங்களது பார்வை மாறும் உங்கள் முன் புதிய பள்ளி, புதிய வகுப்பறை மலரும். குழந்தை நேயப் பள்ளியை, குழந்தை நேய கல்வியை, குழந்தை நேய உலகை படைக்க, உந்திக் கொண்டே இருக்கும்.



தங்கள் சக நண்பனை காக்க துணிந்த குழந்தைகள் தானே, நாளை சக மக்களைக் காக்கக் குரல் கொடுப்பார்கள்.

வகுப்பறைகளில் நாம் செய்வதில் நியாயம் இல்லாத பொழுது குழந்தைகளின் குரல்களை ஒடுக்க பார்க்கிறோம். இதையெல்லாம் பற்றி ஆசிரியர்கள் தமக்குள் விவாதிக்க தொடங்கினால் தான் மாற்றங்கள் வரும்.

வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லாததை படித்தால் தான் தரமான கல்வி என்று எந்த கல்வியாளர் சொல்லி இருக்கிறார்?

வாழ்க்கை சமமில்லை , வாய்ப்புகள் சமமில்லை, வசதிகள் சமமில்லை, போட்டி மட்டும் சமமாக இருக்கும் என்றால் அது நியாயமா?

பள்ளி அமைப்பில் எவை எவை மேலிருந்து கீழாக கொண்டு செல்லப்படுகின்றன என்று பார்த்தால், அதில் முதலிடம் பெறுவது இந்த வாயடைக்கும் வேலைதான். இந்த படிநிலை அப்படியே கீழ் இறங்கும்.

கேள்வி கேட்டாலே கலகம் செய்வதாய் சொல்கிறார்கள். கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அதிகாரத்தின் போக்குகள் மாறவில்லை என்பதுதான் செய்தி.


அன்பு காட்டுவதற்கு எந்த எல்லையும் தேவையில்லை. ஆனால் இன்னொரு மனிதனை அவமதிக்க, புறக்கணிக்க, நிராகரிக்க, எந்த உயர்நிலை பதவியில் இருந்தாலும் அப்படியான நிபந்தனையற்ற அதிகாரம் யாருக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது?

அதிகாரம் ஆபத்து என்றால், அதற்கு எதிரான நமது மௌனம், அதைவிட ஆபத்தானது.கொடுமையானது. முன்னாடி நின்று பேசுவதாலேயே ஒருவர் எல்லாம் தெரிந்தவர் ஆகிவிட முடியாது. உட்கார்ந்து கேட்பதனாலேயே ஒன்றும் தெரியாதவர்களாய் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் நம் அதிகாரத்தை காட்டும் சிறு சிறு இடங்கள் ஆயிரம் இருக்கும். அது என் இயல்பு என்று கடந்து விடாமல் நாமும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.


கீழ்மட்ட நிலையில் இருக்கும்போது, தான் கண்ட கசந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் நாம் கொடுத்து விடக்கூடாது என்று நினைப்பது தானே பக்குவப்பட்ட நிலை.

நம் கவலை எல்லாம் சிலபஸ், பள்ளி, மாநிலம், தேசிய அளவிலான தேர்வுகள், மதிப்பெண்கள், தேர்ச்சி விழுக்காடு, முதலிடம், இரண்டாம் இடம், என்ற பெயர்களில் பள்ளிகள், குழந்தைகளின் மனதில் வார்த்தை வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று சொல்வதற்கு ஒரு முயற்சியும் செய்யாத பள்ளிகள், இவை எதுவும் உனக்கு தெரியவில்லை எனவே நீ முட்டாள் என்று சான்று அளித்து விரட்டிவிட சதா சர்வ காலமும் தவியாய் தவிக்கிறது.

கற்றலுக்குப் பள்ளி, வேலை நாள், விடுமுறை நாள், பாடவேளை, இடைவேளை, என்று எந்த கதவும் இல்லை.

எதை அறிவாக, கற்றலாக அங்கீகரிக்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம்? என்பதில் நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிக்க வேண்டும்.

எந்தக் கள நிலவரமும் தெரியாமல், உணர்ச்சியற்ற எந்திரங்களை போல ஆசிரியர்களை, பள்ளிகளை நடத்துகின்ற, அதிகாரிகளும் இதற்கு கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டும்.

வாட்ஸ் அப் தகவல்கள், மின்னஞ்சல்கள், அதிகாரிகளின் ஆணைகள், மட்டுமே ஒரு துறையை நடத்தி விட முடியாது. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு இவற்றை தாண்டிய ஒரு தன்மை தேவை.

ஆசிரியர்களும், மாணவர்களும், எதிரெதிரே நிற்க வேண்டியவர்கள் அல்ல. கலந்து நிற்க வேண்டும். சொல்பவரும், கேட்பவரும் ஆக இருக்க நினைப்பதும் கூட முக்கியமான பிரச்சனை தான். கலந்துரையாடும் இடமாக வகுப்பறைகள் மாற வேண்டும்.

பரந்த விரிந்த உலகத்தில் திரியும் குழந்தைகளை, சிறு வகுப்பறைக்குள், ஒரு புத்தகத்திற்குள், பின்பக்க கேள்விகளுக்குள், அடைத்து விட நினைக்காமல், சிறு புத்தகத்திலிருந்து சிந்தனை சிறகும் விரித்து பறந்து, விரிந்த வெளி உலகத்திற்குள் பிரவேசிக்க செய்ய வேண்டும்.

சிறகுகள் வெட்டப்பட்டு கூண்டுக்குள் ஒடுக்கப்பட்ட பறவையை போல அவர்களை சிதைத்து, கூண்டு எப்படியெல்லாம் இருக்கலாம் என்று திட்டமிடுவதே நவீன கல்வி. எந்த விவாதத்திலும் நீங்கள் பேசுவது உள்ளே சிக்கிய பறவையை பற்றி அல்ல கூண்டை பற்றியது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?

இந்தப் புத்தகம் விரிக்கும் ஒவ்வொன்றும் பெரிய பேசுபொருளின் சத்தான பகுதிகளை திரட்டி தரும் சிறிய கட்டுரைகள். குழந்தை மீது செலுத்தப்படும் அதிகாரம் எங்கிருந்து உருக்கொள்கிறது? என்பதன் ஊற்றுக்கண்ணைத் தேடுகின்ற முயற்சி.

எனது 38 ஆண்டுகால ஆசிரியப் பணியில் நான் பார்த்த, பேசிய, பல விஷயங்களை நினைவுபடுத்துகிறது இந்நூல். ஒவ்வொரு ஆசிரியரும் படித்து அதன்படி நடக்க வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து தந்திருக்கிறார் நூல் ஆசிரியர்.


நூல்- உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார்
தேனி சுந்தர்
வாசல் பதிப்பகம்

தோழமையுடன்
சீனி சந்திரசேகரன்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!