திட்டமிடாத வகுப்பறைகள் குறித்து கவிஞர் விஜயராஜ் காந்தி
மாணவர் மைய வகுப்பறை என்பது பல நேரங்களில் திட்டமிடாத ஒரு வகுப்பறை எப்படி இருக்குமோ அதை கண் முன் கொண்டு வந்து சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு வகுப்பறையை நாம் கண்டிருக்கலாம், கண்டும் காணாது சென்றிருக்கலாம், அல்லது காணாமலே விட்டு இருக்கலாம். இங்கு திட்டமிடாத வகுப்பறைகள் எப்படி இருக்கும் என்பதனை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் தேனி சுந்தர் அவர்கள். தான் முதலில் பணியாற்றிய பள்ளிகளில் உள்ளவற்றை தவிர்த்து தற்பொழுது பணியாற்றும் பள்ளியில் எங்கனம் திட்டமிடாத வகுப்பறைகள் இருந்தன என்பதனை தேனி சுந்தர் எழுத்தில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.
கலைப் பண்பாட்டுத் திருவிழா தொடக்கப் பள்ளியில் என்ன மாறலை உண்டு பண்ணும் என்ற கேள்வியை நடத்துவதற்கு முன் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்வது உண்டு. அந்த கேள்விகளுக்கு பதிலாக சேட்டைகள் செய்யும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு நல்வாய்ப்பாக கலைப் பண்பாட்டுத் திருவிழாவை பயன்படுத்தினர். இதனை திட்டமிடாத வகுப்பரையில் தான் காண முடியும். மாறுவேட போட்டி, பல குரல் போட்டி, காகித கூழ், களிமண் போன்றவற்றில் பொருட்களை செய்து கொண்டு வரும் போட்டி போன்ற பல போட்டிகளில் பல திறமைமிக்க மாணவர்களை அடையாளம் காண முடிந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்கள் நாம் படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக கருதப்பட்டவர்கள்.
விசேஷ வீட்டில் பணத்தை தவறவிட்டவர், பணத்தை சம்பந்தப்பட்ட வருடம் எடுத்து ஒப்படைத்த மாணவன் படிப்பில் கொஞ்சம் பின் தங்கியவன். காரணம் வீட்டுச் சூழல். அந்த மாணவனை அழைத்து பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது அந்த விழா முடிந்த பின்பு அந்த மாணவனின் தந்தை ஆசிரியரிடம் பேசிய வார்த்தைகள் உருக்கம்.
இரண்டே இரண்டு குழந்தைகள் மட்டும் பள்ளியில். அவர்களிடம் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டு. ஆசிரியரும் தான் விளையாடுகிறார். அந்த விளையாட்டில் "ஏய் பொய் சொல்லாத. பாட்டி ஆளுக்கு பத்து ரூபா குடுத்துச்சுல்ல. நீ கடையில வாங்கி தின்னய்ல..." இது போன்ற பேச்சு வழக்கில் பேசும் வார்த்தைகளை அப்படியே எழுத்து வடிவிலும் படிப்பது மிகவும் அருமையாக உள்ளது. இந்த விளையாட்டில் நிதன்யா பொய் சொல்லி சாரிடம் காசு வாங்கி விட வேண்டும் என்று எண்ணுகிறாள். யோகா உண்மையைச் சொல்லுகிறாள். கடைசியில் யோகா பணிந்து போக வேண்டியுள்ளது. முடிவில் ஆசிரியர் இருவருக்கும் ஆளுக்கு 10 ரூபா கொடுத்து பள்ளிவாசலில் இருக்கும் கடைக்கு அனுப்புகிறார். நிதன்யா ஆசிரியரை ஏமாற்றி விட்டாள். வியூகம் வெற்றி பெற்று விட்டது என்பது நிதன்யாவுக்கு. ஆனால் நிதன்யா பொய் சொன்னால் என்பது ஆசிரியருக்குத் தெரியாதா என்ன?
டிக் டிக் யாரது என்ற விளையாட்டில் நிறங்களை கூறும் பொழுது அந்தந்த நிறத்தை தொட வேண்டும். ஆசிரியர் பட்டு வரும் பொழுது மாணவர்கள் சரியாக அந்த நிறத்தை தொடுகிறார்கள். தொடாவிட்டால் அவர் அவுட் என்று கருதப்படுவார். ஒரு சமயம் பச்சை என்ற நிறத்தை கூறுகிறார். மாணவர்கள் அங்கங்கே பார்த்துவிட்டு "ஏய் திருடன் கிட்டே இருக்குப்பா" என்று ஆசிரியரின் சட்டையைச் சொல்கிறார்கள். ஆசிரியருக்கு திருடன் என்று அவரைச் சொல்லும்போது கூச்சம் வந்ததாக கூறுகிறார். "குழந்தைகளோடு பழகும் போது நாமும் குழந்தைகளாக "மாற" வேண்டும். முடியாதவர்கள், முயற்சி செய்யாதவர்கள் மூக்கு உடைபடுவது நிச்சயம்" என்று இந்த பகுதி முடிகிறது. திருடன் என்று கூறும் பொழுது உண்டான கூச்சம் தன்னை குழந்தையாக கருதிக் கொண்ட பொழுது ஆசிரியருக்கும் இல்லாமல் போனது நமக்கும் தெரிய வருகிறது.
மெதுவாக கற்கும் குழந்தைகள் ஆசிரியர் நடத்தும் பாடத்தை உள்வாங்கி கற்பதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதற்காக அவர்களுக்கு படிக்கத் தெரியாது என்ற ஒரு எண்ணம் வந்து விடக்கூடாது. தானியா, சிவனேசு இருவரும் மெதுவாக கற்கும் குழந்தைகள் தான். இதில் தானியா மெல்ல மெல்ல அடுத்தடுத்த படிகளுக்குச் செல்கிறாள். ஆனால் சிவனேசிடம் முன்னேற்றம் என்பது இல்லை. ஒரு கட்டத்தில் ஆசிரியர் கற்பித்தலில் விரக்தி அடைகிறார். இவ்விடத்தில் தானியா "சார் அவனுக்கு நான் சொல்லித் தருகிறேன்" என்று ஆசிரியரிடம் கேட்கிறாள். சிவனேசு என்பவனும் நல்லபடியாக படிக்கத் தொடங்குகிறான். இங்கு ஆசிரியர் தன்னுடைய முயற்சியில் தோற்று விட்டாரா? தானியா என்ற மாணவி வென்று விட்டாளா?
பேயாக வரும் பேய் மீண்டும் செத்துப் போகுமா? கால அட்டவணை அடிப்படையில் பாடம் நடத்துவது மட்டும் சரியாக அமையுமா?இதுபோன்ற பல கேள்விகளை நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றது திட்டமிடாத வகுப்பறைகள்.
ந.லதா, இயக்குனர், அரசு தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் ச.மாடசாமி, கல்விச் சிந்தனையாளர், ஜி ராஜேந்திரன், மாநில பயிற்சியாளர் ஆகியோரின் கருத்துரையோடு வந்திருக்கும் திட்டமிடாத வகுப்பறைகள், தேனி சுந்தர் அவர்களுக்கு மகுடம் சூட்டியுள்ளது.
பாரதி புத்தகாலயம்
ரூபாய் 50/-
கவிஞர் பெ.விஜயராஜ் காந்தி

Comments
Post a Comment