திட்டமிடாத வகுப்பறைகள் வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்


ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் எப்படி திட்டமிடாமல் செல்ல முடியும் ? பிளான் ஏ /பி/ சி என குறைந்தது மூன்றாவது இருந்தால் தான் ஒரு நாளை திறம்பட கொண்டு செல்ல முடியும். திட்டமிடாத வகுப்பறையை எப்படி திட்டமிடுவது? என்ற கேள்வியோடு வாசித்த புத்தகம்.

தேனி சுந்தர் எனும் இடைநிலை ஆசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். தேனினும்  இனிய வகுப்பறை செயல்பாடுகளால் (அனுபவங்களால்) நிரம்பி உள்ளது.

திட்டமிடாத வகுப்பறையில் மாணவர்கள் விளையாடுகிறார்கள், விளையாட்டில் ஆசிரியரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் கற்றும் கொடுக்கிறார்கள்.

இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஒட்டிக் கொள்ளும் புன்னகை... புத்தகத்தை முடிக்கும் வரை மறையாது அதிகரிக்கும்...!
 
புத்தகத்தில் வரும் மாணவர்கள் அனைவரும் கவிதைகளே ! களிமண் கொடுத்து உருவம் செய்து வரச் சொன்னால் அணுகுண்டு செய்து வந்த பால்வாடி மிதுன்...அந்த அணுகுண்டில் இரு இலைகளுடன் கூடிய ஒரு காம்பை செறுகி, அதை  குட்டி செடியாக்கிய மயூரி ...

கலைத் திருவிழாவில் பல குரல் போட்டியில் எல்லோரும் நாய் பூனை ஆடு என குரல் எழுப்பும்போது, சதீஷ் என்றாலே சேட்டை என்று பெயர் பெற்ற மாணவன் நாயிலேயே குட்டி நாய், தாய் நாய்,  அடிபட்ட நாய், கோபக்கார நாய் என விதவிதமாக குரல் எழுப்பி ஆச்சரியப் படுத்தியதோடு நில்லாமல் மாறுவேட போட்டியில் பெண் வேடமிட்டு வெட்கபட்டு பரிசுகளை அள்ளிச் சென்ற நிகழ்வை ரசிக்காமல் இருக்க முடியுமா...

ஒரு வகுப்பறை, ஒரு மேஜை,கதவு உள்ள இடத்தில் ஒளிஞ்சு விளையாட்டு.. இரண்டே பேர் ... ஒரு நிமிடத்தில் முடியும்...ஆனால் பால்வாடி யோகாவும்....இரண்டாம் வகுப்பு நிதன்யாவும் அந்த விளையாட்டை நீண்ட நேரம் விளையாடியதும் ஆசிரியருக்கும் கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததும் சிறப்பு...

ரயில் கோச் விளையாட்டு,  வார்த்தை விளையாட்டுகள் என பல விளையாட்டுகள் புத்தகம் முழுவதும் நிரம்பி நாமும் சேர்ந்து விளையாடிய/ வேடிக்கை பார்த்த அனுபவம் தரும்.

நிகழ் காலத்தோடு பொருந்தி போகும் ... குஜராத்தி மொழியில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட திவ சப்னா (தமிழில் பகல் கனவு) என்ற புத்தகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்..

எழு...நட ...ஓடு.... பற.. என்கிறோம் குழந்தைகளை ஆனால் நம் முயற்சியில் நாம் எழுந்து நிற்பதிலேயே... பறந்து விட்டதற்கான பரவசத்தை அடைந்து விடுகிறோம். குழந்தைகளின் கற்றலை எப்போது மகிழ்ச்சியானதாக மாற்றப் போகிறோம்?என்ற வினாவோடு புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

இடைநிலை ஆசிரியராய் பணியாற்றிய எனக்கு,  பழைய ஆல்பம், ஆட்டோகிராப் டைரி எடுத்து வாசித்த அனுபவத்தை தந்தது.. 

Thanks to Theni Sundar... It is a really  nice,feel good book...
_
ஐ.சுமதி
முதுகலை வணிகவியல் ஆசிரியர்.. 
அ.மே.நி.ப., செட்டிகுளம்.


 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!