அம்மாவின் பார்வையிலிருந்தும் பதிவுகள் வர வேண்டும்..! - ச.முத்துக்குமாரி

நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கே?! இது என்ன மாதிரியான நூலாக இருக்கும் என்ற ஆர்வம் இயல்பாக இருந்தது.




தோழர் சுந்தரின் மகன் டார்வின், மகள் புகழ்மதி மற்றும் தன் தம்பி குழந்தைகளின் தினசரி உரையாடலை கரோனா காலத்தில் பதிவு செய்துள்ளார். நல்ல முயற்சி.

" சின்சான்.. ஹூமாவரி..
மிர்சி..
நொகாரா..
ஷீரோ..

இந்தப் பேரலாம்
இன்னும் ரேசன் கார்டுலதான்
சேக்கல"

எப்போ டார்வினுக்கு சின்சான் பிடிச்சதோ அப்பவே என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டான். சின்சானை ரசிக்காம கூட இருக்க முடியுமா என்ன??

"நாங்க தான்
உங்க லெவலுக்கு வரணுமோ
கொஞ்சம் கூட
எறங்க மாட்டீங்களோ' என்றான்..

பெரியவர்களுக்கான அறிவுரை..

"இப்டி இப்டி
பறக்குற பட்டாம்பூச்சி
வாங்கிட்டு வா"

இதை வாசிக்கும் போதே புகழ் எப்படி கைகளை அசைச்சி அசைச்சி பறந்துருப்பாங்க என கற்பனை ஓடுகிறது. குழந்தையாகவே இருந்திருக்கலாம்.

"போ பாப்பா
ஒங்ட்ட அப்பா
என்னா சொல்லிட்டுப் போனேன்..
அண்ணன பாத்துக்கன்னு
சொல்லிட்டுப் போனேன்ல"

தங்கச்சி அண்ணனைப் பார்த்துக்கனுமா? எல்லா பொறுப்பையும் பெண்தான் எடுத்துக்கனுமா?! என்ன.

"பாப்பா ஓடி வா
ரெண்டு பேரும்
வெங்காயத்த உரிச்சு உரிச்சு
விளையாடுவோம்.. "

வெங்காயம் உரிக்க பாப்பாதான் ஓடி வரனுமா? பையனையும் அழைத்திருக்கலாம்! என தோன்றியது.

"சூரியன தொட்டியில போட்டு தூங்க வைக்கப் போறேன்"

"மின்னல் னா.. கெட்டு போன லைட்டா..

சூரியனாலே solar system, global warming னு தான் யோசிக்க தோன்றுகிறது.
சூரியனைத் தூங்க வைக்க நினைக்கும், நட்சத்திரத்தை வீடு வரை அழைத்து வரும் குழந்தை மனசு இருக்கே! வளர்வதால் எத்தனை இழக்கிறோம்!?

" பாருப்பா..
டார்வின் பாப்போம்னு
சொல்றான்..
பெரியவங்க தான்
அப்படிச் சொல்லனும் "

எது பெரியவர்கள் மொழி என எவ்வளவு நுணுக்கமாக குழந்தைகள் கண்டு கொள்கிறார்கள். நமக்குத்தான் குழந்தைகள் மொழி புரிவதில்லை.

" குழந்தைகள்
தரும் தண்டனைகள்
வித்தியாசமானதுதான்
உடனடி மன்னிப்பு..!
இலவச இணைப்பாக
இறுக்கமான அணைப்பு..!!

பொங்கல் விடுமுறையில் அக்கா மகள் யாழினிக்கு நகம் வெட்டினேன். கவனக்குறைவாக லேசாக சதையை வெட்டியதும் அழ ஆரம்பித்தாள். எனக்கு உயிர் போய்விட்டது. எனக்கு கண் கலங்கியது. அதைப் பார்த்த அடுத்த கணம் அவள் அழுகையை நிறுத்தி மன்னித்துவிட்டாள்.

அப்போது அவ்வளவு மனநெருக்கடிக்கு ஆளானேன். இந்த மனது நமக்கு இல்லையே என.. நூல் முழுவதும் வீட்டில் நடக்கும் குழந்தைகளின் மொழியை ஒரு அப்பாவின் பார்வையில் பதிவு செய்கிறார். அவ்வகையில் இந்நூல் மிக முக்கியமானது. இதே போல் அம்மாவின் பார்வையில் வீடும், குழந்தைகளின் மொழியும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற ஆவல் எழுகிறது.

"சரிம்மா
அப்பா சோறாகட்டும்
நீ படிம்மா"
என்கிற புகழின் வார்த்தைகள் நிஜமாகட்டும். தோழர் சுந்தர் அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

நூல்: டுஜக் டுஜக்ஆசிரியர்: தேனி சுந்தர்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
₹100

-ச.முத்துக்குமாரி

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!