"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூல் விமர்சனம் : தேவி நாச்சியப்பன்
"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூலில் தேனி சுந்தர் அவர்கள், குழந்தைகளை உற்று நோக்கி வழங்கிய செய்தியும் படங்களும் அருமை. கவிதை வடிவில் அமைந்த உரைநடை நூல் எனக் கருதுகிறேன்.
சங்கப் பாடல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, திருக்குறள் போன்றவற்றிலும் காப்பியங்களில் சூளாமணி, நள வெண்பா போன்றவற்றிலும் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழிலும் குழந்தையைப் பற்றிய பாடல்கள் உண்டு.
குழந்தையின் செயல்களை,
"மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"
"இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்ந்தும்..."
என எழுதி உள்ளனர். இவற்றைப் போல் இது இக்கால மொழியில் குழந்தைகள் பற்றி எழுதப்பட்ட இலக்கியமாகவே தோன்றுகிறது.
குழந்தைகளுக்காக எழுதப்படும் இலக்கியம் அவர்கள் வயதுக்கேற்றதாக, புரிந்து கொள்ள எளிதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக அமைகிறது. வயதுக்கேற்றது என்று பார்க்கையில், இது மிகச் சிறிய குழந்தைகள் நாளும் செய்யும் செயல்களின் வருணனையாகவே அமைந்துள்ளது. அந்த வயதுடைய குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ள இயலாது. மேலும் 'கண்டமேனி', 'வீட்டம்மா', ' வெளஞ்சு போயி' போன்ற சொற்கள் தவிர்க்கப்படுவதே நல்லது என நினைக்கிறேன். ' ஆடை அரசியல்' போன்றவை குழந்தைகளுக்குத் தேவையா? எனவும் சிந்திக்க வைத்தது.
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இது குழந்தை இலக்கிய வகைமையில் இடம்பெற வாய்ப்பில்லை. தாங்கள், தங்கள் சுற்றம் பற்றிய அனுபவப் பகிர்வாகவே கருதுகிறேன்.
-
தேவிநாச்சியப்பன்

Comments
Post a Comment