நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து ஐயா குழ.கதிரேசன் அவர்கள்
அன்பு நண்பருக்கு வணக்கம். தாங்கள் அன்புடன் அனுப்பிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன நூல் கிடைத்தது, படித்து மகிழ்ந்தேன்.
தாங்கள் குழந்தைகளோடு குழந்தையாகி, அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து, அவர்கள் மழலை மொழியில் உதிர்க்கும் அற்புதமான, கள்ளங்கபடற்ற கவிதை வரிகளை, உரையாடலை அப்படியே படம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, குழந்தைகளின் உரையாடலுக்குச் சிறந்த வடிவம் தந்துள்ளது பாராட்டுக்குரியது.
குழந்தைகளுக்காகவே, குழந்தை இலக்கியத்துக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விட்டீர்கள் என்பதே உண்மை. புதுப்புது சிந்தனைகள், புதுப்புது வடிவங்கள் தங்களை அடையாளப் படுத்துகின்றன.
தங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறன் அபாரம். ஏ.டி.எம்.மில் யாருமில்லாத நேரத்தில் அவசரமாகப் பணம் எடுத்தும் வரும்போது “என்னப்பா, களவாண்ட்டு வந்து விட்டாயா?” என்று கேட்ட பொழுது, அதை எங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்து வீட்டில் எல்லாருமே சிரித்து விட்டோம். தாங்களும் அதன் இயல்பான, நகைச்சுவையான கேள்வியை, மிக அழகாக அனைவரும் உணரும் படி உரையாடலைப் படம் பிடித்துள்ளது அதைவிடச் சிறப்பாகும். குழந்தைகளின் கேள்விக்குப் பொறுமையாகப் பதில் சொல்லியுள்ளது, சில இடங்களில் உடன் பதில் சொல்ல முடியாமல் தவித்தது, சமாளித்தது எல்லாம் பாராட்டுக்குரியது.
தொடர்ந்து எழுதுங்கள்; எழுத எழுத எழுத்துக்கு வலிமை கூடும்..!
-
குழ.கதிரேசன்
பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்
ஐந்திணை பதிப்பக நிறுவனர்

Comments
Post a Comment