மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாப்பது எப்படி?

மெட்ரிக் ஆசிரியர்களின் விடுதலை பற்றி டிசம்பர் இதழில் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதியிருந்தார்கள்.. மெட்ரிக் ஆசிரியர்கள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடம் வழங்கிப் பாதுகாத்திட வேண்டும். இங்கு பணிவாய்ப்பு இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் அங்கு அடிமைச் சேவகம் செய்கின்றனர்..

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் விடுப்பு விதிகளும் பணிப் பாதுகாப்பும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க நாம் வலியுறுத்துவோமாயின் அவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தானே முறைப்படி நியமனம் செய்யமுடியும்? தற்போது வழங்கி வரும் ஊதியத்தை விட பலமடங்கு கூடுதலான ஊதியத்தை மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நிச்சயம் வழங்க முன்வரப் போவதில்லை..

தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேகம் குறைந்துள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்று பல இலட்சங்களைக் கொடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருக்க பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எனவே வருமானம் இல்லை என்பதால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் பிள்ளை பிடிக்கும் வேகத்தைக் குறைத்துக் கொண்டனர். இருக்கும் ஆசிரியர்கள் இருந்தால் என்ன.. உபரிப் பணியிடமாகி எங்கும் தூக்கிவிட்டாலும் கவலை இல்லை என்ற மனநிலையில் இருக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை..

எனவே, மெட்ரிக் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்குச் சம ஊதியம், சம உரிமை வழங்க வலியுறுத்துவதற்குப் பதிலாக அப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவும் புதிய மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாதெனவும் அரசை நிர்ப்பந்திப்பதும் தான் ஆசிரியர் இயக்கங்களின் முழுமுதற்கடமை ஆக இருக்க வேண்டும். அதன் மூலமாக இலட்சக் கணக்காணோருக்கு முறையான, பாதுகாப்பும் கௌரவும் உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பெற்றுத் தர முடியும் என்பது மட்டுமல்ல.. மூடப்படும் நிலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும் முடியும்..

தேனி சுந்தர்
நன்றி: புதிய ஆசிரியன், ஜன.2017 இதழ்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!