ரெடி... ஆக்சன்.......

நேற்று முன்தினம் பாண்டா பிளான் என்றொரு ஜாக்கிசான் படம் பார்த்தேன். இருபது வருடங்கள் கழித்து ஜாக்கிசான் படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன். ஆசிரியர் பணிக்கு வரும் முன்பு திராட்சை தோட்ட தொழிலாளியாக சில காலம் வேலை செய்து கொண்டிருந்த போது சிவச்சந்திரன் உள்ளிட்ட சக வயது நண்பர்களுடன் அருகில் உள்ள காமயகவுண்டன் பட்டி , சுருளிபட்டி கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் ஜாக்கிசான், புருஸ்லீ, ஜெட்லீ படங்கள் பார்த்து விட்டு சாவகாசமாக பேசிக்கொண்டு, இரவில் நடந்து வீடு வந்து சேர்வோம்..


மற்ற படங்களை விட ஜாக்கிசான் படம் என்றால் சண்டைக்கு சண்டை, சிரிப்புக்கு சிரிப்பு, விறுவிறுப்பு இருக்கும்.. அப்படியான எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தையும் பார்த்தேன்.. ஆனால் இந்த படம் வேறு மாதிரியான அனுபவமாக இருந்தது..

படத்தில் ஜாக்கி ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பாண்டா கரடி குட்டி பிறக்கிறது. அதை தத்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி கலந்து கொள்கிறார். இன்னொரு புறம் ஒரு பெரிய பணக்கார குடும்பத்துக்கு அந்த பாண்டா குட்டி தேவைப்படுகிறது. தன் மகளுக்காக அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட தயாராக இருக்கிறார் அவர்.. ஒரு பெரிய தொகைக்கு டீல் பேசி, அதை கடத்தி வந்து கொடுப்பதற்கு ஒரு கொள்ளைக் கும்பல் தயாராகிறது.

ஜாக்கி தத்தெடுக்கும் நிகழ்வில் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக கொள்ளைக் கும்பல் பூங்காவில் அதிரடியாக நுழைகிறது. வந்தவர்களில் கிட்டதட்ட எல்லாருமே ஜாக்கியின் தீவிர ரசிகர்கள். உங்கள் படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அனைத்தையும் விரும்பிப் பார்ப்போம் என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதற்காக எல்லாம் கொள்ளையடிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை.




பாண்டா குட்டியை கடத்திச் செல்ல துணிகிறார்கள். ஜாக்கி தடுக்கிறார். கும்பலில் ஒருவன் சொல்கிறார், உங்கள் படத்தில் வருவது குங்பூ சண்டை போடலாம் என்று அழைக்கிறான். அது வெறும் படம் தானே, நிஜம் அல்லவே.. ஜாக்கி அவரது ரசிகரிடம் அடிமேல் அடி வாங்குகிறார். அவனிடம் தப்பிக்க என்னென்னமோ செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரது உயிருக்கே ஆபத்து வந்து விடும். அப்புறம் அவரது பாதுகாவலர் (பவுன்சர்) தான் காப்பாற்றி விடுவார்.

இப்படியாக ஜாக்கியின் படங்களைப் பார்த்து பார்த்து அவரது சண்டைக் காட்சிகளின் தீவிர ரசிகர்களாக மாறியவர்களிடம் இருந்தே அவர் தப்பிக்க படம் முழுக்க படாத பாடு பட்டு ஓடுவார், ஒளிவார்..

இவருடன் சேர்ந்து தப்பிக்க, கரடியை காப்பாற்ற ஓடிவரும், போராடும் பூங்கா ஊழியரும் இவரது தீவிர ரசிகருமான பெண்ணிடம் ஜாக்கி ஒரு கட்டத்தில் சொல்வார்.. "சாதாரண நேரங்களில் நாங்களும் உங்களைப் போல தான். வலி, சோர்வு, மகிழ்ச்சி எல்லாம் உங்களைப் போலவே தான் எங்களுக்கும்.. ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது, ஆக்சன் என்ற ஒரு வார்த்தையை கேட்டதும் எனக்குள் ஒரு புது ரத்தம் பாய்ச்சியது போல இருக்கும். என்னை ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்வேன், எப்படியான சண்டைக்காட்சி என்றாலும் துணிந்து நடிப்பேன்..!"

படத்தின் கடைசியில் கொள்ளை கும்பல் தலைவனிடம் ஜாக்கி தனியே மாட்டிக் கொள்வார். மூச்சுத் திணறி இறக்கும் தருவாயில் இருப்பார். அப்போது மேற்சொன்ன அந்த பூங்கா ஊழியர் பெண், ஜாக்கியை அலைபேசியில் தொடர்பு கொள்வார்.. தப்பித்து விட்டீர்களா என்று கேட்பார். இந்த முனையில் ஜாக்கி பேச முடியாமல் திணறுவதை கேட்டு, அவர் ஆபத்தில் உள்ளார் என்று அந்த பெண் புரிந்து கொள்வார்.. உடனே ஜாக்கி இவரிடம் சொன்ன அந்த "ஆக்சன்" நினைவுக்கு வரும்.. உடனே அந்த பெண் போனிலேயே "ஆக்சன்" என்பார். உடனே ஜாக்கிக்கு வேகம் வந்து விடும் . அந்த வில்லனை அடித்து விட்டு *தப்பி விடுவார்..!*

தற்போதைய தமிழக சூழலுக்கும் இந்த பாண்டா பிளான் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருந்தாலும் படம் பார்த்த அனுபவத்தை நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது.. சொன்னேன்.. வேறொன்றும் இல்லை..!

தேனி சுந்தர் 

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23