டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - வாசிப்பு அனுபவம் : இளையவன் சிவா

மழலைச் சிறகில் மனம் பெறும் அனுபவங்கள்..

எல்லோருக்கும் குழந்தைச் செல்வங்கள் வரமெனக் கிடைத்து வாழ்வாங்கு வாழ்கின்ற வாழ்வை இல்லறம் ஏற்படுத்தித் தருகிறது. ஆனால் எல்லோருமே குழந்தைகளின் இயல்பை, குழந்தைத் தன்மையை விரும்பி ரசிக்கின்ற அதே நேரம் அதை ஆவணமாக பதிவாக நினைவுபடுத்தி வைப்பதில்லை. அப்படி ஒரு அப்பாவின் டைரியில் தனது பிள்ளைகளின் மழலைத்தனமான வினாக்களையும் அவர்களின் குறும்புகளையும் பதிவு செய்து பொதுவெளியில் உலவ விட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியின் பல அம்சங்களை குறித்து பொது அரங்குகளில் பல முக்கியமான விமர்சனங்களையும் விவாதங்களையும் நிகழ்த்தி வருபவர். கற்றல் கற்பித்தல் தொடர்பான அனுபவங்களை நூலாக எழுதியிருப்பவர் தேனி சுந்தர்.

சிறு குழந்தைகள் அப்பாவுடன் நடத்தும் உரையாடல் வழியே அவர்களுக்கு உரிய மழலைத்தனமும் எதையும் கேள்வி கேட்கும் தன்மையும் இயல்பாகவே அமைந்து விட்டு விடுதலையான சுதந்திரத்தனத்தில் பெரியவர்களின் வாழ்க்கை முறையையும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் வழியே வளரும் உரையாடலகளை கவிதைகளாக எழுதி தேனி சுந்தர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பொதுவாகவே எல்லோரது வீடுகளிலும் குழந்தைகள் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும் போது இது ஏன் இப்படி என்ற கேள்விகளால் பெற்றோர்களை துளைத்தெடுக்கும் போது அவர்களை அடக்கி வாயை மூடிக் கொள்ள வைப்பது நிறைய பேரின் வேலையாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரே அவர்களின் கேள்விகளில் இருக்கும் ஆர்வத்தையும் எதையும் தெரிந்து கொள்ளும் மனப்பான்மையையும் அறிய வைத்து அவர்களை உரையாடலுக்குள் இடம்பெற வைத்து சுதந்திரமான தருணங்களில் அவர்களுக்கு பொது நிகழ்வையும் புரிய வைப்பதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அப்படி ஓர் அழகான தருணங்களை தனது பிள்ளைகளுக்கு வழங்கி அவர்களின் அழகிய மொழியை படம் பிடித்து இருக்கும் ஆசிரியருக்கு குழந்தைகளின் வினாக்களே நிறைய தேடலை உண்டாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நம்மில் நிறையப் பேருக்கு குழந்தைகளின் பேச்சு அர்த்தமற்றதாகவும் புரியாததாகவும் மாறிவிடுகிறது. ஆனால் அர்த்தமற்ற பேச்சிலிருந்து துவங்கும் அவர்களின் உரையாடலே அவர்களை புதிய புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். குழல் இனிது யாழ் இனிது என்று சொன்ன வள்ளுவன் கூட அவரவருக்கு அவரவர் பிள்ளைகளின் பேச்சே இனிமையானது என்று முடிவுரை எழுதுகிறார். ஆனால் எல்லாப் பிள்ளைகளின் மழலைத் தன்மையையும் ரசிப்பதில் வகுப்பறை தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு மாணவன் வளரும் பருவத்தில் அவன் காணும் காட்சிகளையும் அவன் முன்னே நடக்கும் செயல்களின் வழியேயும் அவனது கற்றல் தொடங்க ஆரம்பிக்கிறது. அப்போது அவனுக்குள் எழும் சந்தேகங்கள் அவனைத் தொடர்ந்து கேள்விகளுக்குள் இழுத்துச் செல்கின்றன.

குழந்தை மொழியை கண்டுகொள்ளும் ஒவ்வொருவரின் இதயத்திலும்ம் புதிய புதிய அறிவுச்சாளரம் திறக்கத் தொடங்குகிறது. பள்ளியோ வீடோ குழந்தைகளின் கேள்விகளுக்கு சற்று செவிசாய்த்தால் அவர்களுக்கும் புதிய புதிய சிந்தனைகள் எழும். அதனால் புதிய புதிய செயல்களை அவர்களைக் கொண்டு உருவாக்கி விட முடியும்.




""சேர்ல உட்கார்ந்து
படிச்சிக்கிருந்தேன்.
அடிக்கோடு போட
வச்சிருந்த பேனா
கைதவறி
கீழே விழுந்துடுச்சு
கொஞ்சம் தள்ளி
எதையோ வெட்டி ஒட்டிக்கொணடிருந்தவன்
அதை எடுத்து நீட்டினான்
கை நீட்டினேன்
எட்டல....
உடம்ப உயர்த்தி
இன்னும் கொஞ்சம்
பக்கமாய் நீட்டினான்.
அப்பவும் எட்டல...
நான் நீட்டியபடி இருந்தேன் கோபம் வந்திருச்சு
அவனுக்கு...
நாங்கதான்
உங்க லெவலுக்கு வரணுமோ கொஞ்சம் கூட
எறங்க மாட்டீங்களோ என்றான். கேள்வி
பேனா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.....""


""பூனைக்குட்டி எப்பவுமே
அவங்க அப்பத்தா கூடவே தான் இருக்கும்.""


இந்த வரிகளை மனிதர்களுக்கு பொருத்திப் பார்ப்போம். பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் தங்களது தாத்தா பாட்டிகளை தொலைத்து விட்ட ஏக்கமும் அவர்கள் இருந்தும் தனியாக இருப்பதோ அனாதை இல்லத்தில் இருப்பதோ அவர்களை எவ்வளவு பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் என்பதையும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.


""அப்பாவ எங்கம்மா?
திண்டுக்கல்ல மீட்டிங்ன்னு
போயிருக்காரு.
இவ்ளோ நேரமாச்சு
இன்னுமா மீட்டிங்கு?
இப்பதான்
பஸ் ஏறி இருக்காராம்.
வர லேட்டாகும்.
சரி சரி
லேட்டாவே வரட்டும்.
என்னடா
அப்பாவக் காணோம்னு
ஆர்வமாக் கேட்ட
இப்போ
லேட்டாவே வரட்டும்னு சொல்ற?
ம்ம்..வந்தன்னியூம்
அத எழுதிட்டியா
இத எழுதிட்டியான்னு
கேப்பார்ல
லேட்டா வந்தா
அதுக்குள்ள
நா தூங்கிருவேன்ல...!


ஏண்டா டேய்...!""


குழந்தைகள் நடத்தும் உரையாடலில் பெரியவர்கள் புரிந்து கொள்ளும் புதிய புதிய பண்புகளையும் இந்த நூல் கோடிட்டுக் காட்டுகிறது.


விளையாட்டுக்களில் தம்மையே மறந்துவிடும் உற்சாகம் தவறுகளை உடனேயே மறந்துவிட்டு மன்னிக்கும் மனப்பக்குவம் பொம்மைகளின் மீதான தாய்மை உணர்வு தமக்கு முழுமையாகப் புரியும்வரை விடாது நச்சரிக்கும் தேடல் வளர்ப்புப் பிராணிகள் மீது வைக்கும் கண்மூடித்தனமான பாசம் போன்ற குழந்தைகளின் உலகத்திற்குள் நாமும் நுழைந்து அவர்களாகிவிடுகையில் நமக்கும் இறகுகள் முளைத்து விடுகின்றன.

சில சமயங்களில் குழந்தைகளின் சிந்தனை பெரியவர்களின் சிந்தனைகளைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றன. அப்போதெல்லாம் நாம் அவர்களை வியப்புடன் பார்ப்பதிலிருந்து விலகி 'அதிகப்பிரசங்கி', 'ஒன்னும் தெரியாது' என்று அவனை அடக்குவதிலேயே காலத்தை தொலைத்து விடுகிறோம். இன்றைய சூழலில் பள்ளியும் வீடும் குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் அவர்களது வினாக்களுக்கான விடைகளைத் தேட வைப்பதில் நேரத்தை செலவிடுவதில்லை. அறச் சிந்தனைகளை பிற மனிதர்களை நடத்தும் பண்புகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு நேரமும் அவர்களது மனங்களுக்கு நாம் மதிப்புக் கொடுத்தல் அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நூலின் கவிதைகள் அத்தகு உணர்வுகளையே பேசுகின்றன. மழலைகளின் சிந்தனைகளைக் கொஞ்சம் செவி சாய்த்து அவர்கள் மொழியில் அவர்களுடன் பயணிக்கும் போது நமக்கும் புதிய புதிய கருத்துக்கள் உருவாகி நல்லதொரு செயல்பாடுகளை நோக்கி நாமும் நகர்ந்து விடக்கூடும். குழந்தைகள் வளரும் போதும் அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்கிறோம். அத்தகு வளர்ச்சியை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றிக் காட்ட குழந்தைகளின் இத்தகு கவிதைகளுக்குள் நம்மை கொஞ்சம் இளைப்பாற்றிக் கொள்வோம்.
-
இளையவன் சிவா, ஆசிரியர்
திருப்பூர்



 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!