தமிழக அரசு தனியார் பள்ளிகளின் துயரங்களைத் துடைக்க வேண்டும்.. - தேனி சுந்தர்
இந்த கல்வியாண்டு பிறந்து விட்டது. ஒரு மாதம் முழுதாக கடந்து விட்டது. ஆனால் பள்ளிகளைத் திறக்க இயலவில்லை. கட்டணம் வசூலிக்க இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்றாலும் அதற்கும் ஆயிரம் சிக்கல்கள். பல பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் இல்லை என்கிறார்கள். வீட்டுக்கு ஒரு போன் தான் உள்ளது. அதையும் அப்பாவோ அம்மாவோ எடுத்துக் கொண்டு வேலைக்குச் சென்று விடுவதால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்கின்றனர் பல மாணவர்கள். ஒரு வீட்டுக்கு ஒரு போன் தான் இருக்கிறதாம். நாலைஞ்சு வாங்கிப்போட்டா தான் என்ன நட்டமாகிடப் போகுது? தக்காளி, வாழைப்பழம் போல கெட்டுப்போகிற பொருளா என்ன? அப்படி என்ன தான் வேலைக்குப் போகிறார்களோ? என்ன தான் பிழைப்பு பிழைக்கிறார்களோ? தெரியவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் புலம்புவதைப் பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது.
கலந்துகொள்கிற குழந்தைகளுக்கு, இணையவழி வகுப்புகளிலும் கூட பள்ளிச் சீருடை, டை, பெல்ட் சகிதம் உக்கார வைத்து பாடம் நடத்தி ஒரு கல்விச் சூழலை வீட்டிலும் உருவாக்கப் பார்க்கிறோம். அதுவும் கூட இந்த கல்வியாளர்கள் என்ற கூட்டத்திற்கு பிடிக்கவில்லை. குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் இணையவழி வகுப்பில் கலந்துகொள்வதற்காக வாங்கித்தந்த டாப்லட்-டில் ஆபாச படங்கள் பார்த்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள் பக்குவமில்லாத மாணவர்கள் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் புலம்புவதைப் பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது.
இந்த கொரானா தொற்று காலத்தில் நடந்த பொதுத்தேர்வுகள், நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள், அவை ஏற்படுத்திய பாடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கு எப்படி அழைத்துப் போவது, எங்கு தங்குவது, என்ன சாப்பிடுவது, குழந்தையுடன் யார் போவது, குடும்பமே போவதா, யாருடன் நம்பி அனுப்புவது, இ-பாஸ் வாங்குவது எப்படி, திரும்புவது எப்படி... அப்பப்பா எத்தனை எத்தனை கேள்விகள்... கிறுக்குப் பிடிக்காத குறையாக பெற்றோர்கள் புலம்பியதைப் பார்க்கவும் மிகவும் மனது வலித்துத் தான் போனது..
கல்வியாண்டு முழுவதும் அச்சமும் ஐயமும் சூழ்ந்து கிடக்கத்தான் போகிறது எனும் நிலையில் அரசு பாடநூல்களை அனுப்பும் பணிகளைத் துரிதமாகச் செய்து வருகிறது.. பள்ளிக்கூடம் பக்கத்தில் இருந்தால் எளிதாகச் சென்று வாங்கிவந்து வீட்டில் வைத்தாவது படிக்கலாம் என்று குழந்தைகள் நினைப்பதும் சரியாகத் தான் இருக்கிறது. அருகிலிருக்கும் பள்ளிக்கூடம் என்றால் சிறு சிறு எண்ணிக்கையில் கூட குழந்தைகளை வரச் சொல்லி தனிமனித இடைவெளியுடன் சில பாடங்களை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று ஆசிரியர்களும் வருந்துவது தெரிகிறது.
இப்போது தனியார் பள்ளி நிர்வாகிகளும் பள்ளிக்கூடம் திறக்கமுடியாத சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாமல் மிகவும் சிரமத்தில் இருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிது புதிதாக முரட்டு முரட்டு கட்டிடங்கள் முளைத்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து நாமும் கூட பாவம் அவர்களைத் தவறாகத்தான் நினைத்து விட்டோம் போல... உண்மையில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். யானையைக் கட்டி வைத்து தீனி போடுவது போல மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் பல நிர்வாகிகள் பத்து, இருபது யானைகளைக் கட்டி வைத்து தீனிபோட வேண்டியுள்ளது. கடும் பொருளாதார முடக்கம், வேலையின்மை, வருவாயின்மை எனச் சிரமப்படும் அவர்களை மேலும் மேலும் அரசு வருத்தி வேடிக்கை பார்க்கக் கூடாது.
நண்பர் ஒருவர் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக போய் நின்றால் மறுக்காமல் நன்கொடைகள் தருவார்.. இப்போதெல்லாம் போனால் அப்படி தருவதில்லை.. கேட்டால் இரண்டு மூன்று இடங்களில் வீடு கட்டி வருகிறாராம்.. பாவம் சிரமப்படுகிறார். அது நமக்குத் தெரியாமல் போய்விட்டது.. எப்போ யாருக்கு என்ன கஷ்டம் வரும்னு யாருக்கு தெரியும்...??
அது போல தான் இவர்களும்.. யானைகளுக்கெல்லாம் தனிநபர்கள் நிச்சயம் தீனி போட முடியாது. ஆனால் அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் தீனி போட முடியும். எனவே அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். அந்தப் பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி அரசே ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அரசின் செலவிலும் பொறுப்பிலும் இலவச கட்டாயக் கல்வியை அரசே வழங்கும் என்ற அறிவிப்பைச் செய்து தமிழக முதல்வர் அவர்கள் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கும் தனியார் பள்ளிகளின் பாவப்பட்ட முதலாளிகளின் காதில் மன்னிக்கவும் வாயில் பாலை வார்க்க வேண்டும்.
தமிழகத்தின் ஒவ்வொரு குழந்தையும் இனிமேல் எந்த வாகனத்திலும் ஏற வேண்டியதில்லை. சூரியனுக்கு முன்பே குளித்து முடித்து ஓட வேண்டியதில்லை. வெந்தும் வேகாமல் குழந்தைகளின் வாயில் திணிக்க வேண்டியதில்லை. விடிந்தும் விடியாத நிலையில் தூங்கிக்கொண்டே பள்ளிக்கு போக வேண்டியதுமில்லை. சிறப்புப் பயிற்சி வகுப்புகளையெல்லாம் முடித்து சூரியன் மறைந்த பிறகு அலுத்துப் போய் வீடு திரும்ப வேண்டியதுமில்லை. அரசுப்பள்ளிகளில் பணிவாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பல இலட்சக்கணக்கான ஆசிரியர் கல்வி முடித்த இளைஞர்கள், இளைஞிகள் வருந்த வேண்டியதில்லை. அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகள்.. அனைவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. அதுவும் வீட்டுக்கு அருகருகே.. எத்தனை சந்தோசம்.. ஆஹா, எத்தனை உற்சாகம்.
கல்வி குறித்த சில விவாதங்களில் பேரா.ராஜமாணிக்கம் அவர்கள் இந்த பள்ளிகளின் பெயரை கட்டணப் பள்ளிகள் என்று மாற்ற வேண்டும்.. குழந்தைகளின் கல்விக் கட்டணங்கள் தான் கட்டிடங்களாக முளைத்து நிற்கின்றன என்பதால் இந்த முதலீட்டின் பங்குதாரர்களாக பெற்றோரும் கருதப்பட வேண்டும். இலாபத்தில் பங்கு தர வேண்டும் என்றெல்லாம் பேசியது ஒரு பக்கம் நினைவுக்கு வருகிறது.. கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25% குழந்தைகளுக்கு தமிழக அரசு பணத்தை உடனடியாக வழங்கவில்லை என்றால் இந்த கல்வி ஆண்டில் ஒரே ஒரு குழந்தையைக் கூட எங்கள் பள்ளிகளில் சேர்க்க முடியாது என்று கவர்னர் பங்கேற்ற ஒரு கூட்டத்திலேயே துணிச்சலாக தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் அறிவித்தது கூட ஏனோ தேவையில்லாமல் சிந்தனையில் வந்து போகிறது.. சரி, பழசையெல்லாம் கிளற வேண்டாம்.. விடுங்க..
இந்தச் சமூகத்தைக் கல்வியால் மேம்படுத்த இரவும் பகலும் நாளும் பொழுதும் அயராது.. கொஞ்சமும் அயராது இத்தனை ஆண்டுகாலம் உழைத்த தனியார் முதலாளிகளுக்கு ஓய்வுகொடுப்போம்.. மிகவும் சிரமப்பட்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய, பணியாளர்களை, வாகனங்களைப் பராமரிக்க வேண்டிய என இன்னும் எத்தனையோ துயர்களிலிருந்து அவர்களை அரசு மீட்க வேண்டும்.. தனியார் பள்ளிகளின் துயரங்களை துடைக்க வேண்டும்... எனவே அனைத்து தனியார் பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்.. கட்டணமில்லா கல்வியை, தரமான, சமமான கல்வியை அருகமைப் பள்ளிகளின் மூலம் அரசே வழங்க அனைவரும் வலியுறுத்துவோம்..
தனியார் பள்ளி நிர்வாகிகளின் குரல்களுக்கு துணை நிற்போம். அவர்களுக்காக நாமும் உறுதியாகப் போராடுவோம்...
- தேனி சுந்தர் ..
Comments
Post a Comment