டுஜக் டுஜக் : பக்கத்திற்கு பக்கம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!- மதுரை அமுதா
டுஜக்.. டுஜக்… படிச்சு முடிச்சுட்டேன்…என் வாசிப்பனுபவத்தை சொல்லியே ஆகணும் … வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் புகழ்மதி என் கைய பிடிச்சு “வா அத்தைன்னு” அவ உலகத்துக்கு கூட்டிட்டு போயிடுறா.
அந்த உலகத்துகுள்ள போன கொஞ்ச நேரத்தில் அவளின் அன்பு அற்புதம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது. நம்மை மயக்கி ஏதோ மாயை செய்கிறது. அவளின் கொஞ்சும் மழலை மொழியில் நம்மை மறந்து சிரித்துகொண்டிருக்கும் போதே… ரியாலிட்டி ன்னு சொல்லி வெளியில கூட்டிட்டு வந்துட்டார் சுந்தர் சார். இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட இருந்திருக்கலாம்….
குழந்தைகள் உலகம் எவ்ளோ அழகானது என்பதை ஒவ்வொரு வரியிலும் ரசிக்க முடிந்தது. பக்கத்திற்கு பக்கம் மகிழ்ச்சியையும்… நெகிழ்ச்சியையும் கொட்டிவைத்துள்ளார் சுந்தர் சார்.
பணியின் நிமித்தம் நான் வெளி ஊருக்கு சென்று விட என் இரண்டு பிள்ளைகளையும் அம்மா தான் வளர்த்தாங்க. அதனால குழந்தைகளோட கவித்துவமான உரையாடலை நான் அனுபவித்ததே இல்லை. அந்த குறை இன்று நீங்கியது போல உணர்ந்தேன். வாழ்க்கையில் எவ்ளோ அற்புதமான விசயத்தை வேலையின் பின் ஓடி இழந்துள்ளேன் என்று நினைக்க நினைக்க ஏக்கமாய் இருந்தது.
சின்சான், ஹீமாவரி, மிர்ச்சி, நொகாரா, இந்தப் பேர்லாம் இன்னும் ரேசன் கார்டுல தான் சேர்க்கல… இதை வாசிக்கும் போது சின்சானா வாழ்ந்துகிட்டுருக்குற என் மகன் தான் நினைவுக்கு வந்தான். சீப்பு கூட சிவப்பு கலரில் கேப்பான் ஏண்டா ன்னா “என் தல சின்சான் க்கு சிவப்பு கலர் தான் புடிக்கும்”ன்னு சொல்லுவான்..
“போப்பா லூசப்பா…
நானு இன்னும் பெரியபிள்ளையே ஆகல…
நானு பாப்பா…”
“வேணாம்ப்பா…
நான் எடுத்தெடுத்து
தருவனாம்.
நீ போட்டுட்டு போட்டுட்டு
ஒடி வருவியாம்….!”
“செடிக்லாம் எப்டிப்பா
மாஸ்க் போடுவாங்க…??”
“அப்ப…
அண்ணன்
அப்பா வயித்துல
இருந்தானா….??”
இதெல்லாம் நான் மறுபடி மறுபடி வாசிச்ச வரிகள். மனசு சோர்வா இருக்கும் போது இதை வாசிச்சு பாருங்க…
புகழ் மயில் இறகில் மருந்து போட்டுவிடுவா… அவ்ளோ இதமா இருக்கும்… எழுந்து இன்னும் வேகமா ஓடலாம். புகழ்மதியை உடனே பார்க்கணும் போல ஆசையா இருக்கு . எந்த வேலை செய்துகொன்டிருந்தாலும் அனிச்சையாக டுஜக்… டுஜக்.. ன்னு சொல்லிட்டே இருக்கேன்..
மதுரை அமுதா, ஆசிரியை
நன்றி :bookday.in
Comments
Post a Comment