ஓங்கூட்டு டூணா.! - வாசிப்பு அனுபவம் : மதுரை அமுதா செல்வி

தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா..! நூலை வாசித்து முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது.

படிக்கும் அத்தனை புத்தகங்களை குறித்த வாசிப்பு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற பேராசை மனதில் எழுந்து கொண்டே இருந்தாலும் சூழல் காரணமாக டைரியில் குறிப்பெடுக்கும் கிறுக்கல்களுடன் மட்டுமே நின்று போகின்றது. அதையும் மீறி இந்த புத்தகம் தரும் வாசிப்பு அனுபவத்தை நாலு பேருக்கு சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆவல் சில நேரங்களில் வலுக்கட்டாயமாக என்னை எழுத உந்தித் தள்ளுகிறது அப்படிப்பட்ட உந்துதலின் காரணமாகவே இதை எழுத தொடங்கினேன்

ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிய அனுபவம் வித்தியாசமானது. காத்திருக்கும் கனப்பொழுதுகளில் கூட 4 வரி எழுதிவிட்டு பயணத்தை தொடரும் போது நான் எந்த ரோட்டில் பயணம் செய்தாலும் என் நினைவுக்குள் அந்த குழந்தைகளின் குறும்புகளே நிரம்பி வழிந்தது . மாதங்களை கடந்த பிறகும் மனதை விட்டு இறங்கிச் செல்ல மறுக்கும் அந்த குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அவர்களின் உலகில் வாழ எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

குழந்தைகளோடு பணியாற்றும் ஆசிரியர்கள் பலருக்கு கூட அவர்களின் உலகம் சற்று விலகியே இருக்கிறது.

குழந்தைகளின் உலகிற்குள் பயணிக்க கனமற்ற மனம் வேண்டும். அப்படிப்பட்ட மனதுடைய ஒரு நபர் வாத்தியாராக அமைந்தால் அந்த வகுப்பறை எப்படி இருக்கும் என்பதற்கான பூரண உதாரணம் தோழர் தேனி சுந்தர் அவர்களின் வகுப்பறை. அந்த வகுப்பறையில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு கிடையாது. கற்றுக் கொடுப்பவர் கற்றுக் கொள்பவர் என்ற வேறுபாடு கிடையாது. ஆசிரியர் மாணவர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. யாரும் யாரையும் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கும் சுதந்திரமான வகுப்பறை அது. யார் மாணவர் யார் ஆசிரியர் என்று குழம்பச் செய்யும் கூட்டு கற்றல் முறையின் முழுமையான வடிவம் அந்த வகுப்பறை.அது ஒரு ஜனநாயக வகுப்பறை.

குழந்தைகளின் கற்பனைகளை சிதைக்காமல் அதற்குள் பயணித்து அந்த அனுபவத்தை அவர் சிலாகித்தது மட்டுமல்லாமல் அதை நாமும் உணர்ந்து அனுபவிக்க தொகுப்பாக தந்திருக்கிறார்.

10 ஆசிரியர்கள் இருக்கக்கூடிய இடத்தில் எது கல்வி என்ற கேள்வி எழுப்பினால் 10 பேரும் பத்து விதமான பதில்களை தருவர். உண்மையில் கல்வி என்பது குழந்தைகளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை வெளி கொணர்வது என்பது எத்தனை ஆசிரியர்கள் புரிந்து கொள்கிறோம்.

குழந்தை பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கும் அந்த நாளிலேயே அந்த குழந்தையின் அத்தனை மகிழ்ச்சியும் அடைபட்டு விடுகிறது. பல குழந்தைகள் வகுப்பறை என்னும் மூச்சு முட்டும் இறுக்கமான இருண்ட உலகிற்குள் தட்டு தடுமாறி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஆசிரியர் எனக்கு எல்லாம் தெரியும். நீ மாணவன் உனக்கு எதுவும் தெரியாது.வாய்மூடி கேள் . பேசாதே... என்ற மட்டமான மனோபாவத்தோடு ஆசிரியரால் குழந்தைக்கு எந்த நல்ல கற்றல் அனுபவத்தையும் கொடுக்க முடியும். குழந்தமையை சிதைக்காமல் கற்றல் கற்பித்தல் நிகழும் வகுப்பறையை பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படிப்பட்ட வகுப்பறையை கட்டி அமைத்திருக்கும் தோழர் தேனிசுந்தரின் வகுப்பறையில் குழந்தையாக வாழ்ந்திட மனம் ஏங்குகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டப்பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட பிறகு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணி செய்ய வேண்டும் என்று எழுந்த ஆசை ஓங்க்கூட்டு டூணா.! வாசித்த பிறகு ஏக்கமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான புத்தகம். ஆரம்பப் பள்ளியின் வகுப்பறை எத்தனை திறந்த மனதுடன் அணுகப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகம் நல்ல திறவுகோல்.

-
மதுரை அமுதா செல்வி
ஆசிரியர், எழுத்தாளர்..

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23