இந்த நூல் என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது : பா.விமலாதேவி, ஆசிரியர்
உண்மையிலேயே இப்புத்தகத்தின் நூலாசிரியர் அவர்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஏனெனில் இத்தனை உண்மைகளை நறுக்குத் தெறித்தார் போல் பட்டென பதிவு செய்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்..
சரி, தப்பாக போன அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன என்று பார்க்கலாம் வாங்க. முதலில் அந்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்று சொல்வது யார் என்று நினைக்கின்றீர்கள். ஒரு சில கட்டுரைகளில் மாணவன் சில கட்டுரைகளில் ஆசிரியர் சில கட்டுரைகளில் பொதுமக்களின் பொது புத்தி என எடுத்துக் கொள்கிறேன் நான். மொத்தத்தில் இந்த தீர்ப்பானது தவறு என்று உயர் அதிகாரிகளையும் , கல்வி நடைமுறைகளையும் அதனை வகுப்பறையில் பரிசோதிக்கும் ஆசிரியர்களையும் சுட்டுகிறது.
கணிதமும் அறிவியலும் கசப்பென வாழ்ந்த ஒரு மாணவன் இரண்டையும் கற்கண்டாய் கையில் எடுத்து ஆசிரியராக உருமாறியபோது அவருள் எழும்பிய வினாக்களின் தொகுப்பு இக்கட்டுரைகள் எனலாம். வாசிக்கும்போது இவையெல்லாம் உண்மை நிகழ்வுகள் என்று தான் எடுத்துக் கொள்ள முடிந்தது.
தன்னைவிட மேல்மட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு இளம் பணியாளருக்கும் மூத்த பணியாளர்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக எப்படி அவர்களுக்கு அடங்கிப் போவது என்ற பாலபாடம்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை மீறினால் மேற்கொண்டு வருவதை அனுபவிக்க தயாராக இருங்கள் என்று நிர்பந்திக்கும் பொழுதே ஆட்டு மந்தைகளில் ஒன்றாக நாமும் தலையாட்டி பணியாற்றி வாழ கற்றுக் கொள்கிறோம்.
வாசித்தவரின் இதயங்களைத் தொட்டு அவர்களின் காதுகளை திறக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இதனை வாசிக்கும் ஆசிரியர்களின் இதயத்தின் காதுகள் நிச்சயமாகத் திறக்கும். ஏனெனில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல் பாசாங்காய் வாழ்வதற்கு கற்றுக் கொண்டவர்களுள் நானும் ஒருத்தி என்பதால்.
புதிய ஆசிரியர், விஞ்ஞானச் சிறகு, வண்ணக்கதிர், விழுது போன்ற பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்ற போதிலும் , அவை அனைத்தும் பேசுவது கேட்பாரற்று அரசுப் பள்ளியை நோக்கிச் சென்றால், நம் எதிர்காலம் சற்றேனும் மாறிவிடாதா என்ற நம்பிக்கையில் அடி எடுத்து வைக்கும் மாணவனின் எதிர்காலமான கல்வி குறித்து தான்.
ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஆசிரியரின் முதல் கட்டுரையில் வரும் சங்கிலி என்ற மாணவனைப் போல் ஏராளமானோர் இருந்தனர் ஒரு காலத்தில். அனைவரும் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்பதால் இன்று அது குறைந்து இருக்கிறது. அதேபோல எந்த மாணவனுக்குள் எந்த திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை கூட அறியாமல் நம் எண்ணமெனும் வண்டியில் எவற்றிற்கெல்லாம் இடம் கொடுக்கின்றோம் என சிந்திக்க சொல்கிறார் ஆசிரியர். மாறாக தற்போதைய கலைத் திருவிழா அதற்கான வாசலைத் திறந்து விட்டிருக்கிறது. கல்விச் செயல்பாடுகளுக்கு மத்தியில் கலைத் திருவிழாவின் செயல்பாடுகள் கூடுதல் சுமையாக இருந்தாலும் அதன் மூலம் வெளிவந்திருக்கும் திறமைகளை நாம் பாராட்டாமல் இருப்பதும் தவறுதான்.
வகுப்பறையில் தன் சக தோழர்களுக்கு ஏற்படும் தண்டனைகளிலிருந்து விடுவிக்க சக மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கொடுக்கும் குரல் நாளைய சமுதாயத்தில் சக மக்களை காக்க எழும் குரலாக மாறும். ஆனால் அதற்கான வாய்ப்பை வகுப்பறை வழங்குகிறதா என்று ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும்.
கேள்வி கேட்க வைப்பதே அறிவியல் என்கிறார். ஆனால் பள்ளிக்கூடங்களோ பதில் சொல்லி மட்டுமே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலை இன்றளவும் பாடத்திட்டங்களை கட்டமைப்பவர்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் சூழலைப் புரிந்து கொள்ள முடியாத பாடத்தை மாணவன் கற்பதால் அவனுள் என்ன மேதமைத்தனம் உண்டாகப் போகிறது என்கிறார்.
ஒரு கட்டுரையில் மருத்துவத் துறையில் நடக்கும் நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் அழைக்கப்பட்ட போது, அவர் அந்த மாணவர்களிடத்தில் நடத்திய கலந்துரையாடல் மிக நிதர்சனமானது. அந்த கலந்துரையாடல் மூலம் அவர் மாணவர்கள் மனதில் வாழ்க்கை சமம் இல்லை , வாய்ப்புகள் சமமில்லை, வசதிகளும் சமமில்லை , போட்டி மட்டும் சமமாக இருக்கும் என்றால் அதை நியாயமா… அநியாயமா…? என்று ஒரு சிந்தனையை விதைத்திருக்கிறார். முதலில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த தனியார் பள்ளிக்கு ஒரு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன காரணத்திற்காக அவர்கள் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்புகள் கிடைத்தும் நீங்கள் தேர்வுக்குத் தகுதியானவர்கள் இல்லை என்பது மட்டும் இல்லாமல் இருக்கட்டும்.
கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ஆசிரியர்களை வாயடைக்கும் வேலை செய்யும் இயக்குனர் முதல் வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் என ஒவ்வொரு படிநிலையையும் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு அசத்தியுள்ளார். தன்னைவிட மேலுள்ள அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்டால் நிலைமை என்னவென்று தெரிந்திருந்தும், இது போன்ற வரிகளை வாசித்த பின்பும் , கேள்வி கேட்பதற்கு எத்தனை ஆசிரியர்களுக்கு மனத்திண்மை இருக்கிறது. வீட்டிற்கு சென்ற பின்பு தொலைபேசியில் அந்த நிகழ்வை பேசி பயனில்லை என்றாலும் அப்பேற்பட்ட சூழலில் தான் ஆசிரியர்களின் நிலையும் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.
அதிகாரம் ஆபத்தானது என்றால் அதற்கு எதிரான நமது மௌனமும் அதைவிட ஆபத்தானது. மிகக் கொடுமையானது என்பது ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்ளும் பொழுது கல்வியில் பெருத்த மாற்றமும் ஏற்படும்.
பள்ளியில் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டுரை சொல்லும் செய்தியானது எனக்கு எனது வகுப்பறையை நினைவுபடுத்தியது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் ஸ்பெஷல் ஹீரோ என்று ஒரு மனப்பாடப்பகுதி உண்டு. அந்த பகுதியை நான் மாணவர்களிடத்திலே தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி கூறும் போதெல்லாம் , நம்மிடையே பயிலும் மாணவர்களுக்கு எத்தனை நபருக்கு தந்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் இதன் முழு விளக்கத்தை சொல்வதில் எனக்கு முழு ஈடுபாடு இல்லை. இருந்தும் அதன் பொருளை உணர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அவர்கள் மீது நானும் வெடிகுண்டுகளை ஒவ்வொரு ஆண்டும் வீசுகிறேன்.
எவ்வளவு பெரிய வெடிச்சிரிப்பு , மரணமூலம் அல்லது போர்க் குரல் என்றாலும் கற்பித்தல் என்று வந்துவிட்டால் நம் காதுகளில் விழாமல் போகிறது. அச்சடித்த புத்தகங்களும் பாடங்களும் பின்னாடி 10 கேள்விகளும் கோடிட்ட இடங்களும் தான் நாம் முக்கியம் தரும் இடமாகவும் இருக்கிறது. வேறு வழி இல்லை. அதற்கு முக்கியம் தராவிட்டால் நம்மிடம் கேள்வி கேட்கும் அதிகாரிகளிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டுமே என்ற சூழலைக் கடக்க தெரியவில்லை.
பொதுவாகவே மாணவர்கள் கற்கும் இடமானது பள்ளிக்கூடங்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கற்றலுக்கு பள்ளி வேலை நாள், விடுமுறை நாள் ,பாடவேளை , இடைவேளை என்று எந்த கதவுமே இருப்பதில்லை . ஆனால் எதை அறிவாக கற்றலாக அங்கீகரிக்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் ஆழமாக நாம் யோசிக்க வேண்டும் என்று நம் அறிவுக்கண்ணைத் திறக்கிறார்.
பெரிதும் என்னை ஈர்த்த கட்டுரை என்றால் அது கற்றல் இழப்புக்கு எதிராக போராடுவோம் என்று இந்து தமிழ் நாளிதழில் வந்த கட்டுரைதான். காரணம் கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி இந்த இரண்டு வார்த்தைகளும் பெரிதாக பேசப்பட்ட காலமானது கொரோனா பெருந்தொற்று காலம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதிகாரம் மற்றும் செல்வாக்கு உடையவர்களின் குழந்தைகளும் இதில் பாதிக்கப்பட்டனர் என்பதுதான் என்ற சிந்தனை அபாரமானது.
ஏனெனில், உண்மை நிலவரம் அதுதான். அரசுப் பள்ளிகளை நம்பி வரும் மாணவர்களின் கற்றல் இழப்புகளை கல்வி அதிகாரிகளும் சரி அதற்கு மேற்பட்ட கல்வி சார்ந்த அமைப்புகளும் இதுவரை ஈடு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. விடுப்பு கால மாற்றுப் பணிக்கு என்று ரிசர்வ் அல்லது உபரி ஆசிரியர்கள் வைத்திருந்தால் மட்டுமே பள்ளி நேரத்தில் மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் செல்வதை ஈடு செய்ய முடியும். மேலும் அவர்களை மற்ற நேரங்களில் கற்றல் வள மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்ற சிந்தனை வரவேற்கத்தக்கது . அரசு தயவுகூர்ந்து அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனோ அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை எல்லாம் கேட்பாரற்று கிடப்பதனால் அவர்கள் பெறக்கூடிய கற்றல் இழப்பானது ஒரு பொருட்டாகவே நினைக்கப்படவில்லை என்பதை தான் இந்த கொரோனா கால பெருந்தொற்று கல்வி இழப்பு நமக்கு சொல்லிச் செல்கிறது.
அதேபோல வெளியே பெரிய சமுதாயமும் பள்ளிக்குள் சிறிய சமூகமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு ஜன்னலைத் தாண்டியும் பள்ளிகள் சுற்றுச்சுவரை தாண்டியும் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிறார். கற்பதற்கும் வாசிப்பதற்கும் சில வித்தியாசங்களை சொல்லி பாட நூல்கள் என்பது தனது முரட்டுத்தனமான தோற்றத்தை மாற்றினால் தான் மாணவர்களின் கைகளில் அது எளிதாக விளங்கும். இல்லையேல் வண்ணமயமான பிற புத்தகங்களைக் காட்டிலும் பாட புத்தகங்கள் எப்பொழுதும் “நான் வேறு” என்று தன் வித்தியாசத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கும் என்கிறார் ஆசிரியர். பாடநூல் கழகமும் அரசும் கொஞ்சம் மாற்றி யோசித்து கொஞ்சம் குட்டியூண்டா பாடநூல்களை மாணவர்கள் கைகளில் தவழ்வதற்கு வாய்ப்புத் தர வேண்டும்.
சமீப காலங்களில் எண்ணும் எழுத்தும் என்று வகுப்பறைக்குள் நடமாடிக் கொண்டிருக்கும் புதிய கல்வி புதுமைகளை கூட்டுப் பொறுப்பாக மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது, மாணவர்கள் வீட்டிலும் சென்று தங்கள் குழந்தைமையை இழப்பதற்கு வழிவகுப்பதோடு குழந்தைகளைப் பலி கேட்கும் நவீன கால எதார்த்தம் என்கிறார். சற்றே அரசு செவிசாய்த்து தேவையான கல்விக் கொள்கையை கொணர வேண்டும் என்போமாக.
மொத்தத்தில் இந்த வாசிப்பு என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. நிரபராதியாகி அவர்களோடு ஒருவராக நான் மாற முயற்சி செய்ய வேண்டும் என்று என் மூளைக்குள் திணித்து சென்றிருக்கிறது. இல்லையென்றால் என் மாணவன் என் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு என்று எளிதாக சொல்லிவிட்டு செல்லலாம்.
பா.விமலா தேவி, ஆசிரியர்
பட்டுக்கோட்டை

Comments
Post a Comment