தேய்ந்து வரும் அரசுப்பள்ளிகள்

நண்பர்கள் பலரிடம் பேசும்போதும் சரி, சில கூட்டங்களில் விவாதிக்கும் போதும் சரி.. அரசுப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பேசினால் அப்பிரச்சனையை நாம் மிகைப்படுத்திப் பேசுவதாகவே சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.. அந்த வகையில் நமது புரிதலுக்காக சில தகவல்கள்…




அனைவருக்கும் கல்வி இயக்க இணையதளத்தில் தமிழ்நாட்டின் மொத்தம் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை, நிர்வாக வாரியாக அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.. (Source: http://ssa.tn.nic.in/Statistics.htm

தமிழகத்தில் உள்ள முப்பது மாவட்டங்களிலும் சேர்த்து 37141 அரசுப்பள்ளிகள், 8409 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11642 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 57192 பள்ளிகள் உள்ளன.. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 80%க்கும் மேல் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன.. திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் 50%க்கும் குறைவான அரசுப்பள்ளிகள் தான் இருக்கின்றன.. தலைநகர் சென்னை முன்னோடியாகத் திகழ்கிறது. ஆம் வெறும் 21% அரசுப்பள்ளிகள் மட்டுமே அங்கு அங்கு உள்ளன..

அடுத்ததாக பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையையும் பார்க்கலாம்.. தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட மொத்த மாணவர் எண்ணிக்கையில் 50%க்கும் குறைவானவர்களே அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர். மதுரையில் 30%க்கும் குறைவானவர்களும் தமிழகத்திலேயே மிகக்குறைவாக சென்னையில் 15% மாணவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர்..

மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில் 65% இருக்கக்கூடிய அரசுப்பள்ளிகளில் 42% குழந்தைகளும் வெறும் 20% இருக்கக்கூடிய தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 35% மாணவர்களும் 15% அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23% மாணவர்களும் பயில்கின்றனர்.. மேலும் ஒரு தகவலைப்பாருங்கள்.. இப்படி ஒட்டுமொத்தமாக சராசரி பார்ப்பது சரியல்ல என்றாலும் நமது புரிதலுக்காக வைத்துக்கொள்வோமானால் சராசரியாக ஒரு அரசுப்பள்ளிக்கு 149 மாணவர்களும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கு 356 மாணவர்களும் தலா ஒரு மெட்ரிக் பள்ளிக்கு 400 மாணவர்களும் பயில்வதாகக் கொள்ளலாம்..

அரசே கொடுக்கும் இந்தப் புள்ளிவிபரங்கள் அரசுப் பள்ளிகளின் இன்றைய மோசமான நிலைமையினை வெளிச்சமிட்டுக் காட்டிவிடுகின்றன.. இந்த நிலைமையை மாற்ற அரசு என்ன செய்யவேண்டும் என்று கேட்பதோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்னசெய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டால் தான் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீளமுடியும்..
தேனி சுந்தர்
நன்றி: புதிய ஆசிரியன், ஜன.2016 இதழ்

Comments

  1. அரசுப் பள்ளிக்களின் அமைவிடத்தை கணக்கில் கொண்டு இப்பிரச்சினையை அணுகவேண்டும்.பத்தாம் வகுப்புவரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு +1 க்கு மாறும் மாணவர்களை கணக்கில் கொள்ள வேண்டும்.அரசுப்பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.இரண்டுமே வெவ்வேறு சூழலில் உள்ளன என்பதை உணர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே..
      பள்ளிகளின் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனையினை அணுக வேண்டும் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் நண்பரே?

      Delete
  2. Replies
    1. வணக்கம் தோழர்..
      தங்களின் கருத்திற்கு நன்றி..
      விஞ்ஞானச்சிறகிலும் கூட இடம்பெற்றால் நன்றெனக் கருதுகிறேன்..
      விழுதிலும் ஜன-பிப்.இதழில் இடம்பெறச்செய்யலாம்

      Delete
  3. தமிழக அரசு:

    🚩அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தந்து ஒன்று முதல்பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும்"ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல்பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும்.மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது.தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வி கட்டாய பாடமாக உள்ளது.கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம்,அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.


    🚩சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2011 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியில் 6 ,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள்மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது. தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும்கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது.

    🚩கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத தர உயர்ந்தப்பட்ட மேனிலைப்பள்ளிகள்.

    மேனிலைப்பள்ளிகள் (ம)தற்போது தரம் உயர்த்தப்படும் 800க்கும் மேற்பட்ட மேனிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும் .பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினி மயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

    🚩மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:

    புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும்.இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

    🚩பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும் தமிழக அரசு.

    கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

    🚩🚩21000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.


    1992 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கிகரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றோம். நாங்கள் பெற்ற பட்டம் இன்று பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம்.

    1)TET, TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.

    2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற எங்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.

    3) உடற்கல்வி ,ஓவியம்,தையல்,கணினி ஆகிய"தொழிற்கல்வி" படாங்களுக்கான"சிறப்பாசிரியர்" நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்­­. இந்த ஆசிரியர் பணியிலும் கூட எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.

    திரு வெ.குமரேசன் மாநிலச் செயலாளர் 9626545446.

    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். பதிவுஎண் 655/2014.

    ReplyDelete
  4. கணினிக் கல்வி அரசு பள்ளியில் புறக்கணிக்கப்படுவது ஏன்?


    தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது.

    தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன.

    ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011 ஆம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

    மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 10 ஆம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வியை அரசுப் பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?

    மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.

    இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!

    இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 21000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

    இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?

    தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார் கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே!

    கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.


    அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.

    அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக் கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா! இதில் சமூகநீதிக் கண்ணோட்டம் தேவை.

    கேரள மாநிலத்தில் 2012 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.

    கல்வியிற் சிறந்த தமிழ்நாடு ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்?

    தமிழ்நாடு அரசு இத்திசையில் சிந்தித்து செயல்படட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!