மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் : விமலாதேவி, ஆசிரியர்
ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களது படைப்பை சமீப காலங்களில் வாசித்து அவருடைய அன்பான அரவணைப்பில் மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம்.
பொதுவாகவே தொடக்கக் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் அதில் நிரப்பப்படும் பணியிடங்களானது பெரும்பாலும் பெண் ஆசிரியர்களையே முன்னுரிமைப்படுத்துவர். காரணம், பெண் ஆசிரியர்கள் தான் தாய்மை உள்ளத்தோடும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு கரிசனையோடும் செயலாற்றும் பக்குவம் கொண்டிருப்பர் என்பதால் தான். இருப்பினும் ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் பொழுது அவர்கள் அவ்விடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
ஆனால் இப்படி ஒரு ஆசிரியர் மாணவர்களோடு மாணவர்களாக கலந்து பேசி மகிழ்ந்து உறவாடி விளையாடி களியாடிக் கொண்டிருப்பதை ஆசிரியரின் எழுத்துக்களில் தான் அறிய முடிந்தது. இந்த புத்தகத்திற்கான தலைப்பு ஆசிரியர் “மாணவரின் மனசு” என்று வைத்திருப்பது, உண்மையில் மாணவர் மனசு என்று ஒரு திட்டமானது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் செயல்படுகிறதை மையப்படுத்தி தான்.
ஒரு சிவப்பு வண்ண பெட்டி ஒன்று மாணவர் மனசு என்று எழுதி பள்ளிக்கூடங்களில் இருக்கும். அதில் மாணவர்கள் தங்களுடைய நிறை குறைகளை மனம் விட்டு எழுதி தெரிவிக்கலாம். ஆசிரியர்கள் அதனை வாரம் மாதம் ஒரு முறை எடுத்து சேர்ந்துள்ள கடிதங்களை வாசித்து அதற்கான குறைகளை நிவர்த்தி செய்யவும் நிறைகளை பாராட்டவும் செய்யும் உருவாக்கப்பட்ட திட்டமது. ஆசிரியர் இங்கு மாணவர் மனசு என்ற புத்தகத்தின் தலைப்பை வைத்துவிட்டு ஒரு ஆசிரியரின் மழலையான மனதை நம்முன் திறந்து காண்பித்திருக்கிறார்.
பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளாக சில குழந்தை வளர்ப்பில் இருக்கும். ஆனால் தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கிட்டதட்ட அவர்கள் ஆயா போன்று தான். ஆண் பெண் பேதம் எல்லாம் ஆசிரியர் என்று வந்துவிட்டால் இல்லை. அவ்வகையில் ஆசிரியர் ஹரிணி என்ற பாப்பாவுக்கு ஒரு நாள் மாற்றுப் பணிக்கு செல்லும் இடத்தில் ஆயா பணி செய்த விதமும் அதை ஊரறிய பறைசாற்றிய மாணவர்களின் குறும்பும் விழுந்து விழுந்து என்னை சிரிக்க வைத்தது.
அருகே அங்கன்வாடி இல்லாத பள்ளிகளின் சூழல்களை முதல் முறையாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டியில் சுட்டி படம் பார்ப்பது போல எழுத்துக்களில் வர்ணஜாலம் செய்திருக்கிறார். எந்த இடத்திலும் கூட அவருடைய முகச்சுழிப்பை என்னால் பார்க்க முடியவில்லை. சிரித்த முகத்துடனே படங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன் , அந்த முகம் அப்படியே பிரதிபலிக்கிறது ஆசிரியர் என்று வரும்பொழுதும். வாழ்க நம் ஆசிரியர் பெருமான்.
ஆசிரியரை பார்வையாளராக வைத்துவிட்டு மாணவர்கள் அரங்கேற்றிய செயல்பாடுகள் போல இவர்கள் இருவரும் நடத்திய செயல்பாடுகளை நாம் ஒரு பார்வையாளராக அமர்ந்து கவலைகளை எல்லாம் துறந்து சிரித்து சிரித்து மகிழ்வதற்கு ஒரு கட்டுரை தொகுப்பை தந்திருக்கிறார் எனலாம்.
பள்ளிக்கு ஆய்வுக்கு வருகிறேன் என்ற பெயரில் அதிகாரிகள் செய்யும் எல்லை மீறிய செயல்களையும் அழகான கண்டிப்புடன் துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். குழந்தைகள் என்று வந்துவிட்டால் அவர்களிடத்தில் எவ்வகையான அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதை ஆழ அறிந்து அதை பின்பற்றுகிறார் என்று நான் கருதுகிறேன்.
எத்தனையோ ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிகிறோமே என்ற வருத்தத்துடன் இருக்கின்றனர். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் அதை நினைத்து வருந்தியவள் தான். ஆனால் அதனை முழுமையான மனதோடு ஏற்று சிறந்த வாழ்வியல் அனுபவங்களாக ஆசிரியர் பணியை செய்து வருகிறார் என்று நினைக்கும் பொழுது சிலாகிக்க வைக்கிறது.
நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் வீடு எங்கே இருக்கிறது? எப்படி இருக்கும் என்ற கற்பனை குழந்தைகள் மனதில் எப்போதும் உதித்துக் கொண்டே இருக்கும். அதேபோல ஆசிரியர் நமக்கு வெரைட்டியான டிஷ்ஷஸ் வாங்கி தருகிறார் என்றால் அதனை அருகருகே உள்ள வகுப்பறைகளில் பறைசாற்றி பெருமிதம் கொள்ளும் தன்மையும் குழந்தைத்தனத்தை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு வாட்டர் கேன் எடுத்துட்டு வான்னு சொன்னதுக்கு பரோட்டா பிரியாணி வாங்க வைக்கிற சதித்திட்டம் எல்லாம் அவிங்களால தான் முடியும்.
வாய்க்கு வந்த கதை எல்லாம் சொன்னாலும் தைரியமாக முன் நின்று பேசினால் எல்லோருக்கும் பரிசு என்று அறிவிப்பு வரவேற்க கூடியது. அதற்காக காமராஜர் ஐயா எங்கள் வீட்டில் சாப்பிட்டார் , பாயாசம் குடித்தார் என்றெல்லாம் கட்டுக்கதை விடும் அளவுக்கு பெரிய கதை சொல்லிகளாக இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைதான் நாம் கவனம் கொள்ள வேண்டியது.
பள்ளிக்கு விடுப்பு எடுத்தால் ஆசிரியரிடம் காரணம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று சொல்லும் இடத்து… “ ஏன் சார் முன்னமே சொன்னா நீங்களும் எங்க கூட ஊருக்கு வருவியலான்னு”, கேக்குற குழந்தைங்க பாவமா…. கேட்டுட்டு இருக்க ஆசிரியர் பாவமா…என்றே தெரியவில்லை. ஆரம்ப காலகட்டங்களில் இது எல்லாம் கேள்விப்பட்ட பொழுது அவருக்கு காய்ச்சல் வந்ததும் தப்பில்லை தான். பின்னர் எல்லாம் பழக்கமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டு இருப்பது ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் தான் இன்றைய வகுப்புகளுக்கு தேவையானவர்கள். குழந்தைகள் உலகமானது எப்பொழுதும் வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பியது. அவர்களிடத்தில் அதிகாரத்தை காட்டுவது நம்பால் அன்பை இழக்க செய்வதற்கு சமம்.
இன்றைய குழந்தைகள் “இன்னைக்கு வந்த சாரு மாதிரி ஹெச் எம் வந்தா நாங்க எல்லாம் வேற பள்ளிக்கூடத்துக்கு டி சி வாங்கிட்டு போயிருவோம் “, என்று சொல்கிற அளவுக்கு மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் தவறில்லை. பார்த்து சூதானமா இருக்க வேண்டிய இடத்தில் ஆசிரியர்களும் இருக்கின்றோம். பெண் குழந்தைகள் மட்டுமின்றி இருபால் மாணவர்களுக்கும் குறிப்பாக தொடக்க கல்வியிலே பாலின பேதம் குறித்து ஒரு புரிதலை தரவேண்டிய சூழலும் இருக்கிறது.
பள்ளிக்கூடத்திற்கு எப்படி வரவேண்டும் என்ற நெறிமுறைகளை நாம் வைத்திருந்தாலும், சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கக்கூடிய அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் அதற்கு விதிவிலக்காக தான் இருக்கின்றது. அவர்களை குறை சொல்லியும் பயனில்லை. பொதுக்கழிப்பிடத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று புரிதல் இல்லாமல் செய்யும் சில மனிதர்களால் சில மனிதர்களுக்கு உணவு உண்ணும் உணர்வு கூட அற்றுப்போகிறது என்பதை பேசும் கதை கண்ணீர் நிறுத்தாத குறைதான்..
மொத்தத்தில் ஆசிரியர் தேனி சுந்தர் போன்ற ஆசிரியர்கள் நிரம்பிய பள்ளிக்கூடங்களில் எப்பொழுதும் மாணவர் மனசு பெட்டிகள் நிரம்புவதற்கு வாய்ப்புகள் இருக்காது என்பதுதான் நிதர்சனம். அப்படியே அதில் ஒன்று இரண்டு தபால்கள் விழுந்தாலும் அன்பின் மிகுதியை காட்டும் எழுத்துக்களாக தான் அங்கே கோர்க்கப்பட்டிருக்கும் என்பது என் கருத்து.
இக்கட்டுரை தொகுப்பை வாசித்த பேராசிரியர் ச மாடசாமி அவர்களும் சரி , ஐயா எட்வின் அவர்களும் சரி நிச்சயம் வாசித்த பண்பு ஒரு புத்துணர்ச்சி பெற்றிருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை . அவர்கள் மட்டுமல்ல நீங்களும் இதை வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்குள்ளும் ஒரு புத்துணர்வு தொற்றிக் கொள்ளும். வாசித்து பாருங்கள்.
ஆசிரியர்: தேனி சுந்தர்
புத்தகத்தின் பெயர்: மாணவர் மனசு
தலைப்பு : கல்விசார் நூல்கள்
விலை : 70
பக்கங்கள் : 72
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
பா விமலா தேவி ஆசிரியர்
பட்டுக்கோட்டை

Comments
Post a Comment