அறிவியல் கலாச்சாரம் மேலோங்கி இருந்தால் சமகால ஜனநாயக சீரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது- பேரா.நா.மணி நேர்காணல்


பொருளாதார பேராசிரியர் மணி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

தற்போது பொருளாதாரத் துறைப் பேராசிரியர் என்ற பொறுப்பை செம்மையாக செய்ய இயலாதவனாகவே உள்ளேன். நான் பணியாற்றும் துறையில் 10 பேர். ஏழு பேர் பணி ஓய்வு பெற்றும் ஒருவர் முதல்வராக பணி உயர்வும் பெற்று சென்ற நிலையில் ஏழு பணியிடங்கள் காலி. முதலில் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டும் பின்னர் புதிதாக பணி அமர்த்தப் பட்டவர்களை ஒருங்கிணைப்பது ஊக்கமளிப்பது. புதிய துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவது என துறைசார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், ஒரு பொருளாதார பேராசிரியராக சமகால பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதன் மீது பங்களிப்பு செலுத்துதல் என்ற பகுதியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் மாநாடு ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறீர்கள்.. அதென்ன திடீரென வல்லுநர்கள் மாநாடு? கருப்புப் பணம், கள்ளப் பணம் குறித்து விவாதிக்கப்பட்டதா??

தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் சங்கம் (Association of Economists of Tamilnadu) என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரப் புலத்தில் இயங்கும் கல்லூரி பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் கூடுகையாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சில குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிப்பது, கருத்துரைகள் என இவ்விரண்டு நாள் மாநாட்டின் நிகழ்முறைகள் இருக்கும். 37வது தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் மாநாட்டை எங்கள் துறை ஏற்றுக்கொண்டிருந்தது. நான் மாநாட்டு செயலராக தேர்வு செய்யப்பட்டிருந்தேன். நமக்கு அறிவியல் இயக்கம் கொடுத்திருக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சி இம்மாநாட்டை சிறப்பாக நடத்த உதவியது. அறிவியல் இயக்கத்தில் நாம் தன்னார்வமாக செய்யும் பணியில் நமது எண்ணங்கள் திட்டமிடலுக்கு தக்கவாறு சில சமயம் நிதி கருக்காது. சில சமயம் ஆர்வலர்கள் பற்றாக்குறையாக இருக்கும். சில சமயம் இரண்டுமே பற்றாக்குறையாக இருக்கும். இங்கு திட்டமிடல், நிதி, ஆட்பலம் எல்லாம் போதுமானதாக இன்னும் சொல்லப்போனால் தேவைக்கு அதிமாகக் கூட இருந்தமையால் மிகச் சிறப்பான மாநாடாக அமைந்திருந்தது. நமது அறிவியல் இயக்க ஈரோடு மாவட்டக்கிளையும் இரண்டு பணிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்தது.

பண மதிப்பு நீக்கல் பற்றிய கருத்துரையும் விவாதமும் முந்தைய நிழ்ச்சிநிரலில் இல்லை. நாம் சூழ்நிலை கருதி இணைத்தோம். அந்த அமர்வும் மிகச் சிறப்பாக இருந்தது. முப்பத்து ஏழாவது மாநாடு ஒரு முன்மாதிரி மாநாடு என பேசவைக்கும்படி அறிவியல் இயக்கப் பணி அனுபவ துணைகொண்டு செய்ய முடிந்தது. அதற்கு கல்லூரி நிர்வாகமும் முதல்வரும் துறை ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு நல்கினர்.

உயர் மதிப்பு நோட்டுகளை விலக்கிக் கொள்வதால் கள்ளப் பணம், கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று மத்திய அரசு நம்புகிறது.. பொருளாதார வல்லுநர்கள் அப்படி நம்புகிறார்களா? என்ன சொல்கிறார்கள்?? நோக்கம் சரிதான்.. நடைமுறைப்படுத்திய விதம்தான் சரியில்லை என்றொரு பொதுக்கருத்தும் நிலவுகிறதே??


கருப்புப் பண ஒழிப்புக்கான மோடி அரசின் நோக்கம் சரி. நடைமுறைப்படுத்திய விதம் சரியில்லை என பொருளியல் அறிஞர்கள், அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள். ஆனால் அடிப்படை நோக்கமே வேறு என்றே படுகிறது. மோடியை ஒரு தேவதூதனைப்போல் சித்தரித்து வெற்றிபெற செய்ததில் கார்பரேட் நிறுவனங்களுக்கும் அவற்றின் நிதிக்கும் பெரும் பங்கு உண்டு. யாருடைய நிதியில் யாருடைய ஆதரவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சேவகம் செய்வதே அல்லது அவர்களுக்கு அனுசரனையாக நடப்பதே இயல்பு. எனவே மோடி கார்பரேட்களுக்கு ஆதரவாக இந்தியப் பொருளாதாரத்தில் காய் நகர்த்தலே இயல்பு.

அதன்படி உலகமயத்தை துரிதப்படுத்துவதன் வாயிலாக. ஏற்கனவே சில பல வேலைகளைச் செய்து வருகிறார். அடுத்து இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை கார்பரேட்டுகளுக்கு கையளிக்கவே இந்த கருப்புப் பண நாடகத்தை ஆடுகிறார். இந்தியப் பொருளாதாரம் ஒரு வேளாண்மைப் பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும் கூடவே. அது ஒரு முறைசாரப பொருளாதாரம் (informal economy) என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். வேளாண்மை சார்ந்த சாராத தொழில்கள், சேவை, வர்த்தகம் என எல்லாமே இங்கு பெரும்பகுதி முறைசாரா தொழில்களே. பெரும்பகுதி வேலைவாய்ப்பும் மக்களுக்கு முறைசாரா தொழில்கள் வழியாகவே கிடைக்கிறது. நவீன பண வர்த்தக பரிமாற்ற கருவிகள் முறைசாரா தொழில்களும் தொழிலாளர்களும் பயன்படுத்தாதவை. டெபிட் கார்டு கிரிடிட் கார்டு என எந்த சேவையையும் அவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாதவை. கார்பரேட்களின் வர்த்தகம் முழுக்க முழுக்க நவீன பண வர்த்தக சேவைகளை பயன்படுத்துபவை.

இந்தச் சூழலில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் 500 1000 நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து நேரடி பண பரிமாற்ற வர்தகத்தை உடனடியாக தடைசெய்தால் மக்கள் பணமற்ற வர்த்தகம் நடத்தும் கார்பரேட்டுகள் உள்ளிட்ட முறைசார்ந்த வர்த்தகம் நோக்கி மக்கள் (நுகர்வோர்) நெட்டித் தள்ளப்படுவர். இந்திய முறைசாரா சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு செல்ல வேண்டிய வருமானம் கார்பரேட்டுகளை நோக்கிச் செல்லும். இவ்வாறு இந்திய வர்த்தகத்தை கார்பரேட்டுகளுக்கு கையளிப்பதே மோடியின் இலக்கு. இந்திய முறைசாரா வர்த்தகமும் பணமற்ற நவீன வர்த்தகம் நோக்கி திரும்ப வேண்டும் அல்லது திருப்ப வேண்டும் என்கிறார்கள். இது தடாலடி நடவடிக்கை மூலம் சாத்தியம் இல்லை. அல்லது அவ்வாறு நமது இந்திய முறைசாரா வர்த்தகம் திரும்ப எப்படியும் கால அவகாசம் வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் கார்பரேட் நிறுவனத்தின் பக்கம் கைமாறிய வர்த்தகம் மீண்டும் இந்திய முறைசாரா தொழில்துறை பண்டங்கள் நோக்கித் திரும்பாது. இவ்வாறு கார்பரேட் வர்த்தகம் பெருக எடுக்கப்பட்ட நடவடிக்கையே அன்றி கருப்புப்பண ஒழிப்புக்கான நடவடிக்கை அல்ல.

பொருளாதார பேராசிரியர் - அறிவியல் இயக்கம்.. எப்படி இந்த இணைப்பு நிகழ்ந்தது?

அது ஒரு விபத்து அல்லது யதேச்சையான நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். என் ஆய்வுப் பணி நிமித்தம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு 2000ஆம் ஆண்டில் சென்று இருந்தேன். ஓர் அரசியல், பொருளாதார வல்லுநர் என்ற வகையில் அங்கு பொருளாதார துறைத் தலைவராக கருந்த பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களை நான் அறிவேன். ஆனால் அவருக்கும் எனக்கும் நேரடி அறிமுகம் கிடையாது. எனது நண்பர் பேரா.இரவிச்சந்திரன் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவரது அறிமுக வார்த்தைகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஆத்ரேயா அவர்கள் உடனே என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்று உரையாடினார். நான் ஊர் திரும்பியது மிக நீண்ட கடிதம் ஒன்று எழுதினார். பின்னர் ஒரு மாநாட்டுக்காக ஈரோடு வந்தவர் என்னை சந்திக்கவே தனியாக அரைநாள் ஒதுக்கி கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக சேலம் சகஸ்ர நாமம் தொடர்சியாக என்னோடு பேசியும் ஈரோடுக்கு வந்தும் அறிவியல் இயக்கம் பற்றி எடுத்துக் கூறி அறிவியல் இயக்கப் பணியில் ஈடுபடுத்தினார். ஆத்ரேயா என்னை இந்திய சமூக விஞ்ஞானக் கழக கிளையைத் தொடங்கவே இப்பெருமுயற்சியை எடுத்தார். சகஸ் அவர்கள் தான் அறிவியல் இயக்கத்திற்குள் திருப்பிவிட்டார். அப்போது ஈரோடு மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பே இல்லாமல் இருந்தது. எனவே 21.08.20001 ல் சி.இராமலிங்கம் அவர்களை அழைத்து வந்து TNSF அமைப்புக் கூட்டத்தை நடத்தினோம். நான் அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் அறிவியல் இயக்கம் என்னை மாவட்ட செயலர், மாவட்ட தலைவர், மாநிலச் செயலர் மாநிலத் தலைவர் என தரம் உயர்த்தியது.

அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் அறிவியல் மனப்பான்மை எந்த அளவுக்கு உள்ளது? அதற்கான செயல்பாடுகள், இயக்கங்கள் எந்த அளவிற்கு வீச்சாக உள்ளது என்று கருதுகிறீர்கள்....?

அறிவியல் இயக்கம் எண்பதுகள் தொடங்கி தனது சக்திக்கு மீறியும் பல பகுதியினரை நுட்பமாக பயன்படுத்தியும் அறிவியல் விழிப்புணர்வு, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் பணிகளை செய்துவருகிறது. அறிவியல் கண்ணோட்டம் வளர அறிவியல் இயக்கம் எத்தகைய பங்கை ஆற்றியுள்ளது என்பதை துல்லியமாக மதிப்பிடுவது கடினம். பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் அறிவியல் இயக்கம் பற்றிய அறிமுகம், அங்கீகாரம் போன்றவை நமது செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகளே.


சமச்சீர் பாடதிட்டம் தடை செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து களத்தில் நின்ற அமைப்புகளில் அறிவியல் இயக்கம் முக்கியமானது. சுமார் ஒன்றரை மாதம் புத்தகம் இல்லா வகுப்பறைகளை தமிழ்நாடு கண்டது. அந்த நேரத்தில் அறிவியல் இயக்கம் அரசை எதிர்த்து நின்றபோதும் அதன் வெளியீடுகளை குழந்தைகளுக்கு கற்பிக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்தது. இது ஒருபுறம் மறுபுறம் நமது பாடதிட்ட, கலைத்திட்ட முறையே அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிராக உள்ளதாக கருதவும் இடமுள்ளது. கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, அதனையொட்டிய தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை அறிவியல் கண்ணோட்டத்தோடு இயைந்து செல்லவில்லை.

கல்வி, அறிவியல் முன்னேறிய அளவு அறிவியல் கண்ணோட்டம் இயல்பான முன்னேற்றமாக இல்லை. மதவாத சாதிவாத சக்திகளால் அதன் உள்ளார்ந்த குணாம்சங்களால் அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறது. அறிவியல் கண்ணோட்டம் வளர்க்க மேற்கொள்ளப்படும் பணிகள் என்பது தற்போதைய ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் நில பிரபுத்துவ குணாதிசயங்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் பணிகளே. எனவே இப்பணி இயல்பாகவே கடுமையானதாகவே இருக்கும். இந்த கடுமையான பணியை முன்னெடுக்கும் அறிவியல் இயக்கத்திற்கு இதனைத் தாண்டிய சில மக்கள் அறிவியல் இயக்கப்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் இன்றைய தேவைக்கு ஏற்ப எடுத்துச் செல்வதில் போதிய வேகம் செலுத்த இயலவில்லை என்பதாகவும் உணர்கிறேன்.

சமூகத்தில் அறிவியல் கலாச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டியதன் அவசியமாக எதைப் பார்க்கிறீர்கள்?

மனிதனின் சகல செயல்பாட்டிலும் அறிவியல் பார்வை வளர்ந்துவிட்டால் சமுகத்தின் சகல சிக்கல்களுக்கும் தீர்வு வந்துவிடும். ஆனால் இது எவ்வாறு சாத்தியம் என்பதுதான் அடிப்படையான கேள்வி. எல்லாக் கலாச்சார செயல்பாடுகளும் சமூகத்தின் உற்பத்தி உறவுகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த கலாச்சார செயல்பாடுகளே ஆளும்வர்க்கம் வாழவும் வீழவும் துணை நிற்கிறது. நிலபிரபுத்துவ காலம் முடிவுற்று அல்லது அதன் வளர்ச்சிப் படி நிலையில் சந்தைப் பொருளாதாரம் வலுப்பெறும் போது அதற்கு ஏற்ற வகையில் நிலபிரபுத்துவ கலாச்சார வடிவங்களில் மாறுதல்கள் வந்திருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்திய மூட நம்பிக்கைகள் அறிவியலுக்கு விரோதமான விசயங்கள் விலகி இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. காரணம் நிலபிரபுத்துவத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரம் நோக்கிய மாறுதல்( transition) இந்தியாவில் சிக்கல் நிறைந்தது. நிலபிரபுத்துவம் ஒழிந்து முதலாளித்துவம் நோக்கி முன்னேறியும் வரவில்லை. எனவே அறிவியல் பார்வை குறைபாடு அதிகமாகவும் உள்ளது. இதனால் ஆரோக்கியமான செயல்பாடுகள் வளர்வதும் தடைபடுகிறு. நல்ல அறிவியல் கலாச்சாரம் மேலோங்கி இருந்தால் இன்றைய சமகால ஜனநாயக சீரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது. அதற்கான விலையையும் சமூகம் தர வேண்டி இருந்திருக்காது.

ஈரோட்டு முயற்சியான வாசிப்பு முகாம்களுக்கு தற்போது எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது? ?

ஈரோட்டில் நாம் தொடங்கிய வாசிப்பு முகாம் வடிவம் இந்திய அளவில் மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பால் ஒரு முன் மாதிரி செயல்பாடாக போற்றப்படுகிறது. தன் ஆர்வமாக ஒவ்வொரு ஆசிரியரும் தனது கைப்பணத்தை செலவு செய்து இரண்டு நாட்களை இதற்காக ஒதுக்கி தன்னை மேலும் மேலும் தரம் உயர்த்தி அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் மாற்றுக்கல்வி யுக்திகளை உள்வாங்கி சமுகமாற்றத்தில் ஒரு பங்களிப்பை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ள ஆசிரியர்கள் அறிவியல் இயக்க எல்லைகளுக்கு அப்பாலும் நிறைய உள்ளனர் என்று புரிய வைத்த முயற்சி இது. ஒவ்வொரு முகாமிலும் கனிசமானவர்கள் அறிவியல் இயக்க எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்து பங்கேற்றனர். ஒவ்வொரு முகாமிலும் புத்துணர்வு பெற்று சென்ற ஆசிரியர்கள் அனேகம். தன்னை முற்றிலும் இம்முகாம்கள் புரட்டி போட்டுவிட்டது என்று கூறும் சாட்சியங்கள் நிறைய உண்டு. ஆசிரியர் மத்தியில் துல்லியமான விளைவுகளை உருவாக்கிய செயல்பாடு இது. ஒவ்வொரு முகாமும் ஒர் ஆர்வலர் பயிற்சிப் பட்டறை. மாநில முகாம்களோடு இணைந்து மண்டல, மாவட்ட, ஒன்றிய கிளைகள் என இது விரிவுபட்டிருந்தால் இதன் தாக்கம் விளைவுகள் எங்கோ சென்றிருக்கும். நமக்கு இயல்பாக உள்ள பணிப்பளு இன்னும் அதுபற்றி கூடுதல் புரிதல், முகாமில் பங்கு பெறுபவர்கள் எப்படிப் பயன்படுத்துவது போன்ற தளங்களில் கவனம் செலுத்தினால் இயக்கம் சமூகம் இரண்டும் மிக்க பலன் பெறும்.

ஆசிரியர்கள் தங்கள் தொழில் சார் நூல்களைக் கற்று புதுப்பித்துக் கொள்வதற்கு எது தடையாக இருக்கும்? ?

பாடபுத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு என்பது தனிநபர் சார்ந்ததாகவே எல்லோருக்கும் உள்ளது. குடும்பம் அல்லது இயக்கம் அல்லது அரிதான ஆசிரியர்கள் வழியாகவே பாடபுத்தகம் தாண்டிய வாசிப்பு சாத்தியமாகிறது. ஆசிரியர்களைத் தவிர இதர தொழில் பிரிவினருக்கு வாசிப்பு ஒன்றும் அத்தியாவசியத் தேவையல்ல. சமூக சூழ்நிலையால் ஆசிரியரும் பாடத்திற்கு வெளியே வாசிப்பு தேவை என்பதை உணர்வதும் இல்லை. எனவே இதர பிரிவு மக்களைப் போலவே ஆசிரியர்களுக்கும் வாசிப்பு பழக்கம் வாய்க்காமல் போனது. ஓர் ஆசிரியருக்கு வாசிப்புப் பழக்கத்தையும் கல்வி குறித்த நூல்களின் அறிமுகத்தையும் அளித்துவிட்டால் போதும் மாணவர் மையம் சார், கல்வி கற்றல் கற்பித்தல் யுக்திகள், மாற்றுக் கல்வி பற்றிய புரிதல் அதைநோக்கிய செயல்பாடுகள் விரிவடைந்துவிடும்.

கள ஆய்வின் அடிப்படையில் நீங்கள் எழுதிய கல்வி சார்ந்த நூல்கள் உருவானதன் பின்னணி என்ன? அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

கல்வி குறித்த எனது நூல்களின் பிறப்பிடம் வாசிப்புமுகாம்களும் அறிவியல் இயக்கம் வழி கல்வி குறித்த செயல்பாடுகளில் பங்குபெற்றதும்தான். ”பள்ளிக்கூடத் தேர்தல்” நூல் மாணவர் விரும்பும் நல்லாசிரியர் யார் என்ற தேடலின் விரிவாக்கம். அதற்கான விசாரணை. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் - அரசுப்பள்ளிகளில் அரசியல் பொருளாதார தடைகளைத் தாண்டி ஒர் ஆசிரியர் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான என ஆய்வு. இது அரசுப்பள்ளி பாதுகாப்பு இயக்க பிரச்சாரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

அடுத்த நூலுக்கான முயற்சிகள் பற்றி??

மேற்சொன்ன இரண்டு நூல்களுக்கும் கிடைத்த வரவேற்பைக் கூற வார்த்தைகள் இல்லை. இன்னும் இது போன்ற நூல்களைப் படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தந்துள்ளது. சில திட்டங்களும் உள்ளது.. குறிப்பாக, மீண்டெழும் அரசுப்பள்ளிகள் நூலை விரிவுபடுத்த வேண்டும். இரண்டாவது, பழங்குடி குழந்தைகளின் கல்வி வாய்ப்பு, தரம், அவர்களுக்கான கற்றல் கற்பித்தல் முறைகள் பற்றி. மூன்றாவது மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி சிக்கல்கள் குறித்து எழுதுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முயற்சிகள் குறித்து? ?

மிகவும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் மீண்டுமொரு பார்ப்பனீய மேலாதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயலும் ஆர்.எஸ்.ஸின் அரசியல் பிரிவான பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. கார்பரேட் மயம், விரிவான தாராளமயம் ஆகியவை தனது கொள்கைகளுக்கு ஒத்திசைவானது. இதனைப் புரிந்துகொள்ள பாரதி புத்தாகலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள நூல்களை வாசிக்க வேண்டுகிறேன். எனவே ஏழை எளிய மக்களுக்கு கல்வி உரிமையையே அடிப்படையாக மறுத்தல். குலத்தொழிலை நோக்கித் தள்ளுதல். எல்லாத்தடைகளையும் மீறிப் படித்தாலும் மதிப்புக்குறைவான கல்வி. உயர் கல்வி முற்றிலும் தனியார்மயம். இட ஒதுக்கீடு பறிப்பு என எல்லா அம்சங்களும் நிறைந்ததாக புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் உள்ளது...

புதிய கல்விக் கொள்கை குறித்து மாநிலம் முழுவதும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியதில் மிக முக்கியப் பங்கு வகித்த கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உதயமானது பற்றி? ?

புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்த முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு சுற்றுக்குவிடப்பட்ட காலத்திலேயே விழிப்போடு செயல்பட்ட இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பதிவு செய்தது. டி.எஸ்.ஆர் அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகள் பெரும் கூட்டுப் போராட்டத்திற்கான தேவையை உணர்த்தியது. 2016 ஜீன் மாதம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு சார்பாக ஆசிரியர், மாணவர், பெற்றோர் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மேற்படி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டோம். முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 21 சங்கங்கள் கலந்து கொண்டன. கல்விக்கான பொதுப் பிரச்சனைகளைப் பேச பொது மேடையாக கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவானது. நான் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மோசஸ் நிதிக்காப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதன் விளைவாக மாநில அளவிலான கருத்தரங்கம், பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் எனத் தொடங்கி அக்டோபர் 8ல் மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனத்தை பேரா.வசந்தி தலைமையில் உருவாக்குவதில் முடிந்திருக்கிறது. தற்போது வரைவு அறிக்கையாக இருக்கும் அந்த ஆவணம் மாநில அளவிலான விவாதத்தின் மூலம் முழுமைப்படுத்தும் பணி இருக்கிறது. பின்னர் அத்தகைய கல்விக் கொள்கை வேண்டும் எனப் போராடவும் அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
கேள்விகள்: தேனி சுந்தர் 
நன்றி: விழுது: இருமாத கல்வி இதழ்
நவ.-டிச.2016

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!