நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : வாசிப்பனுபவம் : இரா.சத்யா, தேவாரம்
இந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்ப்பதற்கு குறுகிய காலமே ஆனாலும் என் பார்வைக்குத் தட்டுப்பட சற்று தாமதமாகித் தான் விட்டது.
சர்வதேச தன்மை கொண்ட இலக்கியம் என்ற பாராட்டுதலும் நம்ம வீட்டு நட்சத்திரங்கள் என்று கொண்டாடப்படுகிற போற்றுதலும் குழந்தைமை எனும் அற்புத உலகின் சாவிகள் என்ற அடையாளப்படுத்துதலும் நூலின் முகப்பை அலங்கரித்து கௌரவிக்கின்றன. இதற்கு மேல் புதிதாக என்ன சொல்ல வேண்டி இருக்கிறது என்றொரு எண்ணம் தான் எனக்குத் தோன்றியது.
புகழ்மதியின் ஆசிரிய தோரணையும் கற்பித்தலும் காணக் கிடைக்கப் பெற்ற அருணா மிகவும் கொடுத்து வைத்தவர். நம் குழந்தைகளின் பெயர்கள் வேறாக இருந்தாலும் செல்லப் பெயர்களால் அழைக்கும் போது அதுவே அவர்களது நிரந்தரப் பெயராக மாறிவிடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. புகழ்மதியும் நான்கு பெயர்களால் தான் அழைக்கப் படுவதை சொல்லிக் கர்வப்பட்டுக் கொள்ளும் தருணம் மிகவும் அழகியது. விளையாட வந்த சர்வினை படிக்கவும் எழுதவும் சொல்லிக் கற்பிக்கும் பாப்பாவின் அனுசரணையான அணுகுமுறை நிச்சயம் போற்றுதலுக்குரியது. அது கண்டிப்பாக அவரது தந்தையிடம் இருந்தே அவர் பெற்றிருக்கலாம் என்பது என் அனுமானம்.
சிறுவயதில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு விண்மீன்களைப் பார்த்து எண்ணாமலோ வியக்காமலோ விளையாடாமலோ தவறவிட்ட குழந்தைகள் யாரும் இருக்க முடியாது. அதிலும் நான் என் சகோதரியுடன் சில நட்சத்திரங்களைக் காட்டி அவை என்னுடையவை அந்தப் புறம் உள்ளவை உன்னுடையவை என்று பாகப்பிரிவினை எல்லாம் செய்த காலங்கள் உண்டு. நாம் நட்சத்திரங்களை வியந்து பார்த்த மனநிலை மாறி நட்சத்திரங்கள் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற அவதானிப்பை என்னவென்று சொல்லி வியக்க! வார்த்தைகளே கிடைக்கவில்லை சார்!
சாமி , பேய் என்ற கற்பிதங்கள் எல்லாம் குழந்தைகள் மனதில் எப்படிப் படிந்து போய் விடுகின்றன! அதனை மடை மாற்றி எல்லாம் "ச்சும்மா" என்ற தந்தையின் வழிகாட்டல் எதையும் எதிர்கொள்ளச் செய்யும் அல்லவா! கன்னடம் பேச வேண்டும் என்றால் நம் தமிழ் வார்த்தைகளுடன் ரு சேர்த்துக் கொள்ளலாம்; தெலுங்கு பேச வேண்டும் என்றால் லு சேர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்காலங்களில் நகைச்சுவையாகத் தோழிகளிடம் சொல்லிச் சிரித்ததுண்டு. ஆனால் ஆங்கிலம் கற்கும் உத்தியைப் படித்துவிட்டு எவ்வளவு சிரித்தேன் என்றே தெரியவில்லை!
காந்தித் தாத்தா அடையாளப்படுத்தப்படும் இடங்களும் அதெல்லாம் அந்தக் காலம் என்ற அலுப்புடன் நினைவூட்டும் வார்த்தைகளும் அதன் முழு அர்த்தம் புரியாமலேயே எவ்வளவு அழகாக, பொருத்தமாக பயன்படுத்துகிறாள் இந்தச் செல்லக் குழந்தை!
வீட்டின் செல்லப் பிராணிகள் உரிமையாளர் மறைந்து விட்டால் கொண்டாடும் துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனித உறவுகள் மட்டுமே உறவுமுறைப் படுத்தி அழைக்கப்படும் என்ற அநியாயமான சமூக நியதியை முற்றிலும் புறக்கணித்து சீட்டாவோட அம்மா இறந்துட்டாங்க என்று தகவல் சொல்லும் குழந்தையின் நேசத்தையும், இறந்த பல்லியின் உறவினர்கள் வந்து போனார்களா என்ற விசனத்தையும் எந்த வார்த்தைகளில் நாம் அளந்து விட முடியும்!
சிறுவயதில் திருவிழாக் காலங்களில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கும் குழாய் ரேடியோ எனப்படும் ஒலிபெருக்கியின் வழியே பாடல்களைக் கேட்டுவிட்டு அதன் அருகில் சென்று நின்று உற்று உற்றுப் பார்த்திருக்கிறேன். வெவ்வேறு குரல்களில் எப்போது பார்த்தாலும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கண்ணுக்கே தெரிய மாட்டேன் என்கிறார்களே என்பதுதான் என்னுடைய அப்போதைய கேள்வி. அதை என் அம்மாவிடம் கேட்டால் அடி விழும் என்று அப்பாவிடம் கேட்டு அவர் சத்தமாகச் சிரித்திருக்கிறார். அதே ஐயம் தற்போது தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்து புகழ்மதிக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் ! காலம் மாறினாலும் குழந்தைமை என்பது மாறாதது போல!
எரிமலையின் கால் வலியைப் பற்றியும், மேகம், காற்று, மழை இவற்றின் பயணம் பற்றியும் அவளின் மொழியில் கேட்கும் போது எவ்வளவு அழகு!
எழுத்தாளர் சுஜாதாவின் ஜோக் ஒன்று உண்டு. அம்மா வயிறு ஏம்பா பெருசா இருக்கு என்று கேட்ட குழந்தையிடம் பொய் சொன்னால் வயிறு பெருசாகி விடும் என்று தந்தை சொல்லி வைத்திருப்பார். அந்த ஜோக் ஞாபகம் வந்துவிட்டது புகழ்மதி அதிகப்படியாக உணவு உண்டால் வயிற்றில் குழந்தை வந்து விடுமா? என்று கேட்டதை வாசித்த போது. இந்த உலகில் ஒரு குழந்தை கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடிந்த அளவு ஞானத்துடன் இன்னும் யாரும் பிறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மீனுக்கு காய்ச்சல் வராத காரணத்தையும் முடியை துடைத்தவுடன் ஈரம் போகாததன் காரணத்தையும் குழந்தையின் மொழியில் விளக்கம் அளவு நம்மில் யாராவது மொழிப் புலமை வைத்திருக்கிறோமா?
தந்தையின் தாடி குத்துவது தனக்கு வலிக்கிறது என்று புகார் செய்துவிட்டு அவருக்கு வலிக்கிறதா என்று கேட்டு, கன்னத்தில் செல்ல அடி அடிக்கும் மகளின் அன்பை என்னவென்று சொல்ல!? முத்துக்குமாரின் கவிதை வரிகள் போல மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் இத்தகைய அழகிய தருணங்கள் மற்றும் வரங்கள் கிடைக்கும்!
பார்ப்பதற்கு கறாரான தோற்றமாகத் தெரிந்தாலும் சுந்தர் சாருக்கு இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம். டார்வின் தத்துவத்தை பாப்பா உற்று நோக்கிய விவரத்தை அவர் சொன்ன விதம் இருக்கிறதே! விழுந்து விழுந்து சிரித்தேன்!
எங்கள் பாட்டி சொல்லக் கேட்டதுண்டு, நிறை பானைத் தண்ணீரைக் குறைபானை ஆக்க, குழந்தை இல்லையே என்று குழந்தை இல்லாதவர்கள் ஏங்குவார்களாம். ஒரு குழந்தை நீரைச் சிதறி விளையாடும் வீடு எப்படி இருக்கும்! அதை எதிர்பார்த்து ஏங்கிய மனநிலை மாறி, நம் சின்னஞ்சிறு மனிதர்கள் சுவரில் வரைந்த சித்திரங்களைப் பார்த்து, வீட்டை அசிங்கப்படுத்தியதாக ஆதங்கப்படும் மனநிலை எங்கிருந்து வந்தது?
குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கும்போது வெற்றி தோல்வி என்ற பாகுபாடு இன்றி பங்கேற்பு மட்டுமே முக்கியம் என்ற மனநிலையை உருவாக்குவதற்காக நான் எங்கள் பள்ளியில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்குவதுண்டு. ஆனால் புகழ்மதி சொன்னது போல, "நான் தோத்துட்டேன் இல்ல !அதுக்கு தான் இந்தத் தட்டு!" என்ற காரணம் இருக்கிறதே ! எதையும் எதிர்கொள்வாள் எதிர்காலத்தில்!
பெயர் என்பது நம் அடையாளம் . அதிலும் தன்னை தனித்துக் காட்டும் விதமாக தந்தையைப் போலவே அனைவருக்கும் இணைப் பெயர் சூட்டும் விதம் அருமை. கேட்டதைச் சொல்லும் குழந்தை! இன்று காலையில் கூட எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் நட்சத்திரங்கள் பற்றிய குழந்தையின் கூற்றை சிலாகித்துக் கூறவும் அவர்களும் சிரித்தனர்.
எத்தனை முறை இதுவரை வாசித்தேன் என்ற கணக்கே இல்லை! இன்னும் எத்தனை முறை வாசிப்பேன் என்று சொல்லவும் முடியாது! நன்றி சார்..
-
இரா.சத்யா
தலைமை ஆசிரியர், தேவாரம்

மிக அருமை. நன்கு உள் வாங்கப்பட்டு மிக அழகாக வெளி படுத்தி உள்ளீர்கள் 🙏🏽👌🏽👌🏽
ReplyDeleteமிக்க நன்றி
Delete