மழலை..! மழலை..! மழலை தவிர வேறில்லை! : டுஜக் டுஜக் : சத்யா ராமராஜ்

குழந்தைகளை நேசிக்கும் யாராலும் இந்த நூலை நேசிக்காமல் இருக்கவே முடியாது. அவ்வளவும் மழலை! மழலை! மழலை மட்டுமே! மழலை தவிர வேறு இல்லை! எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று சொல்லவே முடியாது...!

என் குழந்தைகளைக் கொஞ்சும் போது, "தின்னத் திகட்டாத கனி குழந்தை" என்று என் அம்மாச்சி சொல்லுவார்கள். அது போல இந்த மழலை மொழியை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் அலுப்புத் தட்டவில்லை . என்ன ஒரு அழகு! என்ன ஒரு கற்பனை! என்ன ஒரு பெரிய மனுசத் தனம்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம் இல்லம் என்பார்கள். இந்த நூலில் அதன் தரிசனம் ஒவ்வொரு பக்கத்திலும் தவறாமல் இடம் பெறுகிறது .

உண்மையிலேயே சுந்தர் சார் இயக்க வேகம் கொண்ட, சமூக அக்கறை கொண்ட, சிந்தனைத் தெளிவு கொண்ட, செயல்திறன்மிக்க ஒரு நபராக மட்டுமே இதுநாள் வரை எனக்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் அன்பான தந்தையாக என்னை ஒவ்வொரு பக்கத்திலும், ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கித் திளைக்கச் செய்துவிட்டார்.. என்னென்ன நான் சொன்ன போதும் வார்த்தைகளால் மட்டுமே இந்த நூலின் அழகை எடுத்துரைத்து, உணரச் செய்து, நீங்களும் வாசியுங்கள் என்று பரிந்துரைக்க நினைத்தால் அது அறியாமை நிரம்பிய எண்ணம் என்றே சொல்வேன்.

ஏனென்றால் குழந்தைகளின் உலகத்தில் நாம் நுழைய வேண்டுமானால் நாமும் ஒரு குழந்தையாகவே மாறினால் மட்டுமே அது சாத்தியம். என் பள்ளிப் பணியிலும் சரி, பயணங்களிலும் சரி, என் தம்பியின் குழந்தைகள், அக்காவின் பேரக் குழந்தைகள் என உறவு வட்டாரங்களிலும் சரி குழந்தைகள் அதை உணரச் செய்திருக்கிறார்கள்... இந்த நூலும் ஒவ்வொரு பக்கமும் அதையே உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் பாஷை என்பது தேவ பாஷை என்பார்கள்.. அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. புரிவதில்லை. கிடைத்திருப்போரும், புரிந்து கொள்வோரும் பேறுபெற்றோர் என்றே கொள்ளலாம் .




முதல் குழந்தை பிறக்கும் போது பெற்றோரின் முழு கவனமும் அதனிடம் மட்டுமே இருக்கும். இரண்டாம் குழந்தை பிறந்த பின்பு கவனம் மாறிவிடும். இதனை உளவியல் சிக்கலின்றி எதிர்கொள்ளும் முதல் குழந்தைகள் சிறுபான்மையினர் மட்டுமே. பெரும்பாலான முதல் குழந்தைகள் கவனயீர்ப்புக்காகவே புதிதாய்ப் பிறந்த சிசுவைத் தொடுவதும், வருடுவதும், கொஞ்சுவதும், சமயங்களில் அடித்து விடுவதும், கிள்ளுவதுமாக முரட்டுத்தனமாகவும் கூட நடந்து கொள்வார்கள்.. அதே நேரத்தில், இரண்டாவது பிறந்த குழந்தை பெரிய மனுசத்தனத்தோடு மூத்த குழந்தையை, தன்னை விடச் சிறிய குழந்தை போலப் பாவித்துக் கொஞ்சுவதும், பாதுகாப்பதாக பாவனை காட்டுவதும்,, பெற்றோரிடம் அனுசரணை வேண்டி அண்ணனுக்காக / அக்காவுக்காகப் பரிந்து பேசுவதும் நடப்பதுண்டு. இந்த நூலிலும் அது விதிவிலக்கு இல்லாமல் நடந்து இருக்கிறது.

அண்ணனுக்காக தன் செல்ல அம்மாவிடம் பாப்பா பரிந்து பேசும் இடம் அழகான கவிதை என்றே சொல்லலாம்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதைச் சாப்பிட்டால் வராது என்பது மருத்துவரின் ஆலோசனைகள் ஒருவாறாக இருந்தால் பாப்பாவின் ஆலோசனைகள் வேறு விதமாக அல்லவா இருக்கிறது! சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அதே போன்று குதிரை சவாரி பற்றிய விசாரணை மீண்டும் வாசிக்க வாசிக்க குழந்தைகளின் உலகில் சஞ்சரிப்பது தான் எவ்வளவு பெரிய கொடுப்பினை!தெரிந்தோ தெரியாமலோ பெரியவர்கள் ஆகி விட்டோம் என்ற அறியாமையில் நாம் எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறோம்!

குழந்தைகளின் தாக்குதல் தந்தைக்கு தூங்கும் போது தான் கிடைக்கிறது என்ற குழந்தைகளின் ரகசியம் ரசனைக்கும் அப்பாற்பட்டது.!

நடந்து வரும்போதே நிறைய நட்சத்திரங்களைக் கூட்டி வந்ததாக பரவசப்படும் குழந்தைமை பள்ளி சென்றதும் தொலைந்து போவதை எண்ணும் போதே மனம் வலிக்கிறது.

அம்மாவின் அருகில் படுக்க சண்டை போடும் பால்யம் எல்லா வீட்டிலும் இன்றுவரை எல்லாருக்கும் வாய்ப்பது உண்டு.

குழந்தைகளின் உள்ளத்தில் தமிழ்நாடாவது? முதலமைச்சராவது? என்னே ஒரு பற்றற்ற நிலை!

சில நேரங்களில் பள்ளிகளிலேயே மாணவர்கள் நாம் சொல்வதற்குப் பணிந்து செயல்படும்போது அவர்களின் குழந்தைமையை பள்ளிய நடைமுறை எப்படி எல்லாம் சிதைக்கிறது என்று நினைத்து வருந்தி இருக்கிறேன்.

"மறுத்தும் பழகு மகளே"- என்ற வார்த்தைகள் எவ்வளவு உன்னதமானவை.. தந்தையின் வீட்டில் ராஜகுமாரியாக வலம் வரும் அத்தனைப் பெண்களும் கணவனின் வீட்டில் கடைநிலை ஊழியர் ஆகும் அவலம் எந்த நூற்றாண்டில் ஒழியும்? உண்மையில் எனக்குக் கண்ணீர் வந்து விட்டது.

மலைப்பாம்பு வானத்தில் இருந்து வந்ததாக பாப்பா சொன்னதை யாராலும் நம்பாமல் இருக்கவே முடியாது...! இந்தக் கற்பனைகள் பள்ளி சென்ற பிறகு.. "அவ பொய் சொல்றா" என்ற ஒரே வார்த்தையில் அது குற்றச்சாட்டாக மாறி காணாமல் போய்விடும்... என்ன ஒரு அவலம்!

இரவில் நெடுநேரம் கடந்தும் விளையாடும் குழந்தையை அடிக்கும் போது தோன்றாதது, அவன் "வலிக்குதுப்பா" என்று சொல்லும் போது கூடவா உங்களுக்குத் தோன்றவில்லை சார்..!? ஆனால், "வெட்கமில்லாமல் சொன்னேன்" என்று சொல்லும் போதே அதை உணர்ந்திருப்பீர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஓடி ஆடி விளையாடும் போது கரம் பட்டு, காயமாகி, தந்தையின் மடியில், அழுது கொண்டே, கைகளால் எட்டும் வரை அணைத்துக் கொண்டு உறங்கும் பெண் குழந்தை பூலோக தேவதை அல்லவா? அந்த அணைப்பு தந்தைக்குக் கிடைத்த ஆசீர்வாதம் அல்லவா! அப்படி எல்லாம் கொண்டாடப்படும் தேவதைக் குழந்தைகள், பெண்கள் ஆனபிறகு சகல விதத்திலும் சபிக்கப் படுவது யார் செய்த பாவம்?

அழகான அம்மாவாகவும் மீசைக்கார அப்பாவாகவும் பாப்பாவின் கண்களில் கடைசி வரை தென்படும் பாக்கியம் உங்கள் இருவருக்கும் உண்டு..ஒரு மேற்கோள் உண்டு, "ஆடை வடிவமைப்பு செய்யும் கலைஞர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆடை வடிவமைக்கும் போது மட்டும் தம் பணியை சற்றே மறந்து தற்காலிகக் கவிஞர்கள் ஆகி விடுகிறார்கள்..." என்று... அதே எண்ணம்தான் இந்த நூலைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது. நாமறிந்த சுந்தர் சார் ஒரு தந்தையாக இருக்கும் போது கவனித்த குழந்தைகளின் உலகம் எவ்வளவு ரம்மியமானது!

சுந்தர் சார்..! இதுபோன்ற நூல்கள் மென் மேலும் உங்கள் கைவண்ணத்தில் வரவேண்டும் என்ற பேரவாவுடன் மனமார வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
----------------------------
நூலாசிரியர் : தேனி சுந்தர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.100/-
----------------------------
சத்யா ராமராஜ்
தலைமை ஆசிரியை
தேவாரம், தேனி மாவட்டம்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!