திட்டமிடாத வகுப்பறைகள்.. நூல் குறித்து சீனி சந்திரசேகரன், செங்கல்பட்டு
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம் : திட்டமிடாத வகுப்பறைகள்.. _ தேனி சுந்தர்
வகுப்பறை குழந்தைகளுக்கானது என்பதையும், அங்கே என்ன நடக்க வேண்டும்? என்பதை குழந்தைகளே தீர்மானிக்கிறார்கள் என்பதையும், நூல் படிப்பது போன்று நாம் பாடத்தை நடத்த முடியாது என்பதையும், பல்வேறு வகுப்பறை நிகழ்வுகள் மூலம் சொல்லும் நூல் இது.
நூலிலிருந்து...
ரொம்ப சுத்தமா இருக்கணும். நீட்டா இருக்கணும். பள்ளிக்கூடம் போயிட்டு திரும்ப வர வரைக்கும் ஆடைகள் அழுக்காகாமல் இருக்கணும், என்ற கருத்து மாறணும். கறை நல்லது. அழுக்கு நல்லது. திறந்த வெளியில் கற்றல் ரொம்ப நல்லது.
வருடம் எல்லாம் வகுப்பறையில் பொருத்தமற்ற போட்டிகளை வைத்து குழந்தைகளை நாம் தோற்கடிக்கிறோம். வருடத்தில் ஒரு நாள் அவனுக்காக போட்டி நடக்கும்போது அவன் வெற்றிவாகை சூடி கதாநாயகன் ஆகிறான்.
சிறந்த கல்வி, வருகை, விளையாட்டு, எல்லாம் முக்கியம்தான். அவை எல்லாவற்றையும் விட முக்கியம் ஒழுக்கம், பொது வெளியில் நேர்மையாக நடந்து கொள்வது.
குழந்தைகளோடு பழகும் போது நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். முடியாதவர்கள், முயற்சி செய்யாதவர்கள், மூக்கு உடைபடுவது நிச்சயம்.
குழந்தைகள் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டும், எதையாவது கிறுக்கிக் கொண்டும், வரைந்து கொண்டும், பொம்மைகள் செய்து கொண்டும், விளையாடிக் கொண்டும் தான் இருக்கிறார்கள். அவர்களை சும்மா இரு, அமைதியாக இரு, பேசாமல் இரு, என்று மிக எளிதாய் சொல்லி விடுகிறோம் பெரியவர்கள் சும்மா இருப்பது தான் குழந்தைகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
குழந்தைகள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு, தெரியாத மாதிரியே இருப்பார்கள். அவர்களது உலகில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் கிடையாது. அதற்கான தயாரிப்பு, திட்டம் எதுவும் கிடையாது. அந்தந்த பொழுதை அப்படி அப்படியே அவர்கள் கடந்து விடுகிறார்கள்.
நாம் ஒரு யோசனையில் இருப்போம். குழந்தைகள் வகுப்புக்கு வந்ததும் இந்த பாடத்தை நடத்துவோம். இந்த பக்கத்தை நடத்துவோம். எழுதி போடுவோம்... வாசிக்க வைப்போம் என ஏதாவது ஒரு திட்டம் வைத்திருப்போம். ஆனால் பல நேரங்களில் நம் திட்டம் நிறைவேறுவதில்லை.!
குழந்தைகளின் ஆரோக்கியமான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பு இருந்தால் தான் வகுப்பறை களைகட்டும்.
குழந்தைகளிடம் கற்றல் நிகழ்கிறது. நாம் கவனிக்கும் பொழுது நிகழ்வதில்லை. கற்றல் நிகழும் போது நாம் கவனிப்பதில்லை.!
நாம் நிர்ணயித்த பொழுதுகளில் அவர்கள் வந்தடைவதில்லை. அவர்கள் வந்தடையும் போது கவனித்து அவர்களை வரவேற்க நாம் அங்கு இருப்பதில்லை.!
நாம் செய்ய வேண்டியது எல்லாம் கற்றலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பதும் தான்.
நின்று பார்க்க வேண்டும், நிதானம் காட்ட வேண்டும்.!
ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்தும் போதே, இச் செயல்பாட்டை நாம் வகுப்பில் நடத்தினால் அதில் ஒவ்வொரு குழந்தையும் எவ்விதம் கலந்து கொள்வார்கள் என்று யோசிக்கும் அளவுக்கு ஓர் ஆசிரியருக்கு தன் வகுப்பறை குழந்தைகளை பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
பள்ளி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் பன்னாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டை போல திட்டமிடும் காலம் இது. எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும்? சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த நொடி என்ன செய்ய வேண்டும்? எப்போது புத்தகம் படிக்க வேண்டும்? என ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிட்டு நிறுவனப்படுத்தும் வேளையில் திட்டமிடாத வகுப்பறைகளோடு வந்திருக்கிறார் நூலாசிரியர்.
ஆசிரியர் கற்பித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை கற்றலுக்கு உதவும் சூழ்நிலைகளை உருவாக்குவது முக்கியம். என்ற கூற்றை உள்நோக்கி எழுதப்பட்ட அனுபவப் பகிர்வே இந்நூல்.
-
சீனி சந்திரசேகரன்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், செங்கல்பட்டு

Comments
Post a Comment