கொஞ்சம் விளையாட்டு... கொஞ்சம் அரசியல்... கொஞ்சம் அறிவியல்....
கிரிக்கெட் கிறுக்கு:
கிரிக்கெட்.... கிரிக்கெட்.... கிரிக்கெட்.... நம் நாட்டில் முளைச்சது, நரைச்சது என அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விளையாட்டாக உருவாக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் மட்டுமே..... கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, வீரட் கோலி பெரும்பாலான இந்திய மக்களுக்குத் தெரிந்த விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்.... இவர்களின் மீது விழுந்த வெளிச்சத்தின் சிறுபகுதி கூட நமது நாட்டின் பிற விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்ததில்லை... யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்கைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு ஹாக்கி வீரர்கள் சர்தார் சிங், தரம்வீர் சிங்கைத் தெரியும்? இந்தியக் கால்பந்து ஹீரோ பூட்டியாவைத் தெரியும்? விஸ்வநாதன் ஆனந்தை விதிவிலக்காகச் சொல்லலாம். நம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவி கெடுதல் விளைவிக்கும் பார்த்தீனியம் போல ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளை அழித்தொழித்த பெருமை இந்த கிரிக்கெட்டுக்கு உண்டு... கொட்டோகொட்டெனப் பொழியும் பணமழையில் நனைய விரும்பி கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்புக்கு மல்லுக்கட்டும் அரசியல்வாதிகளையும் பெரு முதலாளிகளையும் நாம் அறிவோம்... அரசியல், பொருளாதாரம், வணிகம், கலாச்சாரம் என எந்தவிதத்திலும் பல்வகைத்தன்மையை அழித்து நடக்கும் ஒற்றைத்துருவமயமாக்கலை நாம் ஆதரிக்க முடியாது இல்லையா? ஏன் திடீர்னு இப்படி என்கிறீர்களா? எல்லாம் காரணமாகத்தான்... !

13வது உலகக் கோப்பை ஹாக்கி:
சமீபத்தில் மூன்று, நான்கு உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி, சில போட்டிகள் முடிந்துவிட்டன. நடந்துகொண்டுமிருக்கின்றன. ஒன்று ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி, இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி- இவையிரண்டும் நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் மே 31ல் தொடங்கி ஜூன் 15ல் முடிந்திருக்கின்றன. இரண்டிலுமே இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் தேர்வாகின. ஆடவருக்கான இறுதிப்போட்டியில் ஆஸி அணி வாகை சூடியது. மகளிருக்கான போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட 12 அணிகளில் இந்தியாவும் ஒன்று... 1975ல் வாகையர் பட்டம் வென்ற பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அரை இறுதிக்குக் கூட தகுதிபெறவில்லை என்ற பெருமையோடு சென்ற நமது இந்திய அணி அப்பாடா கடைசி இடம் நமக்கில்லை... நமக்கும் கீழே ஆளு இருக்கான் என்றளவில் தப்பிவந்துள்ளது... ஆனால் பாருங்கள்... இது குறித்த விவாதங்கள் எங்கும் நடந்ததா? நடக்குமா? போட்டி நடந்ததே வெளியில் தெரியாது.... ஏனென்றால் இங்கு கிரிக்கெட் அளவிற்கு பணமழை, தூரல் கூட கிடையாது...
20 வது உலகக் கோப்பைக் கால்பந்து:
சரி, அதை விடுங்க... இந்த ஹாக்கிப் போட்டிகளில் கலந்துகொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஜெர்மனி, நெதர்லாந்து, தென்கொரியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளின் அணிகள் மற்றொரு உலகக் கோப்பை போட்டியிலும் ஆடி வருகின்றன. மேற்சொன்ன நாடுகளையும் சேர்த்து பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 32 நாடுகள் பங்கேற்றுள்ள 20 வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 1930 முதலாக நடந்து வருகின்ற உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் கலந்துகொண்ட ஒரே நாடு பிரேசில் தான்... அதிகபட்சமாக ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற பெருமைக்குரிய நாடும் பிரேசில்தான்... சொந்த நாட்டில் வாகைசூடும் வாய்ப்பை உருகுவே அணியிடம் பறிகொடுத்த பிரேசில் இந்த முறை அதைச் சாதிக்கத் துடிக்கிறது....
கஞ்சிக்கே லாட்டரி.... கைக்கு என்னடா பேட்டரி...?
இந்தப் போட்டியின் ஒட்டுமொத்தச் செலவு 85000 கோடி மட்டும்தானாம்!? கடந்த 2010 உலகக்கோப்பை போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா செலவழித்தது 24000 கோடி... இதைக் கேட்டுத் தான் பிரேசில் மக்கள் கொந்தளித்துப் போய் கடந்த பல மாதங்களாகவே போட்டி நடைபெறும் பிரேசில்லா, ரியோ டி ஜெனிரோ போன்ற பல்வேறு நகரங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்... கடந்த மே 10ஆம் தேதி பிரேசில் நாட்டின் பிரபல தெருவோரக் கலைஞர் பாலோ இட்டோ, சாவோ பாவ்லோ என்ற நகரில் மக்களை ஈர்க்கும் வகையில் பல ஓவியங்களை வரைந்து கொண்டிருக்க.. அதில் ஒரு ஓவியம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது... மக்களைக் கொந்தளிக்க வைத்தது... அரசாங்கத்தை அதிரவைத்தது... அப்படி என்ன விசேசம்?

அந்த ஓவியத்தில் எலும்பும் தோலுமாக பசியால் கதறியழும் ஒரு சிறுவன், உணவுக்காக மேசையில் காத்திருக்க... அவனது முன்னால் உள்ள தட்டில் வைக்கப்பட்டுள்ள தட்டில் உணவு இல்லை.. மாறாக கால்பந்து இருக்கிறது! சமூக வலைத்தலங்களில் அதிகம் எடுத்தாளப்பட்ட ஓவியமாக அமைந்தது.. நாடு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது இவ்வளவு ஆடம்பரமாக, இவ்வளவு பொருட்செலவில் இந்தப் போட்டிகளை நடத்தியே ஆகவேண்டிய அவசியமென்ன என மக்கள் கேட்கிறார்கள்... நம்ம பாணியில் கேட்பதானால் கஞ்சிக்கே லாட்டரி.... கைக்கு என்னடா பேட்டரி...? என்கிறார்கள் மக்கள்.... நியாயம்தானே?
கோல் கோடு (Goal Line) தொழில்நுட்பமும் ஆருடங்களும்:
இப்படி மக்கள் போராட்டங்களைச் சமாளித்து போட்டிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோல்கோடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரு கோல் கம்பங்களிலும் தலா 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கேமராக்கள் ஒரு நொடியில் 500 படங்களை எடுத்துத் தள்ளக்கூடியவையாம். என்னதான் உஷாராக இருந்தாலும் நடுவர்களால் முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளை நாம் கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அதுபோன்ற குழப்பங்களுக்கு வேலையே இல்லாமல் செய்கிறது இந்த தொழில்நுட்பம். கோல் கம்பத்தை நோக்கிக் கடத்தப்படும் பந்து கோல் கோட்டைக் கடந்துவிட்டால் உடனே நடுவரின் கையில் இருக்கும் கருவிக்கு தகவல் போய்விடும்.. அந்த அணிக்கு கோல் எண்ணிக்கை உயரும்.
இப்படி ஒருபக்கம் அறிவியல் தொழில்நுட்பம் அசரவைத்தால் மற்றொருபக்கம் நம்ம ஊர் கிளி சோசியம் மாதிரி ஆடுமாடுகள் தவிர்த்து பல விலங்குகளை வைத்து போட்டி முடிவுகள் குறித்து ஆருடம் சொல்லும் அபத்தங்களும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.. ஆம் நண்பர்களே, கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது பால் (Paul) என்றழைக்கப்பட்ட ஆக்டோபஸ் போட்டி முடிவுகளை மிகச்சரியாகக் கூறிவிடுவதாக உலகம் முழுவதும் பிரபலமானது. ஜெர்மனியில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினப் பூங்காவில் வளர்க்கப்பட்ட அந்த ஆக்டோபஸ் ஜெர்மனி அணி பங்கேற்ற போட்டி முடிவுகளை கணித்தபோது ஜெர்மனிக்குச் சாதகமாக அமைந்தபோதெல்லாம் ஆக்டோபஸைக் கொண்டாடிய ஜெர்மானிய கால்பந்து ரசிகர்கள், ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிய போட்டியில் ஸ்பெயின் அணி வெல்லும் எனக் கணித்தபோது (கணிப்பு பலித்தது!) கொந்தளித்த ரசிகர்கள் உன்னைச் சுட்டுத்தின்னாமல் விடமாட்டோம் எனக் கிளம்பிவிட்டனர்... அதிலும் கொடுமை ஆக்டோபஸுக்கு பாதுகாப்பு கொடுக்க, பராமரிக்க ஸ்பெயின் தயாராக இருக்கிறது என அதன் அதிபரே அறிவித்திருக்கிறார். கடைசியில் 2010 அக்டோபரில் ஆக்டோபஸ் தானாகவே இறந்துவிட்டது.

விடுவானா மனுசன்? அடுத்த விலங்கைத் தயார் செய்து விட்டான்... இப்போதைக்கு இந்தக்கூட்டம் ஆருடம் சொல்ல நம்பியிருப்பது நெல்லி என்ற யானையை! இந்த யானைக்கு கடந்த பல ஆண்டுகளில் 33 போட்டிகளில் 30 போட்டிக்கான முடிவுகளைச் சரியாகக் கணித்த பெருமை வேறு இருக்கிறதாம். இந்த உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஜி-யில் உள்ள ஜெர்மனி அணி கானா மற்றும் அமெரிக்க அணிகளை வெல்லும் எனவும் போர்ச்சுகல் அணியைச் சமன் செய்யும் எனவும் கணித்துள்ளது.. ஆனால் ஜூன்,16 அன்று போர்ச்சுகல்லுடன் நடந்த போட்டியில் 4-0 என்ற கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது. ஜீன்,21ல் நடைபெற்ற ஜெர்மனி-கானா இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்துள்ளது. மூன்று கணிப்புகளில் இரண்டு அவுட்... மற்றொரு முடிவை அறிய ஜூன் 26 வரை காத்திருக்க வேண்டும்.... (அதுவரை விஞ்ஞானச்சிறகிற்காக நமது நண்பர் நாராயணசாமி காத்திருக்கமாட்டாரே!)
இது தவிர பிரேசலின் சால்வடார் நகரில் உள்ள போர்டே என்கிற அருங்காட்சியகத்தில் உள்ள கபகோவ் என்ற கடல் ஆமையும், சீனாவில் சிஷுவான் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவிலுள்ள பாண்டா கரடி, புறா, பன்றி என ஆருடம் சொல்ல பல விலங்குகள் களம் இறக்கிவிடப்பட்டுள்ளன...
வீரர்களின் விநோத நம்பிக்கைகள்:
பேருந்தின் கடைசி இருக்கையில் மட்டுமே அமர்வது, கடைசி ஆளாக இறங்குவது, விமானத்தில் பயணிக்கும்போது முதல் வரிசையில் குறிப்பிட்ட நண்பருடன் மட்டுமே அமர்வது, வலது காலை எடுத்துவைத்து மைதானத்திற்குள் செல்வது, தான் மட்டும் முழுக்கைச் சட்டை அணிந்து ஆடுவது, ஆட்டத்தின் இடையில் சிகை அலங்காரத்தை மாற்றிக்கொள்வது, ஓய்வறையை விட்டு வெளியேறும்போது ஒருமுறை பந்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு வருவது- இவைகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்பது போர்ச்சுகல் நாட்டின் திறமையான ஆட்டக்காரர் ரொனால்டோவின் சில நம்பிக்கைகள்!

பிரபல கால்பந்து வீரர்கள் ஜார்ஜ் பெஸ்ட், எரிக் கண்ட்டோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு 7தான் ராசியான் எண். அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு 10. (ராசியான் எண் விசயத்தில் நம்ம சச்சின், சேவக், தோனி கதை தான் உங்களுக்குந் தெரியுமே)... நமது மனதுக்குப் பிடித்தமான பல பிரபலங்களிடம் குறிப்பாக விளையாட்டு வீரர்களிடம் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, போட்டிக்கு முதல் நாள் யாரிடமும் பேசாமல் இருப்பது, விளையாடும் போது எதிரணி வீரரின் ஆடையில் சூயிங்கம்மை ஒட்டி விடுவது, கோல்கீப்பரின் தலையில் முத்தமிடுவது –என இது குறித்து தனிப் புத்தகமே எழுதுமளவிற்கு ஏராளமாக இருக்கின்றன சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கைகள்... கொள்வன கொண்டு தவிர்ப்பன தவிர்த்திட வேண்டும்..
பீலேவின் கணிப்பும் பிரேசிலின் வருத்தமும்:

பிரேசில் நாட்டின் கால்பந்து கடவுளாகக் கருதப்படுபவர் எட்ஸன் அராண்டஸ் தோனாலிமெண்டோ என்ற பீலே... அந்த நாட்டிற்காக ஏராளமான கோல்களை அடித்தவர்.. அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து 1281 கோல்களைக் குவித்தவர்... எத்தனை நாடுகளில் எத்தனை போட்டிகளில் எத்தனை எத்தனை ஆண்டுகள் அவர் விளையாடியிருக்கிறார்.... அவருடைய கணிப்புகளைப் பாருங்கள்! 1994ல் கொலம்பியா வெல்லுமென எதிர்பார்த்தார்.... ஆனால் பிரேசில் வென்றது! (தயவு செய்து எங்களைத் திறமையான அணி என்று சொல்லிவிடாதீர்கள் என்பது கொலம்பியாவின் தற்போதைய வேண்டுகோள்!!!?) 2002ல் பிரான்சும் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டியில் மோதுமென்றார்... இரண்டு அணிகளும் முதல் சுற்றிலேயே வெளியெறிவிட்டன! 2014ல் பிரேசிலும் உருகுவே அணியும் இறுதிபோட்டியில் மோதவேண்டும். அதில் பிரேசில் வென்று கோப்பையைக் கைப்பற்றி 1950ல் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வேண்டும் எனச் சூளுரைத்திருக்கிறார்... ஆனால் பிரேசில் ரசிகர்கள் அனைவரும் இவரது வார்த்தைகளால் நெஞ்சடைத்துக் கிடக்கின்றனர்...
அறிவுக்குப் பொருத்தமா?:
கால்பந்து வரலாறென்ன, எந்தக் கண்டத்தில் எந்த நாட்டு வீரர்கள் சாதிக்கமுடியும்? முன்களவீரர்கள் யார்? பின்கள வீரர்கள் யார்? கள நிலவரம் என்ன என எதுவுமே தெரியாத அப்பாவி விலங்குகளைக் கொண்டு போட்டி முடிவுகளைக் கணிப்பதும் தமக்குச் சார்பாக இல்லாத போது வெட்டுவேன் குத்துவேன்... நேருக்கு நேர் ஒத்தைக்கு ஒத்தையா வா பார்க்கலாம் என மல்லுக்கு நிற்பதும் எந்த அளவிற்கு அறிவிற்கு பொருத்தமானது?
கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட ஒரு போட்டியில் (இந்தப் போட்டிகளை குறைந்தபட்சம் 30 பில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சியில் காணக்கூடும்-இதுவும் கணிப்புதான்.) கலந்துகொள்ளும் வீரர்கள் எத்தனை கோடி குழந்தைகளின், மாணவர்கள், இளைஞர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை உடையவர்களாய் இருக்கிறார்கள்.... போட்டியின் வெற்றி, தோல்விகளுக்கு நொடிப்பொழுதில் மாறும் கள நிலைமையும், வீரர்களின் திறமையும், உற்சாகமான மனநிலையும், ஆட்ட நுணுக்கங்களும் தான் காரணம் என்பதை உணர வேண்டும்.. உணர்த்த வேண்டும்.... விளையாட்டில் விளையாட்டாய்க் கூட மூடநம்பிக்கைகளைப் புகுத்தக் கூடாது... நமது அறிவியல் இயக்க நண்பர்களும் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அங்கிருக்கும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் குறித்து மாணவர்களிடம், துளிர் இல்லக் குழந்தைகளிடம் விவாதிக்க வேண்டும்... அவர்களிடமிருந்து சில பட்டியல் மூடநம்பிக்கைகள் உங்களுக்கு கிடைக்கக் கூடும்.. அவை குறித்து அடுத்த விஞ்ஞானச்சிற்கில் நீங்கள் எழுதி நாங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம் ஆவலோடு...... (கருத்து உதவி: அனைத்து பத்திரிக்கைகள், இணையதளம்)
விஞ்ஞானச்சிறகு மாத இதழ்
ஜூலை,2014
எதிர்வினை:
கட்டுரை-விளையாட்டின் சகல அம்சங்களையும் தொட்டுப் பேசியது. தகவல்களின் பரப்பும்,அவற்றைத் தொடர்ந்த கூர்மையான தர்க்கமும் என்னைக் கவர்ந்தன.
பேரா.ச.மாடசாமி.
தோழருக்கு வணக்கம். சரியான நேரத்தில்- சரியான கேவிள்வியுடன் கூடிய கட்டுரை. நமது இன்றைய இளையதலைமுறைக்கான கட்டுரை. கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு தன்னை இழந்ததோழர்கள்தான் பலர். இதில் தன்னை முற்போக்கு வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர்.. நான் பணியிலிருக்கும்போதே நம் தோழர்களிடம்( 2003க்கு முன்பே) இது பற்றி விவாதம் ஏற்பட்டது. ஆனால்- பலனில்லை-அது ஒரு பொழுதுபோக்கு என்று வாதிட்டவர்களும் உண்டு. இது நம் தோழர்களுக்கு ஒரு நெத்தியடி என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். பலருக்கு இது தெரிந்த அளவில் - மற்ற விளையாட்டுகள் தெரியாது என்பதே என் ஊகம்.
MANI ASC maniacs1943@gmail.com
Comments
Post a Comment