மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை எளிதாக்குவது எளிதல்ல : பா.விமலா தேவி, ஆசிரியர்

தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சில பொழுதுகள் வாழ்ந்த நினைவு இந்த திட்டமிடாத வகுப்பறைகள். திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாடத்திட்டம் , கால அட்டவணை , தேர்வு முறை என்பதை தாண்டி கண்டிப்பில்லாமல் ஒரு ஆசிரியர் அரவணைப்போடு குழந்தைகளை ஒரு சுதந்திரமான போக்கில் தன் முனைப்பில் அனுமதித்திருப்பதை ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரை தான் இன்று மாணவர்கள் விரும்புகிறார்கள்.

மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை மாணவர் வசம் எளிதாக்குவது எளிதல்ல. இங்கு ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக பாவிக்காமல் மாணவனாகவே பாவித்து அவர்களோடு பல செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படும் பெண் ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடிந்த செயல்களை, ஆண்பால் ஆசிரியர்களும் செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறார்.

மாநில பயிற்சியாளர் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை வழங்கியிருப்பதில் “துணிச்சலுக்கு பாராட்டு” என்று இந்நூலின் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி பாராட்டி இருப்பதை போல, ஒரு ஆசிரியர் கற்றலை பாடப் புத்தகங்களோடு மட்டுமே கற்பிக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை உடைத்து அவர்கள் போக்கிலே விளையாட்டு மூலமாக மிக எளிதான செயல்பாடுகளின் வழியாக கையாண்டிருப்பதே இந்நூலின் வெற்றி எனலாம்.

குழந்தைகளின் உலகம் இப்படியாகத்தான் இருக்க வேண்டும். மாறாக அவர்களின் உலகத்திற்குள் நாம் செல்லாமல் நமது உலகிற்குள் அவர்களை இழுக்கும் பொழுது தான் இங்கு பெரிய கற்றல் இடைவெளி உருவாகிறது. எந்த ஒரு ஆசிரியர் அவர்களின் உலகைப் புரிந்து அவர்களோடு நட்பு பாராட்டுகிறாரோ அவரே அவர்களின் மனதையும், கற்றல் சூழல்களையும் வெளிக்கொணர்கிறார். அவ்வகையில் ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார் என்றும் , அவர்கள் அடைய வேண்டிய திறன்களை பலவாராக சிந்தித்து எப்படியெல்லாம் கொண்டு செல்லலாம் என்பதை திட்டமிட்டு வென்றிருக்கிறார் என்றும் நான் நம்புகிறேன்.


குழந்தைகளுக்கு அனைத்துமாக ஒரு ஆசிரியர் இருப்பதைக் காட்டிலும் ஒரு சில இடங்களில் விலகி நிற்பதும் , விடுபட்டு நின்று கவனிப்பதும் முக்கியம்.‌ கூடி வரும் வேளைகளில் நாம் பேசாமல் இருந்தாலே அது குழந்தைகளுக்கு செய்யும் பெரிய உதவி தான் என்பதில் மிகப்பெரிய புரிதல் ஒளிந்திருக்கிறது.
ஒரு நல்ல ஆசிரியர் கற்பித்தேயாக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது . கற்றலுக்கு உதவும் சூழ்நிலைகளை உருவாக்குவது தான் முக்கியம் என்ற கூற்று ஓர் அனுபவப் பகிர்வு. ஆசிரியர் என்பவர் “குழந்தைகளோடு உறவாடும் சற்றே பெரிய குழந்தைதான்” என்பதின் மூலமாக ஆசிரியருக்கான இலக்கணத்தையும் வகுத்திருக்கிறார்.

ஆசிரியர் குழந்தைகளின் இயல்புகளை மதித்து பாடப்பொருளையும் செய்முறைகளுக்கும் ஏற்ப தன்னையும் மாற்றிக் கொள்ளும் பொழுது அவர் ஒரு குழந்தை நேய ஆசிரியராக பரிணமிப்பதை உணர முடிகிறது. வருடம் எல்லாம் வகுப்பறையில் பொருத்தமற்ற போட்டிகளை வைத்து பல மாணவர்களையும் நாம் தோற்கடித்துக் கொண்டே இருக்கின்றோம். ஒரு நாள் அவனுக்கான போட்டி நடக்கும் பொழுது அவன் வெற்றிவாகை சூடி கதாநாயகனாக ஜொலிக்கிறான். இதை ஒவ்வொரு ஆசிரியர்களும் அவர்கள் வாழ்வில் கண்டடைந்து விட்டால் அவர்களுக்கான அந்த ஒரு நாளை நாம் அவ்வப்போது தந்து கொண்டே இருக்கலாம்.

மொழித்திறன் வளர்ச்சிக்கு நாள் முழுதும் விளையாடிக் கொண்டிருந்தாலும் ஒரு குறையும் வந்துவிடாது. அவர்கள் வார்த்தைகளை யோசித்து இணைத்து வாக்கியங்களை உருவாக்கி, அதிக வார்த்தைகளை கொண்டு வாக்கியங்களை உருவாக்க இயலும் என்பதோடு பாடத்தில் உள்ள வரிகளை வாசிப்பதாலும் மனப்பாடம் செய்வதால் மட்டுமே மொழித்திறன் வளர்ந்துவிடுமா…? என்று வினா எழுப்புகிறார். நிதர்சன வரிகளான இவை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய வரிகளும் கூட.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆர்வமுள்ள செயல்பாடுகளை தருதல் ஆசிரியருக்கு கூடுதல் சுமைதான். ஆனால் வகுப்பு உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதை செய்தால் தான் வெற்றி நமக்கு கிட்டும். சில நேரங்களில் வீட்டுப்பாடம் தந்து நாம் மறைமுகமாக அவர்களின் பெற்றோர்களிடமும் உதவி கேட்கும் சூழ்நிலை உருவானாலும் , அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த அளவிற்கு ஈடுபாட்டோடு இருக்கின்றாரா என்ற கேள்விகள் எழும்பாமல் இல்லை.

மிக முக்கியமாக, குழந்தைகளிடம் கற்றல் நிகழ்கிறது . ஆனால் நாம் கவனிக்கும்போது நிகழ்வதில்லை. கற்றல் நிகழும் போதும் நாம் கவனிப்பதில்லை என்ற உளவியல் சித்தாந்தத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஓர் ஆசிரியராக கற்றலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பதும்தான்.

ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களின் தைரியத்தை மற்றும் விழிப்புணர்வு வரிகளாக நான் கருதுவது கல்வி முறையில் உள்ள தவறினை சுட்டிக்காட்டும் ஒரு புத்தகத்தையும் எழுதி , அப்புத்தகத்திற்கான அணிந்துரைகளை கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே வாங்கி புத்தகத்தை வெளியிட்டதை தான்.

“திட்டமிடாத வகுப்பறைகள்” என்ற வரிகள் போதும் இங்கு எந்த செயலும் கட்டமைக்கப்படவில்லை என்பதை உணர. மாற்றத்தை முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறியுள்ளது போல ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பறையிலும் இது போன்ற எண்ணற்ற கதைகள் பொதிந்து கிடக்கின்றன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டாலே ஒவ்வொரு அனுபவங்களும் நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தந்தருளும். எனது கதைகள் இதோ தயாராகப் போகிறது… எனில் நீங்கள்…?

புத்தகத்தின் பெயர் : திட்டமிடாத வகுப்பறைகள்

பதிப்பகம் : பாரதி புத்தகலாயம்

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Comments

Popular posts from this blog

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்