நூலறிமுகம்: புதிய பரிதியின் தமிழ் என் காதலி....
எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பது போல எட்டுத்திக்கிலும் கவிஞர்கள் கூட்டம்.. ஆளாளுக்கு ஒரு வட்டம்! அதற்குள் இருந்துகொண்டு எதையாவது எழுதுவதும் அதை கவிதை என வெளியிடுவதும் இன்று சர்வசாதாரணமான கலாச்சாரமாகிவிட்டது...
என்னைக் கவிஞன் என்று இந்த சமூகம் கூற வேண்டும்.. அதற்கான முயற்சிகளாக எதையேனும் எழுதுவேன், படைப்பேன் என பகட்டுத்தனமாக கூறுபவர்களுக்கு மத்தியில்...
நன்றாக நடக்க, ஓடப்பழகிய நான்காம், ஐந்தாம் அகவைப் பருவத்திலேயே புரட்சி பற்றிக் கவி பாடினால் என்னவென்று சொல்வது? சமணத்தை ஒழிக்கச் சபதமேற்று ஆயிரம் பாடல்களை எழுதிய திருஞான சம்பந்தரைக் கருவிலே திருவுடையார் எனப் போற்றுகின்றனர்.. அப்படியானால் தாலாட்டுக் கேட்கும் பருவத்திலே இப்பாழடைந்த சமூகத்தை புரட்சியால் நீராட்ட நினைத்துக் கவி பாடிய இக்குட்டிப் புலவனை என்னவென்று சொல்வது?
ஊனமுற்றவனாய்ப்
பிறக்க ஆசை
அந்த ஊனமுற்ற உறுப்பு
வயிறாக இருந்தால்!
வைகை வற்றியதற்கு
வருத்தப்படாமல்-அதில்
மீன் பிடிக்க நினைக்கிறாய்...
பிறந்த நாள்
கேக் வெட்டும்போது
நினைத்துக் கொண்டேன்..
அம்மாவின்
பிரசவ வேதனையை!
இது போன்ற இன்னும் பல சூழலியல், பெண்ணியம், சமூக மாற்றம் குறித்த எத்தனையோ வரிகளை நம்மால் சுட்டிக்காட்ட முடியும் தமிழ் என் காதலி நூலில் இருந்து.......
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் புதிய பரிதியின் கவிதைத் தொகுப்பு இந்நூல்.. சூரியனைக் கடவுளாக, ஆற்றலின் ஊற்றாக, ஆண்பாலாக எண்ணிப் பலரும் கவிதை படைத்திருக்க புதிய பரிதி சூரியனை ஒரு பெண்ணாகப் பார்க்கிறார்.. தமிழைத் தாயாக, உயிராக.. இன்னும் பலவாகப் பலரும் உருவகித்துப் பாடியிருக்கிறார்கள்.. புதிய பரிதி தமிழைத் தன் காதலியாக எண்ணி மகிழ்கிறார்..
இளவயதில் இவ்வளவு கருத்துச் செறிவும் கற்பனை வளமும் சமூக மாற்றம் குறித்த அக்கறையும் கொண்ட கவிதைகளைப் படைக்கக் காரணம்? அவர் பேசுவதும் பழகுவதும் கவிஞர்களுடன்! இவருடைய கவிதைகள் மூத்த கவிஞர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது... புதிய பரிதி அடுத்த தலைமுறைக்கான கலை இலக்கிய பண்பாட்டுப் போராளி என்ற நம்பிக்கைக் கீற்று நம்முன் ஒளிர்கிறது...
- தே.சுந்தர்
வீதி இதழ்- டிசம்.2008
Comments
Post a Comment