எதிர்பாராத பரிசு - வாசிப்பு அனுபவம் : பா. கெஜலட்சுமி
டுஜக் டுஜக் நூல் முற்றிலும் மாறுபட்ட வகைமையில் குழந்தைகளின் கற்றலை, கற்பனை ஆற்றலை, அவர்தம் ஆழ அகலத்தை, வெகுளித்தனத்தை, படைப்புத் திறனை, எதையும் ரசித்து ஒன்றிவிடும் மனநிலையை, வெறுப்பை சுமக்காத மனநிலையை அவர்தம் மழலை மொழியிலே புத்தகமாக பதிவு செய்திருக்கிறது. ஒரு தந்தையாக குழந்தைகளின் குறும்புகளை ரசித்து கடந்து விடாமல் அதை தினந்தோறும் குறிப்புகளாக முகநூலிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்ததோடு தொகுத்து நூலாகவும் படைத்திருக்கிறார்.
அந்நூலை வாசித்த உடனேயே பல வாசகர்கள் முகநூலிலும், தம் வலைதளப் பக்கங்களிலும் குறைந்தகால இடைவெளியிலேயே விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கமலாலயன் முன்னுரையோடு, தமிழ்செல்வன் உள்பட பல ஆளுமைகளும் மற்றும் பல்வேறு பணிகளிலிருக்கும் பொதுதள வாசகர்களின் நூறு விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்து, அதிலும் பக்க அளவைக் கருதி முக்கிய பகுதிகளை மட்டும் தொகுத்திருப்பதில், என் விமர்சனமும் பதிவாகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆசிரியர், எதிர்பாராத பரிசாக கருதியதால், இத்தலைப்பிட்டு உள்ளமை, பல புதிய வாசகர்களுக்கும் நூல் வடிவில் தங்கள் எழுத்தை காணும் பேறு 'எதிர்பாராத பரிசாக' விளங்குவது சாலப் பொருத்தம்.
ஒரு நூல் குறித்து பலரின் கருத்துகளை ஒருசேர படிக்கும்போது, நாம் தவறவிட்ட கோணங்களை உணர முடிகிறது. மேலும், பலரின் விருப்பமும் மீண்டும் குழந்தையாக மாறும் மனநிலையையே. பொறுப்புகளையும், பல்வேறு பணிகளையும் நேசித்து செயலாற்றும்போதும் நாமும் குழந்தைகளாக மாறலாம் என்ற நம்பிக்கையைக் தருகிறது இவ்விமர்சனங்களின் தொகுப்பு. நன்றி!
எதிர்பாராத பரிசு : டுஜக் டுஜக் : 100 வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு,
பாரதி புத்தகாலயம், ஜனவரி 2024, 174 பக்கங்கள், ரூ 190/-
பா. கெஜலட்சுமி
சென்னை - 19
Comments
Post a Comment