அழகோ அழகு : மாணவர் மனசு நூல் குறித்து பா.இந்துமதி, ஆசிரியர்

இப்புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இவ்வாசிரிய எழுத்தாளரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கும், அவரின் குழந்தை மனசுக்கும் என் மனம் அடிமையாகிவிட்டது என்றே கூறலாம். இவரிடம் படிக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என ஆசிரியரான எனக்கே அவர்மீது பொறாமை கொள்ள வைத்தது.

குழந்தைகளோடு குழந்தைகளாக வாழும் உலகம் இனிமையானது. கள்ளம் கபடம் இல்லாதது. உண்மையானது. அவர்கள் உலகத்திற்குள் சென்று, அவர்களை அரவணைத்து அவர்களோடு அவர்களாக, அவர் பாடம் நடத்தும் முறை பற்றி விவரிக்கும் 16 கட்டுரைகளும் அழகோ அழகு.



பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு தெய்வம் போல. அவர்களுக்கு ஆசிரியரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். அலாதி பிரியம். சார், உங்க ஊர் எது சார்? எனக் கேட்பதும், உங்க ஊரைக் கண்டுபிடிச்சிட்டேன் சார். உங்கத் தெருவைக் கண்டுபிடிச்சிட்டேன் சார், என்று பள்ளி மாணவர்கள் கூறும்பொழுது, “சார் வீட்ல புதுசா ஒன்னும் இல்ல… சார் பெருமையா சொல்லிக் கொள்கிற அளவுக்கு சரித்திர முக்கியத்துவம் இல்லாத வீடு தான். அதுவும் நம்ம வீடு மாதிரி அதுவும் ஒரு சாதாரண வீடுதான்னு புரிஞ்சுக்குவான். ஆனா, அந்தக் குட்டிப் பையன கூப்பிட்டு ஒரு நாள் விருந்து கொடுத்தாரு என்கிற தகவல்தான் என்னைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப் பதிவாக மாறப் போகிறது…!” என்று கூறும் அவரின் உள்ளக்கிடக்கையை என்னவென்பது?

பள்ளிக்கு இரண்டு நாள்களாக வராத ஹாசினி என்னும் மாணவியிடம், “ஓம்பாட்டுக்குச் சொல்லாம கொள்ளாம போயிட்ட… சார்ட்ட சொல்ல வேண்டாமா…? சார் ஊருக்குப் போறோம் சார், ஸ்கூலுக்கு வரமாட்டேன் சார்ன்னு ஒரு வார்த்தை சொல்லணும்ல” என்று கேட்க, “ எதுக்கு சார் ? சொன்னா, நீங்களும் எங்க கூட ஊருக்கு வருவீங்களா…? எனக் கேட்கும் குழந்தை ஹாசினியை என்னவென்பது?

ஆசிரியர்களான நமக்குத்தான் நமக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளைக் கண்டு பணிவும், மரியாதையும் அடக்கமும். ஆனால் குழந்தைகளுக்குப் பெரிய அதிகாரிகள் பற்றி எல்லாம் கவலை இல்லை என்பதை மிக நகைச்சுவையாய், “சார்! காலைல வந்தார்ல, அவர்லாம் நம்ம ஸ்கூலுக்கு ஹெச்.எம்மா வர்றதா இருந்தா முன்னாடியே சொல்ருங்க சார்…?”

“ஏண்டா…?”

“நாங்கல்லாம் வேற ஸ்கூலுக்குப் போய்க்கிர்றோம்… ரொம்ப கெடுபிடியா இருக்காரு சார்…!”

“டேய் !அவரு ஆபிசர்டா! அதுவும் பெரிய அதிகாரிடா! அப்படித்தான்டா இருப்பாங்க…!”

“ இல்ல சார்! அதெல்லாம் நமக்கு ஒத்து வராது சார்…!” -  என மாணவர்கள் கூறும் நகைச்சுயான பதில் நம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கே உரியது.

மேலும் ஆசிரியர் பாடச் செயல்பாட்டின் போதும், விளையாட்டின் போதும் ஒவ்வொரு மாணவர்களையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகின்றனர். தங்கள் பெயர்கள் விடுபடும் பொழுது அவர்களின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டு அவர்களின் மனம் அறிந்து இணக்கமாக செயல்படுவதைக் குறிப்பிடுகிறார்.

தன் பள்ளியில் படிக்கின்ற மாணவனிடம் ‘தொறக்குச்சி’ வாங்க வரும் குடிகாரத் தகப்பன், “அவனுக்கு வேற சொத்து வேணாம்! அவன நல்லாப் படிக்க வைச்சுப்புடுங்க சாரே!” என்று வேண்டுவது அனைவரும் கண்களிலும் கண்ணீர் வர வைக்கிறது.

இந்நூலை ஒவ்வொரு ஆசிரியரும், குறிப்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். “குழந்தைகள் அளவிற்கு குனியத் தெரிகிறது தோழர் சுந்தருக்கு” என இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய இரா. எட்வின் குறிப்பிடுவது போல் குழந்தையோடு குழந்தையாய் வாழ்கிறார் ஆசிரியர்.

“எனக்கு இந்தியாவின் முதல் குடிமகன் என்னும் பதவியை விட, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதுதான் என்னுடைய மகிழ்ச்சி” என்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன். இப்பொழுது புரிகிறது அவரின் கூற்றுக்கு விளக்கம். அரை மணி நேரம் ஒதுக்கி இந்த மாணவர் மனசுக்குள் நீங்களும் சென்று வாருங்கள்.  நாமும் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவே இருக்க விரும்புவோம்.
பா.இந்துமதி, ஆசிரியர்
ஏ.வி.ஜோ.அரசு மேல்நிலைப்பள்ளி, இட்டமொழி

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23