இந்த நிலை மாற வேண்டும் தானே..?

1953 ல் சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எனது ஆய்வுகளுக்கு இந்திய அரசு ஊக்கமளிக்கவில்லை என்பதைப் பகிரங்கமாகவே அறிவித்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முன்னிலையிலேயே தனது ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைப் போட்டு நொறுக்கினாராம் நமது ஜி.டி.நாயுடு... அன்றிலிருந்து 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நிலைமை மாறியுள்ளதா?

சர்வதேச அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நமது நாட்டில் இருந்து ஒன்று கூட இடம்பெறவில்லை.. தரத்தை மேம்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.. இந்த நிலை மாற வேண்டுமென தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் கலந்துகொண்ட நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி...

(குடியரசுத் தலைவர் பேசி சில மாதங்கள் கழித்து அந்தப் பட்டியல் குறித்த செய்திகள் நமது நாளிதழ்களில் வெளிவந்தன... எப்படியாவது இடம் பிடித்துவிடவேண்டும் சிறந்த 100, சிறந்த 200 என நீட்டிக்கொண்டே போனதில் சிறந்த 500ல் 4ம் 800ல் 20ம் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்தனவாம்... இந்த நிலை மாற வேண்டும் தானே..?)

இந்திய அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட நமது பிரதமர் மன்மோகன் சொல்கிறார்.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. எனவே அதற்கான நிதியை 1%லிருந்து 2% ஆக உயர்த்த வேண்டும் என்றார்...

அறிவியல் ஆராய்ச்சிக்கு போதிய நிதியை ஒதுக்காத அரசியல் வாதிகள் முட்டாள்கள்.. (பின்னர் விளக்கமளிக்கையில் இந்த நிலைமைதான் முட்டாள்தனமானது என்றார். ஆக நிலைமை சரியில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை). மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது.. அதைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை மிகச்சிறப்பாகவே ஆய்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கொந்தளித்தார்.. பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்து கடந்த ஆண்டில் பாரத ரத்னா விருதும் பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்

(சீனா நம்மைவிட நான்கு மடங்கு அதிகமாகவும் அமெரிக்கா 75 மடங்கு அதிகமாகவும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குச் செலவிடுகின்றன.. இந்த நிலை மாற வேண்டும் தானே..?)

2007ல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆய்வுக்குழுமத்தில் (CSIR) ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் சிவா அய்யாத்துரை.. இவர் நம்ம ராஜபாளையத்துக்காரர். அறியாப் பருவத்திலேயே அமெரிக்காவில் குடியேறிய குடும்பம்.. இன்று உலகமெங்கும் தகவல் தொடர்புக்கான புதிய வடிவமாகப் பிரவாகம் எடுத்திருக்கும் மின்னஞ்சல் (இமெயில்) இவரது கண்டுபிடுப்புதான் என்கிறார்கள்.. கண்டுபிடித்தபோது இவருக்கு வயது வெறும் 14.. அதற்கான காப்புரிமையும் பெற்றிருக்கிறார்.. கூடுதல் விபரங்களுக்கு இணையத்தில் ஏராளமாய்த் தகவல்கள் இருக்கின்றன.. 

கண்டிபிடிப்புகளுக்கு சுதந்திரம் அவசியம் என்ற தலைப்பில் ஒரு 40 பக்க கட்டுரை எழுதி (தட்டச்சு செய்து) உலகம் முழுவதுமுள்ள 4000 விஞ்ஞானிகளுக்கு இமெயில் அனுப்பிவிட்டார்.. அவர் நாட்டைவிட்டே தப்பி ஓடுமளவிற்கு நிலைமை மோசமானது.. ஊழலும் நேர்மையற்ற அரசியலும் இருக்கும்வரை இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி என்பது முழுமையாகச் சாத்தியமாகாது என்கிறார் அவர்.. இந்த நிலை மாற வேண்டும் தானே..?

புதியன கண்டுபிடிக்கும் 140 நாடுகளில் இந்தியா 66வது இடம்.. அறிவுற்பத்தி வரிசையில் அதாவது அதிகமான ஆய்வுக்கட்டுரைகள் வெளிவரும் 34 நாடுகளில் இந்தியா 33வது இடம்.. நமக்கு அடுத்து ஈரான் இருக்கிறதாம்.. சீனா ஆராய்ச்சியாளர்களால் உலகளவில் 16% ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருகின்றன.. இந்தியாவின் சார்பில் 2% மட்டுமே.. இந்த ஆய்வுக்கட்டுரைகளும் பெரிய அளவில் பிற நாட்டினராலோ ஏன் நம் நாட்டினராலோ கூட எவ்விதத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது நமது கூடுதல் வருத்தத்திற்காக?

அமெரிக்காவில் பத்துலட்சம் மக்கள்தொகைக்கு 4660 பேர் ஆராய்ச்சியாளர்களாக இருக்கின்றனர்.. தென்கொரியாவில் 4500 பேர் சீனாவில் 1500பேர் நமது நாட்டில் 140 பேர் தான்...

இந்தக் குறைவான கூட்டத்திலிருந்தே நாம் சந்திரயான் அனுப்பியிருக்கிறோம்.. ஒரு நாளைக்கு 10 இலட்சம் கி.மீ பயணிக்கும் மங்கள்யான், புதிய மைல் கல்லாக ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்!

இந்தியாவிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியலுக்கான முதல் நோபல்பரிசை வென்ற சி.வி.ராமன் தமிழர்.. தற்போதைய இந்திய சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் மயில்சாமி அண்ணாத்துரை, சுப்பையா அருணன், வி.நாராயணன், கே.சிவன் போன்றோரும் தமிழர்கள்... அந்த வகையில் நாம் பெருமை கொள்ளலாம்...

இருந்த போதும்...

அறிவியல் இயக்க நண்பர்களுக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன... அறிவியல் ஆராய்ச்சி கூடுதல் நிதி ஒதுக்க நிர்பந்திக்கும் பணியைச் செய்ய வேண்டும்.. நமது அறிவியல் பிரச்சாரம் சரியான பாதையில் செல்கிறதென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள்.. மக்களின் கேள்விகள் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைச் சரியாக்கும்.. மக்களின் கேள்விகள் நாட்டின் சுயசார்பை வலியுறுத்தும், மதவெறிக்கும்பலை விரட்டியடிக்கும்... இல்லையெனில் இருக்கின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் விதமாகவும், போலி அருளிரக்கத்தின் விளைவாகவும் அறிவிக்கப்படுகின்ற கவர்ச்சித் திட்டங்களுக்கு விலைபோகத்தான் செய்வார்கள்...

பதில் சொல்ல மட்டுமே பழக்குகின்ற பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராகாமல்...

பட்டங்கள் கொடுப்பதற்கென்றே இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை மேம்படுத்த முயற்சிக்காமல் அறிவியல் பரவாது... அறிவியல் மனப்பான்மை வளராது...

அறிவியல் தினத்தை முன்னிட்டு விவாதங்களைத் துவங்குவோம்...
நன்றி: விஞ்ஞானச்சிறகு மாத இதழ்
பிப்ரவரி,2014

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!