குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம் டுஜக் டுஜக் : ஜி.பாண்டி
நண்பர் சுந்தர் ஒரு அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலாளர். அவர் எழுதிய டுஜக் டுஜக் என்ற புத்தகம் வாசித்தேன்.. கல்வியாளர் பேரா. மாடசாமி மற்றும் விஞ்ஞானி ராமானுஜம் ஆகியோரின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.. மிக அற்புதமான நடையுடன் ஆங்காங்கே ஶ்ரீரசாவின் கோட்டோவியங்களோடு குழந்தைமையை பிரதிபலிக்கும் சொல்லாடல்களோடு தந்திருப்பது மிகச்சிறப்பு...
எனக்கும் குறுஞ்செய்தியாக நிகழ்வுகளை அவ்வப்போது சுந்தர் அனுப்புவார். ஆம்லெட் போட முட்டைகள் வாங்கி உடைத்து, அதைத் துடைத்து, முழிப்பது பற்றி அவர் அனுப்பிய செய்தி பளிச்சென்று என் நினைவுக்கு வருகிறது...
தமிழ் இலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழ் என்று ஒருவகை உண்டு. குறிப்பாக குழந்தை கண்ணனையும் முருகனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சேட்டைகளோடு உள்ள குழந்தமைகள் பற்றி கவிதையாக எழுதியுள்ளனர். அதுபோல தேனி சுந்தர் தனது துணைவியாரின் ஒப்புதலோடு எழுதிய "ஒரு அப்பாவின் டைரி" பத்து மாத இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் நம் கைகளில் நூலாக பூத்திருக்கிறது.
மூத்த குழந்தை டார்வின்.. இப்பொழுதுதான் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது.. இளையவர் புகழ்மதி. மழலைச் சொல் கற்றவர்.!
அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். பிள்ளைகள் அநேகம் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா,அத்தை, மாமா என பெரிய அளவில் உறவுகள் சூழ்ந்த உலகில் பயின்றதை பகிரும் நிகழ்வுகள் கவிதை ஆகி இருக்கின்றன...
டார்வின் ஆண் பிள்ளைக்கே உரித்தான சின்சான், ஹிமாவாரி.. ஸ்பைடர் மேன் போன்றவர்களோடு பயணிக்கிறார். கிளி, நாய், பூனை, குதிரை வண்டி, சைக்கிள்.. நண்பர்களோடு சில நேரம் அந்தி சாயும் வரை விளையாடி அடியும் வாங்குகிறார்...
குழந்தை புகழ்மதி மழலைச்சொல் மாறாத பருவத்தில் பொம்மைகளுக்கு ஜட்டி போடலப்பா.. நானா குளிக்கிறேன்... நிலாவோடு நட்சத்திரங்களையும் கூட்டிவருவது... கரப்பான் பூச்சி...யூடியூப் பார்ப்பது... சீரியலில் வரும் பெயர் சொல்வது.. ஒப்பாரி வைப்பது... டெடி பியரோடு... அம்மாவோடு கொஞ்சுவது.. பாருப்பா.. என கற்றலை தெரிவிப்பது, கதை சொல்வது என விரியும் அவர்கள் உலகை கைதேர்ந்த கலைஞனாக காட்சி படுத்துகிறார் சுந்தர்...
இடது கைக்கு ஒரு டுஜக்.. வலது கைக்கு ஒரு டுஜக்.. என கவுன் போடும் திறமை பாராட்டியே ஆக வேண்டும். கற்றலின் அடைவுகளை இதைவிட அழகாக கூற முடியுமா என்பது சந்தேகம் தான்.!
ம்க்கும் - என்ற ஒற்றை வார்த்தையில் சுந்தர் தன் இயக்கத்தை வீட்டிலும் கட்டமைத்துள்ளதை அறிய முடிகிறது.. விவேக் செத்து ரொம்ப நாளாச்சு என்ற பதிவில் வாரிசின் வீச்சையும் காட்டியுள்ளார்.
ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் வரும் பேய் பூதம்.. சைத்தான்.. முனி.. நல்ல வார்த்தை.. கெட்டவார்த்தை.. கடன்.. கஷ்டம்.. ஏழை.. பணக்காரன்.. அந்த ஜாதி இந்த ஜாதி.. சாவு.. சாராயம்.. சினிமா.. குத்து வெட்டு.. ஹீரோயிசம்.. நோய் போன்றவற்றை உள்ளடக்கிய பதிவுகளே இல்லை. தவிர்த்திருக்க கூடும் என்று நினைக்கிறேன்.. இந்நிகழ்ச்சிகளையும் சுவாரசியமான விசயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் எனும் திருவள்ளுவர் கூற்றுக்கு இணங்க குழந்தைமையைக் கொண்டாடும் இப்புத்தகத்தை படைத்த சுந்தர் அவர்களும் அவரது குடும்பமும் சுற்றமும் நட்பும் இறைவன் திருவருளால் எல்லா வளங்களும் நலமும் பெற்று நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்...
அன்புடன்..
ஜி.பாண்டி , ஓவிய ஆசிரியர்
Comments
Post a Comment