உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் : இந்துமதி ஆசிரியர்
கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது. சின்னச்சின்ன கட்டுரைகளில் பெரியபெரிய சிந்தனைகளைத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். 25 கட்டுரைகளும் மிகமிகச் சிறியவை. ஆனால் அவை ஒவ்வொன்றும் நம் ஆசிரியச் சமுதாயத்தைச் செதுக்கும் உளிகள்.
ஆசிரியர்களாகிய நாம் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இடைப்பட்ட மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட மாணவனான ‘சரவணன்’ பற்றிக் கூறுகிறது ‘உனக்குரிய இடம் எங்கே…?’ என்னும் கட்டுரை. ‘இம்மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட தரவில்லையே’ என வருத்தப்படுகிறார். இது முற்றிலும் உண்மையாகவே தோன்றியது.
கணக்கு வாத்தியார் என்றாலே சிரிக்காத முகம்…ஐந்தாம் வகுப்பில் வட்டம் ஒழுங்காக வரையாததால் முதுகில் போட்ட அடி… அன்றைக்குக் கணக்குப் பாடத்திற்குப் பயந்து மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடம் இல்லா பிரிவில் சேர்ந்து படித்தது பற்றி, ‘கணக்கு இனிக்கும்’ என்னும் கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை அப்படியே என் பள்ளி வாழ்வை நினைவூட்டியது. ‘வகுப்பறையில் வெற்றி பெற வேண்டியது ஆசிரியரோ கணக்கு பாடமோ அல்ல;மாணவன். கணக்கும் இனிக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள். பாடம் நடத்தச் செல்லும் போது கோபத்தை வாசலில் நிற்க வைத்துவிட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்கு உள்ளே செல்லுங்கள். நிறைய சிரியுங்கள். உடம்புக்கு நல்லது. உங்க மனசுக்கும் நல்லது’ என அறிவுரை வழங்குகிறார். இப்படி ஒவ்வொரு கணித ஆசிரியரும் இருந்தால் தமிழில் பிடிக்காத வார்த்தையான ‘கணக்கு’ பிடித்த பாடமாக மாறும்.
அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலைகள், ஆசிரியர்கள் தோற்கப் பழக வேண்டும் என்னும் இரு கட்டுரைகளும் ஆசிரியர்களாகிய நாம், ‘மாணவர்களை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு வகுப்பறைக்குச் செல்கின்றோம். ஆனால் வகுப்பறை என்பது கலந்துரையாடும் இடமாக இருக்க வேண்டும். யாரும் யாரையும் வெல்வதற்கு அது போர்க்களம் அல்ல. வென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அன்பால் வெல்வோம். அவ்வாறு நடந்து கொண்டால் நமக்குள் இருக்கும் ‘காட்டுமிராண்டி’ என்னும் ஆசிரியர் மரித்துப் போவான் என்கிறார்.
வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லாத கல்வியை நாம் பயிற்றுவிப்பதை ‘படிக்க வைக்கவா? யதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?’ என்னும் கட்டுரை விவரிக்கிறது.
‘கையக் கட்டு, வாயப் பொத்து’, ‘கேள்வியாக் கேக்குற கேள்வி…?’ ‘எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு?’ என்னும் கட்டுரைகள் மேலதிகாரிகள் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதை விளக்குகிறது.
“மாணவர்களிடையே, வாழ்க்கை சமம் இல்லை, வசதிகள் சமம் இல்லை, வாய்ப்புகள் சமம் இல்லை. போட்டிகள் மட்டும் சமமாக இருக்குமா?” என அரசுப் பள்ளி மாணவர்கள் பிற மாணவர்களுடன் போட்டித்தேர்வுகளில் போட்டிப்போட சமமானவர்கள் அல்ல என்பதை, ‘அநியாயம் என்றனர்’ என்ற தலைப்பில் விவாதித்துள்ளார்.
மேலும், ஓராசிரியர் மட்டுமே தொடக்கக்கல்வி நிலையங்களில் பணிபுரியும் நிலை காணப்படுவதால் அனைத்து நிலை மாணவர்களையும் அவ்வொரு ஆசிரியரே கவனிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே அம்மாணவர்களுக்குத் தகுந்தப் பயிற்சி அளிக்க முடியாத நிலையை அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
இப்புத்தகத்தைப் படித்துவிட்டு வகுப்பறைக்குச் செல்லும் நாம் வேறொருவராக வகுப்பறையில் நுழைவோம் என்பது உறுதி. மேலும் இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் போது, பால்வழியும் முகத்தோடு பாவம்போல்(பரிதாபமாய்) முகத்தை வைத்துக் கொண்டு, ‘உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார்’ எனச் சிறுவன் கூறுவதாகத் தோன்றும் அட்டைப் படத்தைப் பார்க்கும்போதே,(எனக்கும் பசிக்குமுள்ள… என்ற காட்சியை எனக்கு நினைவூட்டியது)இப்புத்தகத்தை உங்களுக்கு வாங்கத் தோன்றும். சந்தேகம் இருந்தால் இப்புத்தகத்தை ஒரு முறை கண்ணால் பாருங்களேன்!
வெளியீடு - வாசல் பதிப்பகம்.
விலை - ரூ.130.
பா. இந்துமதி
ஏ.வி.ஜோ. அரசு மேல்நிலைப்பள்ளி, இட்டமொழி

Comments
Post a Comment