மூடும் அபாயத்தில் அரசுப்பள்ளிகள்.... மக்கள் பாதை மாத இதழ் நேர்காணல்
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க போராடும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிகச்சிறப்பான செயல்பாடு சம்பந்தமாக கண்ணுற்ற நாம் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை வெகுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மக்கள் பாதை இதழ்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. தேனிசுந்தரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.. கந்தர்வனின்
அந்த பிரபுவின் புத்திரனும்
அந்தக் கூலிப் பயலும்
எவ்வளவு காலம்
ஒரே பள்ளியில் படிப்பது
அதனால் தான்
நகராட்சி பள்ளிகள்
நவோதயா பள்ளிகள் என
இருபிரிவு ஆக்கினோம்...
-என்ற கவிதையின் மூலம் இந்த வம்பான வர்க்கப் பிளவின் வேதனையை உணர்ந்த நாம் களப்போராளி சுந்தரின் கருத்துகளைப் பகிர்கிறோம்...
ஏன் இன்றைய அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்படவேண்டும்?
சுமார் 1300 பள்ளிகள் வரையிலும் 10க்கும் குறைவான குழந்தைகள் பயில்கிற சூழல்.. அவை அனேகமாக இந்தக் கல்வியாண்டின் முடிவிலேயே அல்லது அதற்கு முன்னதாகவே அடைக்கப்படலாம். எனில் மற்ற பள்ளிகள் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றனவோ என்ற முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.
பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. அவையும் அடுத்த சில ஆண்டுகளில் ஓராசிரியர் பள்ளிகளாகும் அபாயத்தில் தான் இருக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் இயக்கங்களின் சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. பணியில் இருக்கின்ற இடைநிலை ஆசிரியர்களில் சுமார் 3000 பேர் வரையிலும் உபரியாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்றும் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை 1:20 என்று மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காகத் தான் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வும் கைவிடப்பட்டது. கடைசியாக நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற 3500 ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை.. வெயிட்டேஜ், தகுதித் தேர்வு, பதிவு மூப்பு உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்து ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் வேலை என்று அரசு நாளை மறுநாள் அறிவித்தாலும் கூட பத்து விழுக்காட்டினருக்குக் கூட பணி வாய்ப்பு என்பது அரிதுதான். ஏனெனில் அரசுப்பள்ளிகளில் அந்த அளவிற்கு மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஆக அரசுப்பள்ளிகளின் பேரழிவு என்பது பணியிலிருக்கின்ற ஆசிரியர்களின் பணிசார்ந்த பிரச்சனை, தகுதித் தேர்வு எழுதிக்காத்திருக்கும் நண்பர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை.. இப்படி ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாத ஆசிரியர்கள் பணியிடங்களால் அரசுப்பள்ளிகளை விட்டு வெளியேறி தனியாரின் கால்களில் சரணடையச் செய்து நாளை கல்வி கொடுப்பது அரசின் பொறுப்பே அல்ல.. அவரவர் சக்திக்கேற்ப, வசதிக்கேற்ப கட்டணம் செலுத்தி குழந்தைகளைக் கல்வி பெறச்செய்வது மக்களின் கடமை என்று அரசு தனது குடிமக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரத்தை வழங்குவது என்று அடிப்படைக் கடமைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் கொள்கை சார்ந்த பிரச்சனை..
அரசுப்பள்ளிகளிடமிருந்தும் சக தனியார் பள்ளிகளிலிருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள தனியார் பள்ளிகள் தாங்களே உருவாக்கிக் கொண்ட தர அளவுகோல் தான் இந்த மதிப்பெண்கள்... தனியார் பள்ளிகளுக்கு மதிப்பெண்களுக்காகவே சென்று மதிப்பெண்களுக்காகவே இரவு பகலாக விழித்து மகிழ்ச்சியைத் தொலைத்து குழந்தைப் பருவத்தையே இழந்து, சக மாணவர்களை நண்பர்களாக அல்லாமல் எதிரியாய்க் கருதி இறுதியாக மதிப்பெண்களுக்காக நடைபெறும் இந்த மனப்பாடப் பந்தயத்தில் வெற்றிபெற்று நாமக்கல் பிராய்லர் கோழிகளாக வெளிவரும் இந்த இளைய தலைமுறையினரிடம் எந்தவிதமான மனிதநேயத்தை, சமூக உணர்வை நாம் எதிர்பார்க்க முடியும். இவர்கள் நாளை அரசியல் வாதிகளாகவும் அதிகாரிகளாகவும் வரும்போது இவர்கள் எப்படி மக்களை நேசிப்பார்கள், மக்களுக்காக சிந்திப்பார்கள்? (மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வுநிறுவனங்களுக்கும் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கும் இவர்கள்தான் தேர்வாகிறார்கள் என்பதும் வருந்தத்தக்க செய்தி)
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பதில் அரசுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன்?
மேலே சொன்னது போல அரசுப்பள்ளிகளுக்கிடையே போட்டி பொறாமை இல்லை.. சாதி, மதம், வர்க்க வேறுபாடுகளை அடித்து நொறுக்கி ஒரு சமத்துவ சமுதாயத்திற்கான நம்பிக்கையை விதைப்பதாக அரசுப்பள்ளிகள் மட்டுமே திகழ்கின்றன. அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை அரசுப்பள்ளிகளால் மட்டுமே வழங்கமுடியும். இருவேறு வர்க்கம், இருவேறு கல்வி என்பது சமத்துவ சமூகத்திற்கு எதிரானது.. சமூக ஒழுங்கமைதிக்கு எதிரானது.. எனவே அரசுப்பள்ளிகளின் அழிவு என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் பிரச்சனை மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை... எனவே தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுப்பள்ளி மக்கள் பள்ளி: பாதுகாப்போம்; பலப்படுத்துவோம் என்ற பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது..
மேலும் அரசு என்பது எப்போதும் நடுநிலையானதாக இருந்ததே இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆளூங்கட்சிகளால் போட்டிபோட்டி நடைமுறைப்படுத்தி வரக்கூடிய புதியபொருளாதாரக் கொள்கைகள் தாய்ப்பால் வரையிலும் அனைத்தையும் தனியார்மயமாக்கி வணிகமயத்திற்கு வித்திடுவதாக உள்ளன. ஆகவே கல்வியும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாரின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. ஒருபுறம் மாணவர்களுக்கான விலையில்லாத் திட்டங்களை வழங்கிக் கொண்டே , பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் செய்யாமல், அடிப்படைக் கழிப்பிட, குடிநீர் வசதிகளை உத்தரவாதப் படுத்தாமல் அரசுப்பள்ளிகளை அழிக்கின்ற வேலையை முன்னின்று செய்வதே அரசுதான். ஒரு மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இயக்கத்தினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே நடத்தி வந்தது. அரசும் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் இந்தப் பேரழிவுக்கு காரணம் என்றாலும் அரசுப்பள்ளிகள் என்பவை மக்களுடைய வரிப்பணத்தில் இயங்குபவை. எனவே அரசுப்பள்ளிகள் மக்களுடைய பள்ளிகள்.. அந்தப் பள்ளிகளை நம்பி குழந்தைகளைச் சேர்ப்பதும் குறைகளிருப்பின் துணிந்து போராடிப் பெறுவதும் மக்களுடைய கடமையும்கூட. எனவே அரசுப்பள்ளிகளை பாதுகாக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து அறிவியல் இயக்கம் இந்தப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தானே பயில்கிறார்கள்? இதை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கத்தின் போது நண்பர்கள் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுவாகத்தான் உள்ளது. அடுத்த கேள்வி உங்களுடைய குழந்தைகளை முதலில் அரசுப்பள்ளிகளில் சேர்த்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்யுங்கள் என்பது.
நாம் சொல்லவிரும்புவது என்னவென்றால், கல்வி அமைப்பில் மாநில அளவில் முதலில் கல்வி அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஒன்றிய அளவுகளில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் என மக்களின் வரிப்பணத்தை மாத ஊதியமாக வாங்கக் கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கல்வித்துறை தவிர்த்த பிற துறை அலுவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என பல இலட்சக்கணக்கான் அரசு ஊழியர்களில் 1 சதவீதமானவர்கள் கூட தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கவில்லை. அடுக்கபட்ட மூட்டைகளில் அடிமூட்டைகளாக இருப்பவர்கள் நமது ஆசிரியர்கள்.. அவர்களும் 95% சேர்க்கவில்லை. அவர்கள் தான் நேரடியாக மக்களைச் சந்திக்கக் கூடியவர்களாக இருப்பதால் எப்போதும் நமது விரல் அவர்களை நோக்கி மட்டுமே நீள்கின்றது..
நம்முடைய பிரச்சாரத்தின் மையநோக்கம் என்பது பொதுப்பள்ளிகள் குறித்த விவாதத்தை மக்களிடையே கொண்டு செல்வது. இவ்விவாதத்தை பொதுப்பள்ளிக்கான மக்களின் கோரிக்கையாக மாற்றுவது.. மக்களின் கோரிக்கையை அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக மாற்றும் வகையில் விரிவான அளவில் கொண்டு செல்வது.. நாம் முன்மாதிரியாகக் காட்டும் பல வளர்ந்த நாடுகளைப் போல நமது நாட்டிலும் பொதுப்பள்ளிகள் அமையவேண்டும். அங்கு நம்முடைய கூலித்தொழிலாளியின் குழந்தையும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரின் குழந்தைகளும் ஒன்றாகப் பயில வேண்டும். அனைவரும் தரமான சமமான கல்வி பெற வேண்டும் என்பதே.. இதில் ஆசிரியரும் வந்து தானே ஆக வேண்டும். அந்த இறுதி இலட்சியம் இரண்டொரு ஆண்டுகளில் அடையக் கூடியதல்ல. இடைக்கால நிவாரணம் போல பொதுப்பள்ளிக்கான அடிப்படை அம்சங்களைக் கொண்ட அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது ஆகியவையே தற்போதைய உடனடிப் பணிகளாக உள்ளன. பொதுப்பாடத்திட்டத்தை அரையும் குறையுமாகவாவது நடைமுறைப்படுத்தி வரும் நமது மாநிலத்தில் பொதுப்பள்ளிக்கான கோரிக்கையை மக்கள் கையில் எடுத்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலிலேயே நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.
நடைமுறை அரசியல் வெளி மாற்றங்களால் உங்களது பிரச்சார இயக்கத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா? இல்லையா?
இல்லை....
இந்தப் பிரச்சார இயக்கத்தை எந்தெந்த வழிகளில் முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?
அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல ஆய்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.. கல்வி உரிமைக் கருத்தரங்குகள், பிப்ரவரியில் தாய்மொழிவழிக்கல்வியினை வலியுறுத்தி மண்டல மாநாடுகள், மக்களைச் சந்திக்கும் வகையில் மாநிலந்தழுவிய அளவில் கலைப்பயணம் என விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.. அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் இயக்க நண்பர்கள் அதற்கான பணிகளை எழுச்சியோடு செய்து வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அடாவடித்தனங்களைப் பட்டியலிடும் விதமாக இவைகளா கனவுப்பள்ளிகள்? என்ற புத்தகமும் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களின் முயற்சிகளை, அரசுப்பள்ளிகளை ஆவணப்படுத்தும் விதமாக மீண்டெழும் அரசுப்பள்ளிகள் என்ற புத்தகமும் வெளிவந்து முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இலட்சம் பிரதிகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் சில புத்தகங்களும் இப்பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு வெளிவர உள்ளன.
பிரச்சார இயக்கத்திற்கான கால வரையறை ஏதேனும் நிர்ணயித்துள்ளீர்களா?
அரசுப்பள்ளி மக்கள் பள்ளி பிரச்சார இயக்கம் இந்தக் கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவியல் இயக்கம் மாநிலச் செயற்குழு வழிகாட்டும்.
உங்களோடு இந்தப் பிரச்சார இயக்கத்தில் கைகோர்த்துள்ள அமைப்புகள் எவை?
இந்திய மாணவர் சங்கம் நம்முடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளனர். நம்முடைய இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்துடன் ஒத்த கருத்துடைய அனைத்து ஆசிரியர், மாணவர் அமைப்பினரையும் கல்வி ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடத்தவே முயற்சித்து வருகிறோம்.
இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை கிடைத்துள்ள தாக்கங்கள் என்ன?
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. நம்மிடம் அவர்களது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்கின்றனர். நமது பிரச்சார இயக்கத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளைச் சொல்லிச் செல்கின்றனர். வாழ்ந்துகெட்ட பல அரசுப்பள்ளிகளின் சோகக் கதைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர். பிரச்சார இயக்கத்தின் விளைவாக பல மாவட்டங்களில் வேறு பல தனிநபர்களும் தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகள் கூட அரசுப்பள்ளிகளுக்காக களம் இறங்கியுள்ளனர்
நன்றி: மக்கள் பாதை, அக்.2014
Comments
Post a Comment