கொரோனா காலத்தில் மாற்று வகுப்பறை..! - தேனி சுந்தர்
உலகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக அனைத்தும் முடங்கியிருக்கிறது. நோய்த் தொற்றால் இலட்சக் கணக்கிலான மரணங்கள் என்றால் இன்னொரு பக்கம் பொருளாதாரத் தேக்கம், வேலை வாய்ப்பின்மை, வருவாயின்மை எனப் பல சிக்கல்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன. இத்தனைக்கும் இடையில் தான் அரசும் மக்களும் பெற்றோரும் கல்வியாளர்களும் குழந்தைகளின் கல்வி குறித்து பெருங்கவலை கொள்கின்றனர்.
பள்ளிகளை எப்போது திறப்பது, பாடத் திட்டத்தைக் குறைக்கலாமா, பாடங்களைக் குறைக்கலாமா, தேர்வுகளை நடத்தலாமா, கல்வி ஆண்டு முழுவதும் ரத்து செய்து விடலாமா, பள்ளிகளைத் திறந்து விட்டால் வகுப்புகளை எப்படி நடத்துவது எனக் கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. உண்மை என்னவென்றால், கொரானா தொற்று தீவிரமாகி வருகிறது. எந்த ஷிப்டும் நடைமுறைக்கு வரமுடியாது. அதனால் புதிய அல்லது மாற்று வகுப்பறைகள் குறித்து சிந்தித்தே ஆக வேண்டும்.
இங்கு தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தன் தொடர்ச்சியான பணிகளின் அனுபவத்திலிருந்து சில முன்மொழிவுகளை அரசின் முன்பும் சமூகத்தின் முன்பும் வைக்கிறது. கல்லாமையை இல்லாமை ஆக்கும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியது தான் அனைவருக்கும் ஆரம்பக் கல்விக்கான இயக்கம். அந்தப் பெருங்கனவின் சிறு முயற்சி தான் இந்த சிட்டுக்கள் மையம்.. மேலும் துளிர் இல்லம், இரவுப் பள்ளி, மக்கள் பள்ளி இயக்கம் எனப் பல முன்மாதிரிகளையும் வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்கிறது அறிவியல் இயக்கம்.
சரி, சிட்டுக்கள் மையம் என்றால் என்ன? குழந்தைகளுக்கு என்ன செய்தது?
விளையாட்டாய்க் கற்போம்.. கற்பதைக் கற்கண்டாய் மாற்றுவோம்.. பாடிக் கற்போம்.. விளையாடிக் கற்போம்.. -இவை தான் அந்த சிட்டுக்கள் மையத்தின் முழக்கங்கள்..
மையத்திற்கு வருகின்ற குழந்தைகள் பள்ளியில் வழங்கப்பட்ட அதே பாடநூல்களைத் தான் படித்தார்கள்.. ஆனால், வரிசைப் படியாக பாடங்கள் நடத்துவதும் இல்லை. எல்லாப் பாடங்களையும் நடத்துவதும் கிடையாது. எந்தப் பாடம் படிக்க வேண்டும் என்பதை அந்தக் குழந்தை தான் தீர்மானிக்கும். எந்தப் பாடமாக இருந்தாலும் கதை, பாட்டு, விளையாட்டு, குழந்தைகளுக்கான செயல்பாட்டு வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் இருவேறு கருத்திற்கு இடமில்லை. மையங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மட்டுமே இயங்கும் மையத்தில் வருகைப்பதிவு, பாடல்கள், கலந்துரையாடல், கற்பனையைத் தூண்டும் விளையாட்டுகள், கதை நேரம், வீட்டுப் பாடங்களைச் சரிபார்த்தல், உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான நேரம் என ஒவ்வொரு வகுப்பும் திட்டமிடப்பட்டது.
நன்கு வாசிக்கத் தெரிந்த குழந்தைகள், உதவி தேவைப்படும் குழந்தைகள், கணக்குப் பாடத்தில் பின் தங்கிய குழந்தைகள், நினைவுத்திறன் குறைவான குழந்தைகள் மற்றும் இவை போன்ற எல்லாப் பிரச்சனைகளும் உள்ள குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கேற்ப மையச் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டன.. இந்த வழிமுறைகளை சிட்டுக்கள் மிகவும் விரும்பின. கற்பது சுமையாக அல்லாமல் கற்கண்டாக இனித்தன.. விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை.. அறிவுத் திறமைக்கும் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவிடும் வித்தை.. எனவே குழந்தைகள் மகிழ்ச்சியாக பங்கேற்றுக் கற்றனர். இலக்குகள் அதனால் எட்டப்பட்டன.
மையத்தின் அனுபவமும் கொரானா கால கல்வியும்
எந்த சமூகப் பொருளாதார வேறுபாடுகளுமின்றி எல்லாக் குழந்தைகளும் வீட்டில் தான் இருக்கின்றனர். வீட்டிலும் சமூகத்திலும் கல்வி குறித்த கவலை உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிறது. பெற்றோரிடம் கல்வி பாதிப்பு குறித்து பெருங்கவலை இருக்கிறது. எனவே பெற்றோர் மட்டுமின்றி சமூகத்தின் ஒத்துழைப்பும் எளிதாக கிடைக்கும்.
குழந்தைகளை சிறுசிறு குழுக்களாக எளிதாக ஒன்றுதிரட்ட முடியும். குழு என்றால் இரண்டு மூன்று குழந்தைகளில் இருந்து அதிகபட்சம் பத்து குழந்தைகள் சேர்ந்து ஒரு மையம். வீதிக்கொன்று, பெரிய குடியிருப்புகள் எனில் ஒவ்வொரு குடியிருப்புக்கு ஒன்று என அமைக்கலாம். எண்ணிக்கை மிக முக்கியம். எண்ணிக்கை கூடும்போது தனித்தனி மையங்கள் அமைக்கலாம். தனித்தனி இடங்களில், கூடுமானவரை பெற்றோரின் அவர்களின் வாழிடப் பகுதிகளிலேயே அமைக்கலாம். அப்பாவோ அம்மாவோ சத்தம்போட்டு அழைத்தால் குழந்தைகளுக்குக் கேட்கும் தூரத்திற்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தன்னுடைய தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டே இதுபோன்ற மாற்று வகுப்பறைகளைச் செயல்படுத்தியது. இன்று அத்தகைய சூழ்நிலை இல்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்கள் எனப் பலரையும் அவர்கள் வாழும் பகுதிகளிலேயே திறம்பட பயன்படுத்த முடியும்.. ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கான மையங்களை சிறுசிறு குழுக்களாக அவரவர் வீதிகளிலேயே நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
என்ன பாடம் நடத்துவது? முதல் சில வாரங்கள் பாட்டும் கதையும் விளையாட்டுமாகத்தான் நடத்த வேண்டும்.. ஏனென்றால் இப்போதைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. உலகச் சுகாதாரப் பேரிடர் காலம். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, வருவாயின்மை அவற்றின் விளைவால் குடும்பத்தில் அமைதியின்மை, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை எல்லாம் சூழ்ந்து பல குடும்பங்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.. இதற்கிடையில் தான் அத்தகைய குடும்பமும் குழந்தைகளின் கல்வி குறித்தும் கவலையடைகிறது..
அரசு நடத்தும் கல்வித் தொலைக்காட்சியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வப்போது இணையவெளிச் சந்திப்பாக குழந்தைகளை விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்சார்ந்த வல்லுநர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாட வைக்கலாம்.
எனவே பாடநூலை வாழ்க்கையாக மாற்றாமல் வாழ்க்கையையே பாடநூலாக்க வேண்டிய காலம் இது. குழந்தைகளுக்கு கொரனா குறித்த விழிப்புணர்வை பாடல்கள், அறிவியல் கதைகள், பத்திரிகை செய்திகள், அரசு வெளியிடும் விழிப்புணர்வுக் காணொளிகள், யூனிசெப் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான கையேடுகள் போன்றவற்றையே சில வாரங்களுக்குப் பின்பற்றலாம்.. காகிதக் கலைப் பயிற்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், தனிநபர் இடைவெளியுடன் கூடிய விளையாட்டுகள் போன்றவற்றைக் கற்பிக்கலாம்..
வாழ்க்கையோடு தொடர்புடைய செயல்பாடுகள் கொடுக்க வேண்டும்.. உதாரணத்திற்கு விளம்பரங்களின் தாக்கம் பற்றி ஒரு செயல்பாடு உண்டு. செயல்பாடு என்னவென்றால் குழந்தைகள் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கவனித்து வருதல், அவற்றில் எத்தனை விளம்பரங்கள் உணவு, ஒப்பனைப்பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கட்டுமானப்பொருட்கள், வீட்டுத் தேவைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், வாகனங்கள், மருத்துவம், குடிநீர் சேமிப்பு மற்றும் அரசு நலத்துறை விளம்பரங்கள் வருகின்றன என பட்டியலிடுதல், வகைப்படுத்துதல் என எல்லாமே கல்வி தான். கற்றல் தான். இதுபோல அவர்கள் வாழும் சூழலில் உள்ள மரங்கள், மரங்களைச் சார்ந்துள்ள உயிரினங்கள், பறவை இனங்கள், மண்ணின் தன்மை, நீர்வளம் எனப் பல செயல்பாடுகளை அளிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.. கல்வியை, கற்றலைச் சரியாகப் புரிந்து கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் கூட கல்வி மையங்களாக மாறிவிடக்கூடும். அந்தப் புரிதல் சரியான புரிதலாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பகுதியில் கொரானா தாக்கம், பாதிக்கப்பட்ட வீடுகள், தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றையும் கொண்டு செல்ல முடியும்.. அதுவும் கல்வியின் அங்கம் தான்.. கியூபா போன்ற நாடுகளில் பேரிடர் காலப் பயிற்சி, பங்களிப்பு என்பது குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒன்று.. அதனால் தான் இந்த கொரனாத் தாக்கத்தின் போது கூட தங்கள் நாட்டைப் பாதுகாப்பதோடு மற்ற பல நாடுகளுக்கும் கியூப மருத்துவர்கள் துணிந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மையத்தின் எந்தவொரு கட்டத்திலும் பாடம், பரிட்சை, தேர்வு, அறிக்கை என அச்சமூட்டும் நிர்பந்தங்கள் இல்லாதவாறு குழந்தைகளைக் கல்வியோடும் கற்றலோடும் தொடர்பில் வைத்திருக்க வேண்டும். இந்த முழு முடக்கத்தின் போது பள்ளிகளில் பாடங்களை நடத்தி திணிக்க முடியாத விசயங்களையெல்லாம் இந்த மாற்று வகுப்பறைகள் மூலம் திணித்து விட ஒருபோதும் முயற்சிக்க கூடாது.
இந்த மாற்று வகுப்பறையைச் செயல்படுத்தினால் தொற்று பரவிட வாய்ப்பாக அமைந்து விடாதா? இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
கொரானா தொற்று பரவியபோது முதலில், ஒட்டுமொத்த தேசத்திற்கும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னர், தேசம் முழுவதும் தேவையில்லை. அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து அந்தந்த மாவட்டங்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல மாற்று வகுப்பறைக்கான இந்த முன்மொழிவும் அனைத்துப் பகுதிகளுக்குமான ஒரு தீர்வு அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. இது இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு. கிராம, நகர வேறுபாடு, தொற்று தாக்கம் அதிகமாக, குறைவாக, எந்தப் பகுதிகளில் தொற்று குறைவாக உள்ளதோ, எந்தப் பகுதிகளில் சாத்தியமோ அந்தப் பகுதிகளில் மட்டும் முதல்கட்டமாக செயல்படுத்தினால் போதுமானது.
தற்போது பரவலாக விவாதிக்கப்படும் ஆன்லைன் கல்வியானது ஆசிரியருக்கோ அல்லது நேரடியான கற்றலுக்கோ எந்த வகையிலும் எந்த நிலையிலும் சமனாகாது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தங்களது கல்வியாண்டைத் துவங்கிவிட்டனர். அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவே வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கவனித்தாலும் வழக்கமான பள்ளிச் சீருடை, காலணி, இடுப்பு பட்டை, கழுத்துப் பட்டை முதற்கொண்டு அணிந்து வகுப்பில் கலந்துகொள்ள குழந்தைகள் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.. அது கற்றலை நிகழ்த்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாது. ஆனால் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைத்துச் சித்திரவதைப்படுத்தும், கண்களுக்கும் உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதை நிச்சயம் உறுதிபடக் கூறமுடியும்.. எனவே இன்றைய சூழலுக்கும், கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கும் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ கிடையாது. அரசு மாற்று வகுப்பறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.. கல்வியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இந்த முன்மொழிவை ஆதரிக்கிறார்கள். எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாள்தோறும் ஆலோசித்து வருகிறார்கள்.
நிறைய விமர்சனங்கள் ஒவ்வொரு அமைப்புகளுக்கும் இருக்கலாம். ஆனாலும் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் இம்முயற்சியில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கொரானா தாக்கம் குறைந்து, பள்ளிகள் திறக்கும் வரையிலும் இதுபோன்ற ஒரு திட்டமிடலுடன் கூடிய இந்த தற்காலிக ஏற்பாட்டை, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியில் பங்காற்றக்கூடிய அனைவரையும் கலந்தாலோசித்து அரசு செயல்படுத்த வேண்டும்.. அதன் மூலம் கொரனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.. குழந்தைகளின் கல்வியையும் தொடரலாம்..
- தேனி சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (07.07.2020)

Comments
Post a Comment