களமிறங்கும் நேரமிது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக குறிப்பாக தேனி, சிவகங்கை மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் நடந்த மாநிலச் செயற்குழு முடிவின் படி மாநிலந்தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட நண்பர்கள் பலரும் பலவிதமாய்த் திட்டமிட்டுக் கொண்டிருக்க அறிவியல் இயக்க (ஆசிரியர், தொண்டர்கள்) நண்பர்கள் இந்தப் பிரச்சாரத்திற்காக திட்டமிட்டனர்... அதன் விளைவு? தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருப்பூர், விழுப்புரம் என பத்து மாவட்டங்கள் வரையிலும் விரிவிடைந்துள்ளது.

பல மாவட்டங்களில் இந்தப் பணியை நண்பர்கள் கையிலெடுப்பதற்குத் தயங்கினார்கள்.. காரணம் என்னவெனில் நானே ஒரு தனியார் / மெட்ரிக் / நர்சரி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறேன்.. நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு எப்படி இதைக் கொண்டு செல்லமுடியும்? எனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்வது? உள்ளம் உறுத்துகிறது. அதற்காக.....?

கம்பம் நகரில் ஒரு வீதியில் பிரசுரத்தை விநியோகிக்கும் போது அதை வாங்கி தலைப்பை பார்த்தவுடன் சொன்னார் அந்தப் பெரியவர் : ”சரிங்க சார் நாங்க அரசாங்கப் பள்ளியில சேர்த்து விடறோம். நீங்க உங்க பிள்ளைய மட்டும் நாமக்கல், ஈரோட்டில சேர்த்து விடுங்க” என்றார். நண்பர்கள் கன்னத்தை தடவிக்கொண்டனர். அதற்காக......?

பேருந்து ஒன்றில் ஏறி பிரசுரம் கொடுக்க ஆரம்பித்த போது ஆசிரிய நண்பர் ஒருவர் கண்கள் மிரளப் பார்த்தார். “என்ன சார், விடுமுறையில கூட சம்பாத்தியமா?” என்றார். ஆமாம் சார். நம்மைப் பற்றிய மக்களின் விமர்சனங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.. அனைவரின் மீதும் விழ வேண்டிய அடியை, பாவமாய் ஒன்றிரண்டு பேர் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு இறங்கினேன்.... அதற்காக.....?


கல்வி அலுவலர்களைப் பார்த்து ஒத்துழைப்பு கோரியபோது நம்மை அவர்கள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் சொல்லமுடியாது... கலெக்டரே சொன்னபிறகு கூட சில அதிகாரிகள் காதில் வாங்கத் தயாரில்லை.... அதற்காக?

முகநூலில் இப்பிரச்சார இயக்கம் குறித்து அனல் பறந்தது. அறிவியல் இயக்க நண்பர்களின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? முதலில் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கச் சொல்லுங்கள்..... வாத்தியார்கள் சரியில்லை.. வசதிகள் இல்லை... ரிசல்ட் இல்லை... மார்க் இல்லை.... ஒழுக்கம் இல்லை... பாதுகாப்பு இல்லை... கமெண்ட்டுகள் நிறைந்தன... அதற்காக.....?

நாம் சொல்லவிரும்புவது “ அரசுப்பள்ளி மக்கள் பள்ளி, அரசுப்பள்ளி நமது பள்ளி; அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் நம் கடமை! அரசுப்பள்ளிகளால் மட்டுமே தரமான, சமமான கல்வியை எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கமுடியும்”... குறைகள் இருந்தால் சரி செய்யமுடியும்... பள்ளியே இல்லையென்றால் தனியாரின் கால்களில் சரணடைவதைத் தவிர வேறு வழியுண்டா?

ஆபத்து நெருங்கிவிட்டது....

கடந்த ஜூன் மாதத்தில் ஆசிரிய இயக்க நண்பர்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மாவட்டத்தலைநகரங்களில் நடந்தன. காரணம், மாநிலம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உபரிப் பணியிடங்கள்.... எல்லா மாவட்டத்திலும் உபரி ஆசிரியர்கள்....

பணியிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே போராட்டம் நடத்தும் சூழலில் நமது ஆசிரிய நண்பர்கள் ஒருபுறம்..... தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று நாமும் ஆசிரியராகிவிடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் நமது இளைஞர்கள் மறுபுறம்.... இடையில் அடுத்து வருகின்ற தகுதித்தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டுமென எப்போதும் அதே முயற்சியில் இருக்கும் இலட்சக்கணக்கான நண்பர்கள் வேறு...


மாணவர்களே இல்லாத பள்ளிக்கூடங்கள்.... நூற்றாண்டு கண்ட பள்ளிகள் மூடல்... ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்ற பள்ளிகளை மூடவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு மாணவர்கள் என விதவிதமான பத்திரிக்கைச் செய்திகள்!

ஏன் இந்த நிலை ஏற்பட்டது என ஆராய்வது ஆசிரியர் இயக்கங்களின் கடமையல்லவா? அரசாங்கம் ஒரு மிகப்பெரிய காரணியாக இருந்தபோதும் நமது அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பை மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?



கல்வித்துறையின் கடைசி அடுக்கில் இருக்கும் ஆசிரியர்களை மட்டுமே குறைசொல்லி மிகப் பெரும் திமிங்கலங்களை தப்பிக்கவிடக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..

ஆசிரியர்கள் என்ன ஆசிரியர்கள்... கல்வித்துறைச் செயலாளர், அமைச்சர், கலெக்டர் என அனைவரின் குழந்தைகளும் ஒன்றாக, நன்றாகப் படிக்கும் பொதுப்பள்ளிகளை நோக்கி நம் கவனத்தைச் செலுத்த வேண்டும்.. மக்களின் கோபத்தை அரசியல் படுத்த வேண்டும்.. அதற்கு இந்தப் பிரச்சார இயக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்... அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்களில் ”பொதுப்பள்ளிகள்” அரசியல் கட்சிகளின் விவாதப் பொருளாக மாற வேண்டும்... நாம் மாற்ற வேண்டும்...

விமர்சனங்களை வீதியிலிறங்கி நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சலின்றி இப்பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது தான்... ”தம் தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் அதைத் திருத்திக்கொள்ளும் பலமும்தான் உணமையான வெற்றிக்கான வழி” என்பது மாமேதை லெனின் அவர்களின் புகழ்பெற்ற வாசகங்களில் ஒன்று...

-சமத்துவக்கல்வி, அக்.நவ.2014

Comments

Post a Comment

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!