மனக்கஷ்டமா இருக்கும்போது இந்த நூலை வாசிங்க.. : ரமேஷ் ராஜா
குழந்தைகளோடு பேசுவதென்பது நம் மனதை இலகுவாக மாற்றிவிடும்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கவனமாக கையாள வேண்டிய அழுத்தத்தை மீறி,அவர்களோடு உரையாடும் வாய்ப்பு அவர்களின் பணியின் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அப்படியான ஒரு ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த 'ஓங்கூட்டு டூணா'.
நூலின் ஆசிரியர் பெயர் தேனி சுந்தர். பள்ளி ஆசிரியர்,அறிவியல் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்.
'டுஜக் டுஜக்- ஒரு அப்பாவின் டைரி ', ' சீமையில் இல்லாத புத்தகம் ' ஆகிய நூல்களின் ஆசிரியர். தன் வகுப்பறையில் மாணவர்களோடு நடந்த சுவாசியமான வகுப்பறை நிகழ்வுகளை நூலாக்கியிருக்கிறார்.குழந்தைகள் எதிர்பாராத நேரங்களில் நம்மை நமக்கு உணர்த்தி விடுவார்கள். அப்படியான நிகழ்வுகள் அதிகம் நடக்கிற இடம் பள்ளி.அதுவும் ஆரம்பப்பள்ளிகள் இவ்வாறான நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.மாணவர்களுக்கிடையான சண்டைகள்,ஆசிரியருடனான பிரச்சனை,ஆசிரியரின் பிரச்சனை, மாணவர்களின் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் போற போக்குல அடித்து விளாசிவிடுவார்கள் குழந்தைகள். நூலில் ஒவ்வொரு நிகழ்விற்கும் வரையப்பட்ட ஓவியங்கள் சிறப்பு.வரைந்தவர் ஓவியர் குமார் அவர்கள்.
சில உரையாடல்கள் நம்மை யோசிக்க வைக்கும்.இப்படி...
//
சார்..
பாப்பாவும் நானும்
வெளாடுறப்ப
பாப்பா கீழ விழுந்துருச்சு..
நத்தம் வந்துச்சு..
அச்சச்சோ..
எப்படா..?
இருட்டா இருக்கப்ப..!
ம்ம்.. சரி ஆயிரும்!
சார், எங்க அப்பா
அம்மாவ எத்திப்புட்டாரு..
அம்மா விழுந்துருச்சு..
அழுதுச்சு..!
எதுக்குடா..?
பாப்பாவ எதுக்கு
பாக்கலன்னு..!
ஆமா.. பாக்கணும்ல..
அப்டி என்னா
செஞ்சுக்கிருந்தாங்க..?
சோறு ஆக்குச்சு..!
//
==========
சில நம்மை சிரிக்க வைக்கும்.
//
அஜிஸ் வந்தான்..
கைய நீட்டி நீட்டி சொன்னான்..
சார் உள்ளுட்டேன்..
ம்ம்.. என்னாது..?
உள்ளுட்டேன் சார்..!
என்னடா சொல்ற..?
டவுசர கொஞ்சம் மேல ஏத்தி
புண்ண காட்டி சொன்னான்..
உள்ளுட்டேன் சார்..!
ஓ.. விழுந்திட்டியா..!
ம்ம்..
அச்சச்சோ..
எப்ப விழுந்த..?
நாளைக்கு..!
//
=============
நீங்க ஏதாவது மனக்கஷ்டமா இருக்கும்போது, இந்த நூலை வாசிங்க... இது ஒரு மருந்து..
-
ரமேஷ் ராஜா
#தேனிசுந்தர்

Comments
Post a Comment