தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்


புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம் 


 




















கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன.


2016 - மகாராஜாவின் புதிய ஆடை

2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி

2022 - சீமையில் இல்லாத புத்தகம்

2023 - எதிர்பாராத பரிசு

2023 - ஓங்கூட்டு டூணா

2024 - மாணவர் மனசு

2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன

2025 - திட்டமிடாத வகுப்பறைகள்

2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்

2025 - நட்சத்திரக் குழந்தை


மேற்கண்ட அவரது படைப்புக்களுள் 'மாணவர் மனசு' கட்டுரைத் தொகுப்பில் சிறுவர்களுக்கான உளவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிரிப்பு போலீசு:  மாநிலக்கல்வி, மத்தியக் கல்வி, உலகக்கல்வி என வேறுபட்ட பாடத்திட்டங்கள் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், வசதிகளோடு இயங்குகிற தனியார் பள்ளிகள் எதுவாக இருந்தாலும் மாணவர்களிடையே விசித்திரமான பழக்கம் இருந்து வருகிறது. கழிவறைக் குழாய்களை உடைப்பது, சுவர்களில் கிறுக்குவது, பிடிக்காத ஆசிரியர்கள், மாணவர்கள். மாணவியர் பெயரை இணைத்து படம் வரைவது, எழுதுவது இன்றளவும் தொடர்கிறது.

சுருளிப்பட்டி: நூலின் ஆசிரியர் பணியாற்றிய தேனி மாவட்டம், சுருளிப்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய கழிவறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, நுழையுமிடத்தில் மலம் கழிக்கப்பட்டு, செங்கல்கள் நொறுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு விசாரணை தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள குறும்பு மாணவர்கள், தொடக்கப்பள்ளி முடித்து வெளியேறிய மாணவர்கள் என – 15 பேர் கொண்ட பட்டியல் தயாரானது. பட்டியலைத் தயாரிக்கவும் சந்தேகப்படும்படியானவர்களை உறுதிப்படுத்துவதிலும் தற்போது படிக்கிற அரிஷ், நரேன், குமார் மூவரும் முக்கியக் காரணமாயிருந்தனர். இவர்கள் கூறும் தகவல்கள் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து விடலாம் என்னும் நம்பிக்கையைத் தந்தது.

நூலாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் 15 – மாணவர்களின் வீடுகளுக்கும் சென்று காவல் நிலையத்தில் புகாரளித்துவிடுவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்டு உடைந்த பொருள்களைச் சரிசெய்து தரவேண்டுமெனக் கடுமையாகக் கூறித் திரும்பினர்.

தொடக்கப்பள்ளி வகுப்பினை முடித்த மாணவர்கள் தவறே செய்யாமல் கெட்ட பெயர் ஏற்படுவதைப் பொறுக்க முடியாமல் அவர்கள் தனியே விசாரணையை வித்தியாசமாய் தொடங்கினர். இறுதியில் குற்றவாளிகளைக் கண்டறிந்து குற்றத்தையும் ஒப்புக்கொள்ளச் செய்தனர்.

கழிவறைச் சன்னல்களை உடைத்தது அரிஷ், நுழைவாசலில் மலம் கழித்து கற்களை உடைத்துப்போட்டது நரேன், இச்செயல் நடக்கும்போது ஆள் பார்த்துக்கொண்டவர் குமார்.

வகுப்பு ஆசிரியர் மாணவர்கள் அரிஷ், நரேன், குமார் மூவரும் கழிவறைச் சம்பவத்திற்கு முன்பு வகுப்பில் இவர்கள் செய்த தவறுக்காக கண்டித்தார். இதற்கு பழி வாங்குவதற்காக மூவரும் செய்த வேலைதான் கழிவறைச் சேதம்.

ஆசிரியர் கட்டுரையில் சம்பவத்தை மட்டும் சொல்லி நிறைவு செய்திருப்பார். சிறார்களுக்குள் தொடக்க வகுப்புக்களில் ஆசிரியர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதன் தொடர்ச்சியாக சிறார்களின் நடவடிக்கைகள் மாறுவதையும், தங்கள் மீது கவனம் பெறாமல் இருப்பதற்காக கவனத்தை திசை திருப்புவதையும் நுண்மையாய் ஆய்ந்து உளவியல் தன்மையோடு பதிவு செய்துள்ளார்.

சாரு பயந்துட்டாரு: ஐந்து வயதுவரை வீட்டில் எந்தப் பிரச்சனையுமில்லாமல் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என உறவினர்கள், நண்பர்களோடு விளையாட்டு, தாலாட்டு, தொலைக்காட்சி, பசித்தவுடன் உணவு. விரும்பியதை வாங்கித்தர ஆட்கள் என மகிழ்ச்சியாய் இருந்த குழந்தைகளைத் திடீரென நான்கு சுவர்களுக்குள் வகுப்பில் அடைப்பதும், பாடம் நடத்துவதும், புதிய முகங்களோடு நட்பு வளர்ப்பதும் சிறார்களுக்கு பல்வேறு உளப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், பலர் அழுது தீர்ப்பர். பள்ளிக்கு வரமாட்டேனென்று அடம் பிடிப்பர். சிலருக்கு காய்ச்சல் வரக்கூடும், தொடர்ச்சியாய் அம்மாவிற்கும் உளப்பிரச்சனையும், காய்ச்சலும் வரக்கூடும்.

உளவியல் தேர்வு: மாணவச் சிறார்களைக் கையாளும் விதம் குறித்து ஆசிரியர் பயிற்சியிலேயே உளவியல் சார்ந்த தனித்தாள் இருந்தாலும் தேர்வு நோக்கத்திற்காக மட்டும் படித்து, தேர்ச்சி பெற்று ஆசிரியரானவர்கள் வகுப்புச் சூழலில் உளவியலைப் பயன்படுத்துவதில்லை. சிலரின் தவறான அணுகுமுறையில் சிறார்கள் பள்ளிப்படிப்பை முற்றிலுமாக துண்டித்துவிடுகின்றனர்.

நூலாசிரியர் தனது வகுப்பறையில் கண்ட உண்மை நிகழ்வைப் பதிவுசெய்கிறார். வழக்கமாக வகுப்பிற்குள் நுழைகிறார். மாணவர்களைக் காணவில்லை. திடீரென கதவிற்குப் பின்னால் ஒளிந்திருந்த மாணவர்கள் மொத்தமாகச் சென்று 'பே' எனப் பயமுறுத்துகின்றனர். ஆசிரியர் விவரத்தைத் தெரிந்திருந்தாலும் நடிப்பிற்காக "ஐயோ… பேயி" என்கிறார். மாணவர்கள் "சாரு பயந்துட்டாரு… பயந்துட்டாரு" என வெகு நேரமாய் கை தட்டி சிரிக்கின்றனர். ஆசிரியரும் சிரித்துவிட்டு மெதுவாய் பாடத்திற்குள் நுழைகிறார்.

ஆசிரியர்கள் முகத்தில் முள்ளைக் கட்டிக்கொண்டு எப்போதும் கடுமையாக நடந்துகொள்வது, வகுப்பினை அமைதியாக தனது முழுக்கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத் தண்டனைகள் கொடுக்கும்போது சிறார்கள் ஆசிரியர்களை விட்டு வெகு தூரம் சென்றுவிடுவர். ஆசிரியரைக் கண்டாலே அச்சப்படுவர்.

மாணவர்களின் மனநிலை, சூழல் அறிந்து செயல்பட வேண்டுமென்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.

டும்டும்டும்…!:  ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை மாணவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதுண்டு. இதனை சில ஆசிரியர்கள் ஏற்கமாட்டார்கள். பிடிவாதமாய் தான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்ல வேண்டுமென்பர். நூலாசிரியர் தனது கற்பித்தல் கையேட்டில் கதையாக இருந்த நிகழ்வைப் பாடலாக, செயலாக மாற்றினார். தக்காளிப்பழத்தை எடுத்துக்கொண்ட மாணவன் மற்றோருவரிடம் கொடுக்க அவர் பெற்றுக்கொண்டு எலுமிச்சை தந்தார். எலுமிச்சையை பிறரிடம் கொடுக்க தொப்பி கொடுத்தார்.

"தக்காளி போயி… போயி…

எலுமிச்சை வந்தது

எலுமிச்சை போயி… போயி…

தொப்பி வந்தது

………………………………

………………………………."

இனிமையான பாடலாக மாணவர்கள் வேறொரு ராகத்தில் பாட ஆசிரியர் வியந்தார். ஏற்றுக் கொண்டார். உணவு வேளையில் மாணவர்கள் வட்டமாய் அமர்ந்து கும்மிப்பாடலாக மாற்றினர். பள்ளி, தெரு, ஊர் முழுவதும் பாட்டு பரவலானது…

பள்ளியை முடித்து உயர் வகுப்பு சென்ற மாணவர்கள் "ஏன் சார் எங்களுக்கெல்லாம் இந்த பாட்டு சொல்லித்தரல" என்று ஆசிரியரை மொய்த்துக் கொண்டனர்.

நம்பிக்கையோடு மாணவர்களை நெருங்கும்போது பன்மடங்கு நம்பிக்கையாளர்களாக மாணவர்கள் ஆசிரியர்களை நோக்கித் திரும்புவதை கட்டுரை சுட்டுகிறது.

முடிவுரை: தேனி சுந்தரின் எல்லாப் படைப்புக்களிலும் சிறார் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 'மாணவர் மனசு' தொகுப்பில் இடம் பெற்றுள்ள 16 – கட்டுரைகளும் வகுப்பறைகளில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உள்ளது. இவரது எழுத்து நடை வட்டார மொழியிலான சிறுகதை வடிவில் இருப்பது சிறப்பு. வாசிப்பதற்கு எளிமையாகவும் விரைந்து படிப்பதற்கு ஏதுவாகவும் உள்ளது.


மூலநூல்: தேனி சுந்தர் - 'மாணவர் மனசு' – பாரதி புத்தகாலயம் - சென்னை.

முனைவர் மு.செந்தில் குமார்
உதவிப்பேராசிரியர்
செந்தமிழ்க்கல்லூரி,  மதுரை - 01

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!