பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! : உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்!

கஸ்தூரி ரெங்கன் கமிட்டி தயாரித்த தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட்டது. குழந்தைமைப் பருவத்தின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிக்கை வரையறுத்துள்ள சில கோட்பாடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்பதை சாதாரண வாசகன் கூட புரிந்துகொள்ள முடியும். ஆறு வயதுக்குள் குழந்தைகள் 85 விழுக்காடு மூளைவளர்ச்சி பெறுகிறார்கள் (பக்கம் 19) என்று கண்டுபிடித்திருக்கிறது அறிக்கை. இது இயற்கையியல் பரிமாணக் கோட்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.

எந்த அறிவியல் ஞானத்தின் வழியாக இந்த “உண்மை” கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரியக் குழந்தைகள் அந்த இலக்கை எட்டி இருக்க முடியும். அதுவும் கூட முழுமையானது அல்ல. ஏனென்றால் குருகுலக் கல்வி கற்பிக்கப் பட்ட காலத்திலேயே ஒரேவிதமான ஞானத்தைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கான சில கிராமியக் கதைகள் உண்டு. வாழ்வியல் சூழலும் அனுபவமும்தான் மூளைவளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகள். இதை கல்வியாளர் தேனிசுந்தர் இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார்.

அந்த அறிக்கை இன்னொன்றையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. ”வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் வாசிக்கும் சங்கதிகளை மற்ற குழந்தைகள் முன் சொல்லவைப்ப்பதன் மூலம் மூளை வளர்ச்சி மேலும் அதிகரிக்கிறது.” இது சரியான கண்டுபிடிப்புத்தானா என அறியுமுன் அடுத்த சொல்லாடலைப் பிரயோகிக்கிறது அறிக்கை. “மாணவர்கள் அதிக மொழிகளைக் கற்றுக் கொள்வதால் இந்த வாசித்தல் மற்றும் முன்மொழிவுகளைப் பின்னர் கூடுதல் மொழிகளிலும் மேற்கொள்ளலாம்.” (பக்கம் 38). இப்போது புரிகிறதா? பாஜக ஒன்றிய அரசு மொழித்திணிப்பை நடைமுறைப் படுத்துவதற்காகவே பலகோடி ரூபா செலவழித்து இப்படியோர் அறிக்கை தயாரித்து வெளியிட்டிருக்கிறது என்று..




மொழியைத் திணிப்பதன் மூலம் அறிவைத் திணிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் சாரம். “விதையைப் போல் தூவப்படவேண்டிய அறிவு ஆணியைப் போல் அறையப் படுகிறது” என்று கவிஞர் வைரமுத்து பாடியதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் அறிக்கை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சமூக செயல்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப் படவேண்டும். ஆசிரியர்களையே நியமிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது சமூகச் செயல்பாட்டாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டுமாம். அவர் குழந்தைகளின் இடைநிற்றலைக் கண்காணித்து அவர்கள் தொழிற்கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். இதன்மூலம் பள்ளிக் கல்வியும் தொழில் கல்வியும் சமப்படுத்தப் படும். (பக்கம்42)

அதாவது இடைநின்|ற மாணவர்களுக்குத் தொழிற்கல்வி கற்பிப்பதன்மூலம் ஏழை மாணவர்கள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலைத் தொடர்வதற்கான முயற்சியை இந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது. இது ஏழைகளுக்கான கல்வியைக் கேள்விக்கு உட்படுத்தி இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பதை தமிழகக் கல்வியாளர்கள், போதுமான தரவுகளோடு விளக்குகின்றனர். தேனிசுந்தர் அவர்களும் இந்த நூலில் அங்கங்கே கோடிட்டுச் செல்கிறார்.

குழந்தைகளுடனான உரையாடல் மூலம் அவர்களின் உளப்பாங்கையும் வளர்ச்சிப் போக்குகளையும் தனது முந்தைய நூல்கள்வழிப் படம்பிடித்துக் காட்டிய தேனிசுந்தர், அந்த அனுபவங்கள் வழிப்பட்ட வளர்ச்சியாக ””உங்க ஜட்ஜ்மண்ட் ரெம்பத் தப்பு சார்” நூலை வெளியிட்டு ஒரு கல்வியாளராகப் பரிணாமம் அடைந்திருக்கிறார்..

சிந்தனை மற்றும் உழைப்பின் சாரமே மனித வாழ்க்கை. அதன் தொடக்கப் புள்ளியாக இருப்பது குழந்தைப் பருவம். முதல்புள்ளி சரியாக அமைந்தால்தான் வரையப் படும் தொடர் கோடுகளும் புள்ளிகளும் நேர்த்தியானதாக இருக்கும்; இல்லையென்றால் “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்றாகிவிடும்.

நம் கல்வித்திட்டத்தின் போதாமை எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார் சுந்தர். அது ஆசிரியர் நியமனத்தில் இருக்கிறது. கல்வி என்பது அரசு சமூகத்துக்குச் செய்யும் சேவைப் பரிவர்த்தனை.. தொடக்கப் பள்ளியில் ஆசிரிய மாணவ விகிதம் 1-10 என்று இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர் மாணவர்கள்மேல் முழுக் கவனம் செலுத்த முடியும். நடுநிலைப் பள்ளியில் 1-20 என்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1-30 என்றும் இருப்பதுதான் முழுமையான கற்றலுக்கான அடிக்கல். இருப்பதோ குறைந்த எண்னிக்கையிலான ஆசிரியர்களும் நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். இந்தப் போதாமைக்கிடையில் ஆசிரியர்கள் வேறு பணிகளுக்கு மடைமாற்றம் செய்யப் படுவதும் நிகழ்கிறது. இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளால் கல்வி பாதிக்கப் படுவதைத் தரவுகளோடு சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.

ஏராளமான கல்வித்திட்டங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப் படுகின்றன. “எண்ணும் எழுத்தும்,” “வீடுதேடிக் கல்வி” என்று பல திட்டங்கள். அவையெல்லாம் மாணவ மூளையைச் சுயமாகச் சிந்திக்க விடாமல் இயந்திர இயக்கமாக மாற்றி விடுகிறது. கல்விக்கூடத்துக்குள் “எண்ணும் எழுத்தும்,” வீட்டுக்குப் போனதும் “இல்லம் தேடிக் கல்வி” இரவில் வீட்டுப் பாடச் சுமை. மாணவ மனவளர்ச்சியின் மிகப் பெரிய தடைக் கற்களாக இவை அமைகின்றன. இதை மா|ற்றுவது எப்படி என்பதையும் சுந்தர் கோடிட்டுக் காட்டுகிறார். “குழந்தைகள் பள்ளிக்கு வெளியில்தான் அதிகம் கற்கிறார்கள்; (அனுபவக்கல்வி) ஆகவே பள்ளிக்கு ஒன்று வீட்டுக்கு ஒன்று என்று தனித்தனிக் கல்வித் திட்டங்கள் தேவையில்லை; ஆசிரியர்கள், அதிகாரிகள், பெற்றோர் அனைவரும் கூடிப்பேசி யதார்த்தமானதொரு முடிவெடுக்கவேண்டும். அதுதான் முறையானதாகவும் முழுமையானதாகவும் இருக்க முடியும். இல்லையென்றால் பள்ளிக் கூடக் கூண்டுக்குள் குழந்தைப் பறவைகளை அடைத்துவிட்டு, பறவையின் சுதந்திரம் பற்றிச் சிந்திக்காமல் கூண்டை எப்படி அழகுபடுத்துவது என்பறு சிந்திப்பதாகவே அமையும் என்கிறார்.

கற்றல் கற்பித்தலைத் தாண்டி இன்றைய கல்வித்துறை நிலவரம் எந்த மாதிரியாக இருக்கிறது என்பதைப் பல கட்டுரைகள் பதிவு செய்கின்றன. அதாவது அதிகாரவர்க்கப் போக்கு மிகுந்து காணப் படுகிறது. எங்கு அதிகார தொனி ஒலிக்கிறதோ அங்கு கற்பித்தல் இயக்கம் சுணக்கமடைந்து விடும்.

ஆசிரியர்களாக இருந்து அதிகாரிகளாக உயர்வடைகிறவர்கள் ஆசிரியர்களை அடிமை ஆடுகளாகவே பார்க்கின்றனர். கல்வி அதிகாரி நடத்தும் ஒரு கூட்டத்துக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஆசிரியர் சிலமணி நேரம்வரை வெளியில் நிறுத்தப் படுகிறார்; இது பெருத்த உளவியல் சிக்கலையும் மனிதனுக்கு மனிதன் எதிரி என்ற பொறாமைப் போக்கையும் உண்டாக்குகிறது.

அப்படியானதொரு கூட்டத்துக்கு தேனிசுந்தர் ஐந்து நிமிடம் தாமதித்து சென்றிருக்கிறார்; அதிகாரி இவரைக் கண்டுகொள்ளாமல் பேசியபடி இருக்கிறார். அவர் கையசைத்துக் கூப்பிட்டால்தான் போகவேண்டும். அவர் கூப்பிடுவதாக இல்லை என்ற நிலையில் இவராக உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

அதிகாரி பேசிமுடித்துவிட்டு “சுந்தர் சார்; எப்ப வந்தீங்க?” என்றார்.

“இப்பத்தான் சார்” என்கிறார் சுந்தர்.

”ஒங்க வகுப்புல ஒரு பையன் ஒங்க அனுமதியில்லாம உள்ளவந்து ஒக்காந்தா அனுமதிப்பீங்களா?” என அதிகாரி கேட்க,

“ஒரு பையன் லேட்டா வந்தா ஒங்கள மாதிரி பாத்தும் பாக்காத மாதிரி இருக்க மாட்டேன்; ஏன் லேட்டுன்னு கேட்டு உள்ள வரச்சொல்வேன். நீங்கபாட்டுக்கு பாக்காத மாதிரி பேசிக்கிட்டே இருப்பீங்க; நான் நின்னுக்கிட்டே இருக்கணுமா?” என்கிறார் சுந்தர். அதிகாரி வாயடைத்துப் போனார்.

கூட்டம் முடிந்த பிறகு எல்லா ஆசிரியர்களும் சுந்தரைப் பாராட்டுகின்றனர். இது அதிகார வர்க்கத்துக்கு எதிரான சுயமரியாதைக் குரல்; எல்லா இடங்களிலும் இக்குரல் ஒலிக்க வேண்டும் என்கிறார் சுந்தர். அவர் எழுதுகிறார்;- “அதிகாரம் ஆபத்தானது என்றால் அதற்கு எதிரான நமது மௌனம் அதைவிட ஆபத்தானது”

25 கட்டுரைகளும் தமிழகத்தின் கல்விப் புலம் சார்ந்து பேசுகின்றன. ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள் இல்லாத நிலை வரவேண்டும். ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளை ஆசிரியர்களும் அதிகாரிகளும் அகமும் புறமுமாய்ச் சிந்திக்க வேண்டும். எதிர்கால வாழ்வியல் வளர்ச்சியின் நிகழ்கால அஸ்திவாரம் கல்வி என்பதால் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது நூல்.

நடப்புக் காலத்தின் முக்கியமான கல்வி வழிகாட்டி இந்த நூல். சுந்தர் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் பாடநூல் கழகங்களிலும் கல்வி மேம்பாட்டு மையங்களிலும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டால் கல்வித்தளத்தில் மிகப் பெரிய மாறுதல் உண்டாகும். மெல்லுவதும் உண்ணுவதும் மீண்டும் அசைபோடுவதுமான விலங்குகளின் இயக்க நிலையில் இருந்து மனித நிலைக்குக் குழந்தைகள் உயர்வடைவார்கள். ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டும். குறிப்பாக ஆசிரியர்களும் அதிகாரக் கூட்டமும் வாசித்தால் புதிய சிந்தனை பிறக்கும். தேனிசுந்தர் குழந்தைமைப் படைப்பாளியாகவும் கல்விப்புல சிந்தனையாளராகவும் இருக்கிறார்.

உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் (கல்வியியல் கட்டுரைகள்), - தேனிசுந்தர்,  வாசல் பதிப்பகம், பக்கம் 96. விலை 130/

தேனிசீருடையான்.
25-04-2025

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!