திட்டமிடாத வகுப்பறைகள் நூல் விவாதக் கூட்டம் : பெரம்பலூர் மேக்நாட் அறிவியல் மன்றம்
அனைவருக்கும் வணக்கம். பெரம்பலூர், மேக்நாட் அறிவியல் மன்றத்தின் 4வது நூல் விவாதம் 16.08.2025 அன்று நடைபெற்றது. தேனி சுந்தர் அவர்கள் எழுதிய 'திட்டமிடாத வகுப்பறைகள்' என்ற நூல் கூட்டு வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நூல் உள்ளடக்கமும் விவாதமும் - கருத்துத் தொகுப்பு:
இந்நூலின் ஆசிரியர், பள்ளி ஆசிரியராக தம் சொந்த வகுப்பறை அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் உள்ளடக்கமானது முன் தொடக்க கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான வகுப்பறை சூழலில் திட்டமிடாத செயல்பாட்டு அனுபவமே ஆனாலும் கூட அவ்வனுபவத்தின் வழியாக நாம் பெறும் கோட்பாட்டுத்தன்மையை விரிவாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்த முடியும்.
குழந்தைமை நிறைந்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனிதத் தன்மையுடனும் அனுசரணையாகவும் நெருங்கிய நட்பினராகவும் நடந்துகொள்ள வேண்டும். வழக்கமான திட்டமிட்ட வகுப்பறை நோக்கில் அல்லாது திட்டமிடாத செயல்பாடுகளிலும் மாணவர்களின் அறிவை உள் தூண்டுதலுடன் மிகச் சிறந்த வெளிப்பாட்டை கொண்டு வர முடியும். அதற்கு குழந்தைகளுடன் குழந்தைகளாக, அவர்களில் ஒருவராக மாறுவதே தீர்வாகும்.
மாணவர்கள் தாமாக கெட்ட வார்த்தைகளையோ பொய்களையோ கூறுவதில்லை. தான் கேட்டவற்றிலிருந்தும் பார்த்ததிலிருந்துமே கூறுகின்றனர். அந்த அளவில் அவர்களை கடிந்து கொள்வது தேவையற்றது. மேலும் தாங்களே உள்நோக்கமாக சரி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். திட்டமிட்ட வகுப்பறை கற்றல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாத மாணவர்களும் மிக நேர்மையாகவும் கலைத்திறனுடனும் இருப்பது, திட்டமிட்ட வகுப்பறையால் பெற்றுத் தர முடியாதது.
கற்றல் குறைபாடு உடைய மாணவர்களில் ஆசிரியர் மட்டுமே சரி செய்ய முடியாது. பல்வேறு மாற்று வழிமுறைகளையும் கையாள வேண்டும். ஒப்பார் குழு மற்றும் மூத்தோர் குழுக்களின் வழியாக கற்க வைப்பது, பெற்றோரின் வழியாக கற்க வைப்பது என்று திட்டமிடாத செயல்முறைகள் மூலமுமே அவர்களை அவரது வகுப்பறை செயல்பாடுகளில் கலந்து கொள்ள செய்ய முடியும். பதின்ம வயதில் இருக்கும் மாணவர்களை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களை களைய, தேனி சுந்தர் அவர்கள் இணையவழி கருத்ரங்கில் கூறியது போல ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் உளவியல் ரீதியாக மாணவர்களை கையாள்வதற்கு தனிப்பட்ட பயிற்சி அவசியமாகிறது.
கலைத்திருவிழாக்களின் போது வகுப்பறை செயல்பாட்டில் உற்சாகம் காட்டாத மாணவர்கள் கூட தன்னெழுச்சியாக பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர் ஆர்வத்துடனும் பங்கேற்கின்றனர். தனியார் பள்ளிகளை போல மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஒதுக்குவதும் நெருக்கடி கொடுத்து வேறு வெளிப்பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வெளித்தள்ளுவதும் இல்லாத ஒன்றாகும். இதை நீட்டித்து ஆசிரியர், மாணவர் மைய அணுகுமுறையுடன் மாணவனை நெருங்கும் போது நாம் அடைய வேண்டிய கற்றல் விளைவுகளை அடைய முடியும். இதில் மேலதிகாரிகளின் குறிக்கீடுகள் கூட வரலாம். இதைத் தாண்டி மாணவரிடம் கிடைக்கும் விளைவுகளை முதன்மையானது. கற்றல் செயல்பாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக பல்லூடகங்களைப் பயன்படுத்துவதும் ஒப்பார் குழுக்கள் வழியாக கற்பிப்பதும் திட்டமிடாத வகுப்பறை செயல்கள் வழியாக முயற்சிப்பதுமே மிகுந்த தீர்வினைத் தரும்.
மாணவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தகுந்த வழிகளை ஏற்படுத்தித் தருவதும் அதற்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதும் அவர்களின் கட்டுபாடற்ற செயல்பாடுகளைத் தடுக்க கூடியதாக அமையும். அதே நேரத்தில் அவர்களின் கவனச்சிதறல்களை மடைமாற்றி தனித்திறன்களை வளர்க்கவும் உதவும். இதுபோல கல்வி சார்ந்த நூல்களையும் கல்வி சார்ந்த பிற தளங்களையும் கற்றுக்கொண்டு தொடர் விவாதத்தின் வழியாக அதனை செழுமை பெறச் செய்வதும் மீண்டும் அதனை நடைமுறைக்கு கொண்டு போவதும் ஆசிரியர் - மாணவர் புழங்கும் வகுப்பறைச் சூழலையும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் முன்னோக்கி நகர்த்திக் கொண்டு செல்ல முடியும் என்பதை 'திட்டமிடாத வகுப்பறை' நூல் மற்றும் விவாதத்தின் வழி தொகுப்பாக பெற முடிகிறது.
-
முகிலன்
மேக்நாட் அறிவியல் மன்றம், பெரம்பலூர்

Comments
Post a Comment